
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிக்கப் போவதில்லை என முன்னாள் அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார மற்றும் விமல் வீரவங்ச உள்ளிட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்னெடுக்க வேண்டாம் என, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்திக்கு தாங்கள் ஆலோசனை வழங்கியதாக நாணயக்கார டெய்லி மிரருக்கு தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவது இந்த நேரத்தில் பொருத்தமானதாக இருக்காது என, அவர்கள் கருதுவதாகவும் அவர் கூறியுள்ளார். மாறாக, ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைக்கும் வகையில் 21ஆவது திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் முன்வைக்க வலியுறுத்துவோம் என வாசுதேவ குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே ஜனாதிபதியுடனும் எதிர்க்கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி பிரேரணைகளை முன்வைத்துள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் தெரிவித்தார்.
தேசிய நிறைவேற்று சபையை ஸ்தாபித்தல், கடன் கால அவகாசம் கோருதல், எந்தவொரு சலுகைகளையும் பெறாத அமைச்சரவையை அமைத்தல் மற்றும் 21வது திருத்தத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தல் ஆகியன – முன்மொழிவுகளில் உள்ளடங்குவதாகவும் அவர் கூறியுள்ளார்.



