
– பாறுக் ஷிஹான் –
மோட்டார் சைக்கிளில் 02 கிலோ கேரளா கஞ்சா கடத்திய குற்றச்சாட்டில் இரண்டு சந்தேக நபர்களை பெரியநீலாவணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மருதமுனை கடற்கரைப்பகுதியில் நேற்று சனிக்கிழமை (9) மாலை காத்தான்குடி பகுதிக்கு 02 கிலோகிராம் கேரள கஞ்சா கடத்தப்படவுள்ளதாக, களுவாஞ்சிக்குடி விஷேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த ரகசியத் தகவலுக்கமைய, பொலிஸாருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றி வளைப்பின் போதே, இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதன் போது சந்தேக நபர்கள் பயணம் செய்த மோட்டார் சைக்கிள் உட்பட 13500 ரூபா பணமும் கைப்பற்றப்பட்டது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் சம்மாந்துறை இஸ்மாயில்புரம் வளாத்தப்பிட்டி எனும் முகவரியைச் சேர்ந்த 40 வயதுடையவரும், பீச் ரோட் பெரிய நீலாவணை – மருதமுனைப் பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயதுடைய நபருமாவர்.
பெரிய நீலாவணை பொலிஸார் சந்தேக நபர்களிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



