சமூக ஊடகத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டவருக்கு விளக்க மறியல்

🕔 April 7, 2022

பொலிஸ் மற்றும் ராணுவத்தினருக்கு எதிராக சமூக ஊடகத்தில் வன்முறைப் பதிவொன்றை வெளியிட்ட நபர் ஒருவர் நாகொட – தலாவ பிரதேசத்தில் நேற்று (06) கைது செய்யப்பட்டுள்ளார்.

‘பொலிஸ் மற்றும் ராணுவத்தினரை அடித்துக் கொல்ல வேண்டும்’ என்று குறித்த நபர் சமூக ஊடகத்தில் பதிவு வெளியிட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பதிவு தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட நாகொட பொலிஸார், அதனை வெளியிட்ட நபரை நேற்று பிற்பகல் கைது செய்துள்ளனர். சந்தேகநபர் நாகொட – தலாவ பகுதியைச் சேர்ந்த 36 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த நபர் கடந்த 06 மாதங்களுக்கும் மேலாக போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகி மனநோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக மேலதிக விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த நபரின் பெற்றோர்கள் பல தடவைகள் கராப்பிட்டிய மற்றும் முல்லேரியா வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அவரை அனுமதித்த போதிலும், சிகிச்சை முடிவதற்குள் அவர் தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

பத்தேகம நீதவான் நீதிமன்றில் சந்தேக நபர் நேற்று ஆஜர்படுத்தப்பட்ட போது, எதிர்வரும் 18ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்