தலைப்புச் செய்திகள்

அலி சப்ரிதான் நிதியமைச்சர்: நாடாளுமன்றில் ராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவிப்பு

நிதி அமைச்சராக அலி சப்ரி தொடர்ந்தும் செயற்படுவார் என ராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று (08) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

அலி சப்ரியின் ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏற்காததால், அவர் தொடர்ந்து அமைச்சர் பதவியில் நீடிக்கிறார் என அவர் கூறியுள்ளார்.

பொருளாதார நெருக்கடி தொடர்பில் அரசாங்கத்துக்கு எதிரான மக்கள் எதிர்ப்புக்கு மத்தியில் திங்கட்கிழமை (04) ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட நான்கு பேர் கொண்ட தற்காலிக அமைச்சரவையில் அலி சப்ரியும் இணைத்துக் கொள்ளப்பட்டார்.

இருந்தபோதும், மறுநாள் (05) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அனுப்பிய கடிதத்தில், நிதியமைச்சர் பதவியில் இருந்து விலகுவதற்கான தீர்மானத்தை அமைச்சர் சப்ரி தெரிவித்தார்.

இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி தனது தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்ய முன்வந்துள்ளார் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, நேற்று (07) வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் 26 அமைச்சர்கள் தமது அமைச்சுப் பதவிகளை ராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், நிதியமைச்சர் பதவியில் இருந்து அலி சப்ரி ராஜினாமா செய்தமை, குறித்த வர்த்தமானி அறிவித்தலில் உள்ளடக்கப்படவில்லை.