
– அஹமட் –
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியானது, ஒரு சாராரின் தவறு எனக் கூற முடியாது என்று, நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். முஷாரப் இன்று (05) சபையில் தெரிவித்தார்.
நாடாளுமன்றில் தான் சுயாதீனமாக செயற்படப் போவதாக அவர் இதன்போது கூறினார்.
தற்போது ஏற்பட்டுள்ளது – இந்த நாட்டின் 73 வருட காலப் பிரச்சினை எனவும் அவர் குறிப்பிட்டார்.
“இன்று பாதையில் இறங்கியிருப்பவர்கள் பசியோடு உள்ளவர்கள், அவர்கள் எந்தக் கட்சியையும் முன்னிறுத்துகின்றவர்கள் அல்லர். புதியதொரு அரசியல் கலாசாரத்தை உருவாக்குவதற்காக போராடுகின்றவர்கள். அவர்களுக்கு எனது பாராட்டுக்கள்” என்றார்.
இதன்போது உரையாற்றிக் கொண்டிருந்த முஷாரப் எம்.பியிடம் 05 ஆயிரம் ரூபா பணத்தாளை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரா. சாணக்கியன் சிரித்துக் கொண்டு நீட்டினார்.
இதனால் கலவரமடைந்த முஷாரப் எம்.பி; “இந்தப் பணத்தை டயஸ்போராகளிடம் கொடுங்கள்” என்றார்.
மேலும், “இந்த நாட்டில் வெளிநாட்டு சக்திகளின் ஊடுவல் உள்ளது” எனவும் தெரிவித்தார்.
இவர் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில்; எரிபொருளுக்கான தட்டுப்பாடு கரணமாக மக்கள் ஆர்ப்பாட்டத்தில் குதித்தமையை இழிவுபடுத்திப் பேசியிருந்ததோடு, உலகில் இவ்வாறு எங்கும் நடந்ததில்லை எனவும் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.



