தலைப்புச் செய்திகள்

நான் நல்ல உடல் நிலையுடன் இருக்கிறேன்; சர்வ கட்சி அரசாங்கம் அமைந்தாலும் அதில் நான்தான் பிரதமர்: மஹிந்த தெரிவிப்பு

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உடல்நிலை சரியில்லாமல் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வெளியான வதந்திகளை, அவர் மறுத்துள்ளார்.

“இது முழுப் பொய், நான் ஒரு நோயாளியைப் பார்க்கக் கூட மருத்துவமனைக்குச் செல்லவில்லை, நான் நல்ல உடல் நிலையுடன் இருக்கிறேன். இன்றும் இந்த இளைஞர்களுடன் ஓட முடியும்” என்று நெத் எப்.எம் வானொலிக்கு அவர் தெரிவித்தார்.

புதிய பிரதமரின் கீழ் சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நிராகரித்துள்ளதோடு, பல்வேறு கொள்கைகள் காரணமாக அது இயங்காது எனக் கூறினார்.

“எந்தவொரு பிரதமருடனோ அல்லது ரணில் விக்கிரமசிங்கவுடனோ கூட வேலை செய்ய யாரும் விரும்ப மாட்டார்கள். சர்வகட்சி அரசாங்கம் அமைந்தாலும் – அது எனது தலைமையின் கீழ் தான் இருக்கும், அதிலும் நான்தான் பிரதமராக இருப்போன்” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

மஹிந்த ராஜபக்ஷ உடல் நலக் குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அவர் மரணமடைந்து விட்டதாகவும் நேற்றிரவு சமூக ஊடகங்களில் செய்திகள் பரவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.