கல் கிடைக்கும் வரையிலான சமாதானம்: தலைவரின் ‘காதல்’ கடிதத்தை நினைவுபடுத்திய பைசலின் உரை

🕔 April 22, 2022

– முகம்மது தம்பி மரைக்கார் –

ரசாங்கத்துக்கு ஆதரவளித்து வந்த முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக்; இனி தனது கட்சிக்குக் கட்டுப்பட்டு நடக்கப் போவதாகக் கூறியிருக்கிறார். நேற்று முன்தினம் நாடாளுமன்றில் உரையாற்றிய பைசல் காசிம்; தன்னோடு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் எம்.பி இஷாக் ரஹ்மான் மற்றும் எம்.எஸ். தௌபீக் ஆகியோர் – அரசாங்கத்துக்கு இதுவரை வழங்கி வந்த ஆதரவிலிருந்து விலகிக் கொள்வதாகத் தெரிவித்திக்கின்றார்.

ஆனால், முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ், அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கும் நிலைப்பாட்டில்தான் உள்ளார் போல் தெரிகிறது. தனது ஆதரவை விலக்கிக் கொண்டதாக அவர் எங்கும் கூறவில்லை.

இந்தக் கூத்துக்களையெல்லாம பார்க்கும் போது; ‘ராஜதந்திரம் என்பது, கற்கள் கிடைக்கும் வரை, நாயுடன் சமாதானம் பேசிக் கொண்டிருப்பது’ என, யாரோ ஒரு புண்ணியவான் சொல்லி விட்டுப் போனது இங்கு நினைவுக்கு வருகிறது.

கடந்த பொதுத் தேர்தல் காலத்தில் கோட்டாபயவுக்கு ஒவ்வொரு பிரசார மேடைகளிலும் திட்டி, மக்களைச் சூடேற்றிப் பெற்றுக் கொண்ட வாக்குகளால் நாடாளுமன்றம் சென்ற இவர்கள், அந்த ‘ஈரம்’ காய்வதற்குள் – கோட்டா அரசாங்கத்துக்கு ‘குடை பிடிக்க’த் தொடங்கியமை, அவர்களுக்கு வாக்களித்த மக்களுக்கு கடுங் கோபத்தை ஏற்படுத்தியது. ஆனால், மக்களின் அந்த உணர்வுகளை இவர்கள் கணக்கில் எடுக்கவில்லை. ராஜபக்ஷ அரசாங்கத்துக்கு தமது கட்சிகளின் தீர்மானங்களை மீறி ஆதரவு வழங்கியமையினை மேற்படியார்கள் தொடர்ந்தும் நியாயப்படுத்தி வந்தனர்.

இந்த நிலையில் ராஜபக்ஷவினருக்கும், அவர்களின் அரசாங்கத்துக்கும் எதிரான மக்கள் போராட்டம் தீவிரமடைந்து வரும் தற்போதைய காலகட்டத்தில், இந்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவசர அவசரமாக அரசாங்கத்துக்கான தமது ஆதரவை விலக்கிக் கொள்வதாக அறிவிப்பதானது, மக்கள் மீது கொண்ட கருணையோ, காதலோ அல்ல என்பதைப் புரிந்து கொள்வதற்கு, அரசியல் ஞானிகளாக மக்கள் இருக்க வேண்டிய அவசியங்கள் இல்லை. மக்களின் கோபம் தமது பக்கமும் திரும்பினால் ‘கதை கந்தலாகி விடும்’என்கிற பயத்தினாலேயே, இவர்கள் ‘ராஜதந்திரம்’ என நினைத்து – இவ்வாறு செய்கின்றார்கள்.

சிலவேளை, மக்கள் போராட்டம் முடிவுக்கு வந்து, தற்போதைய ஆட்சியாளர்களின் ‘கை ஓங்கும்’ நிலையொன்று வந்தால், இவர்கள் மீண்டும் போய் ‘அரசாங்கத்துடன் ஒட்டிக் கொள்ள மாட்டார்கள்’ என்பதற்கும் எந்தவித உத்தரவாதங்களும் இல்லை.

வாசகர்களே, 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர், மஹிந்த ராஜபக்ஷவுக்கு – தான் வழங்கி வந்த ஆதரவிலிருந்து மு.காங்கிரஸ் தலைவர் விலகிய நிலையில், மஹிந்தவுக்கு ஒரு ‘காதல் கடிதம்’ எழுதியிருந்தார் – உங்களுக்கு நினைவிருக்கிறதா?

மஹிந்த ராஜபக்ஷவுக்கு நன்றி தெரிவித்து மு.கா தலைவர் ரஊப் ஹக்கீம் எழுதியிய அந்தக் கடிதத்தில் – திகட்டுமளவுக்கு அன்பைக் கொட்டியிருந்தார். மைத்திரிக்கு ஆதரவளிக்க முஸ்லிம் மக்கள் தீர்மானித்து விட்டார்கள் என்பதால், தானும் அந்தப் பக்கமாக செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது என்று, அந்தக் கடிதத்தில் ரஊப் ஹக்கீம் தனது தீர்மானத்துக்கு நியாயம் கற்பித்திருந்தார்.

நேற்று முன்தினம் அரசாங்கத்துக்கான ஆதரவிலிருந்து விலகுவதாக நாடாளுமன்றில் கூறிய பைசல் காசிமுடைய உரையைப் பார்த்தபோது, அவரின் கட்சித் தலைவர் ரஊப் ஹக்கீம் – மஹிந்த ராஜபக்ஷவுக்கு எழுதிய மேற்சொன்ன ‘காதல் கடிதம்’தான் நினைவுக்கு வந்தது.

அரசாங்கத்துக்கு ஆதரவளிப்பதிலிருந்து விலகிக் கொள்வதாக பைசல் காசிம் கூறியபோதும், அவருக்கு உதவி செய்த அமைச்சர்களுக்கு நன்றி கூறி, தனது அன்’பூ’களை சபையில் சொரிய அவர் மறக்கவில்லை.

திரும்பவும் ஒருநாள் – அரசாங்கத்துடன் மீண்டும் கைகோர்க்கும் சந்தர்பமொன்று வந்து விட்டால், ஆட்சியாளர்கள் மனதில் தன்மைப் பற்றிய எந்தக் கசப்புணர்வும் இல்லாத மாதிரி பார்த்துக் கொள்ளும் ‘சாணக்கியம்’ பைசல் காசிமுடைய அந்தப் பேச்சில் தெரிந்தது.

தாங்கள் ஆடுகின்ற இந்தக் கூத்துக்களையெல்லாம் மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள் என்று அவர்களுக்குத் தெரியாமலில்லை.

அப்படியென்றால் என்ன தைரியத்தில் இவர்கள் இந்த ஆட்டம் போடுகிறார்கள் என்கிற கேள்வி எழுகிறதல்லவா?

’10 கோடி இருந்தால் அடுத்த தேர்தலிலும் பார்த்துக் கொள்ளலாம்’ என்று, இவர்கள் நினைக்கிறார்களா இல்லையா என்பதை, அவர்களின் மனசுகளுக்குள் புகுந்தா நாம் பார்க்க முடியும்?

தொடர்பான செய்தி: ஹரீஸ், பைசல் காசிம் தலா 10 கோடி ரூபா செலவு செய்தே, கடந்த தேர்தலில் வென்றனர்: மு.கா. தலைவர் முன்பாக, முன்னாள் எம்.பி மன்சூர் குற்றச்சாட்டு

Comments

புதிது பேஸ்புக் பக்கம்