தலைப்புச் செய்திகள்

மு.கா.விலிருந்து ஹாபிஸ் நசீர் நீக்கம்; ஏனைய மூன்று எம்.பிகளும் இடைநிறுத்தப் பட்டுள்ளதோடு, ஒழுக்காற்று விசாரணை நடத்தவும் தீர்மானம்

– மரைக்கார் –

மைச்சர் ஹாபிஸ் நாசீர் அஹமட் – முஸ்லிம் காங்கிரஸிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என, அந்தக் கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். அந்தக் கட்சியின் உயர்பீடக் கூட்டம் இன்று (22) நடைபெற்ற போது இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் தவிர்ந்த ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் நால்வரும் கட்சியின் தீர்மானத்தை மீறி அரசியலமைப்புக்கான 20ஆவது திருத்தம் மற்றும் வரவு – செலவுத் திட்டம் உள்ளிட்டவற்றுக்கு ஆதரவாக நாடாளுமன்றில் வாக்களித்திருந்தனர்.

இதனையடுத்து கட்சி ரீதியாக அவர்கள் வகித்த பதவிகள் பறிக்கப்பட்டதோடு, அவர்களிடம் இது தொடர்பில் விளக்களையும் கட்சி கோரியிருந்தது.

இந்த நிலையில், முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான ஹாபிஸ் நசீர் அஹமட், அமைச்சரவை அந்தஷ்துள்ள அமைச்சராக பதவியேற்றார். இதனையடுத்து, ஹாபிஸ் நசீர் தொடர்பில் கடுமையாகக் கருக்துக்களை வெளியிட்ட மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம்; “அமைச்சர் பதவி ஏற்றதன் மூலம் நசீர் அஹமட் அவமானச் சின்னமாக மாறிப் போய் விட்டார்” என்றும் கூறினார்.

மேலும் நசீர் அஹமட் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் வகையில் இன்று கட்சியின் உயர்பீடம் கூட்டம் நடைபெறும் எனவும் ஹக்கீம் தெரிவித்திருந்தார்.

அதற்கிணங்க இன்று மு.காங்கிரஸ் உயர்பீடக் கூட்டம், கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம் தலைமையில் தாருஸ்ஸலாமில் கூடியது.

இன்போது நசீர் அஹமட்டுக்கு மு.காங்கிரஸ் விளக்கம் கோரி அனுப்பிய கடிதத்துக்கு பதிலாக, அவர் அனுப்பி வைத்த தன்னிலை விளக்கக் கடிதம் தொடர்பில் திருப்தியுறாத உயர்பீடமானது, ஹாபிஸ் நசீர கட்சியிலிருந்து நீக்குவதற்குத் தீர்மானித்தது.

இதேவேளை ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம். ஹரீஸ், பைசல் காசிம் மற்றும் எம்.எஸ். தௌபீக் ஆகியோரை கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்குவதோடு, ஓய்வு பெற்ற நீதிபதியொருவரைக் கொண்டு அவர்களை விசாரிப்பதெனவும் இன்றைய உயர்பீடக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இருந்தபோதிலும், இன்றைய உயர்பீடக் கூட்டத்துக்கு முஸ்லிம் காங்கிரஸின் 04 நாடாளுமன்ற உறுப்பினர்களும் வருகை தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய கட்டுரை: யார் அவமானச் சின்னம்?: ஹக்கீமின் டீல் குறித்து, நசீர் சொல்லும் கதை என்ன?