முதலையினால் இழுத்துச் செல்லப்பட்ட மகனை போராடி மீட்ட தாய்; ‘வீரப் பெண்’ என, வேறொரு நபருக்கு விருது வழங்கப்பட்டுள்ளதாக புகார்: நடந்தது என்ன?

🕔 March 31, 2022

– மப்றூக் –

முதலையொன்றிடம் சிக்கிய தனது மகனை, உயிரைப் பணயம் வைத்துப் போராடி மீட்டெடுத்த தாயொருவரின் தைரியமிக்க செயலை இருட்டடிப்புச் செய்து விட்டு, அந்த வீரச் செயலைச் செய்ததாக வேறொரு நபரை அடையாளப்படுத்தி, அவருக்கு அரச நிறுவனமொன்று விருது வழங்கியுள்ளதாக புகார் தெரிவிக்கப்படுகிறது.

அம்பாறை மாவட்டம் – நிந்தவூர் பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஐ.எல். ஜமீலா. இவர் – சேதனப் பசளை தயாரிப்பதற்காக அருகிலுள்ள மாவடிப்பள்ளி ஆற்றில் நீர்த் தாவரங்களைச் சேகரித்துக் கொண்டிருந்த வேளை, அவருடன் சென்றிருந்த 13 வயதுடைய அவரின் மகன் பாஹிம் என்பவரை முதலையொன்று திடீரென இழுத்துக் கொண்டு, ஆற்றினுள் மறைந்துள்ளது. இதன்போது உடனடியாக நீருக்குள் இறங்கிய ஜமீலா, முதலையுடன் மிக நீண்ட நேரம் போராடி தனது மகனை மீட்டெடுத்தார். இச்சம்பவம் கடந்த செப்டம்பர் மாதம் 18ஆம் திகதி நடந்தது.

இதன்போது ஜமீலாவின் மகன் பாஹிம் கடுமையான முதலைக் கடிக்கு ஆளானதோடு, அவரின் இடது கால் எலும்பும் முறிந்தது. இதனையடுத்து சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர், 18 நாட்கள் சிகிச்சை பெற்ற பின்னர் வீடு திரும்பியிருந்தார்.

இந்த நிலையில், ஜமீலாவின் மகனை முதலையிடமிருந்து காப்பாற்றிய ‘வீரப் பெண்’ எனக் கூறி, உம்மு சலாமா எனும் பெண்ணொருவருக்கு நிந்தவூர் பிரதேச செயலகம், மகளிர் தினத்தையொட்டி விருது வழங்கி கௌரவித்துள்ளது. ஆனால், தனது மகனை முதலை இழுத்துக் கொண்டு போன போது, தனக்கு யாரும் உதவி செய்யவில்லை என்றும், முதலையுடன் போராடி தனது மகனை தனியாகவே தான் மீட்டதாகவும் ஜமீலா கூறுகின்றார்.

பிரசவ வலியை உணர்ந்தேன்

“சம்பவ தினம் ஒரு சனிக்கிழமை. இயற்கை பசளை தயாரிப்பதற்கான நீர்த் தாவரத்தை சேகரிப்பதற்காக மாவடிப்பள்ளி ஆற்றுக்குச் சென்றிருந்தேன். என்னுடன் உம்மு சலாமாவும் வந்திருந்தார். அன்று பாடசாலை இல்லை என்பதால் எனது மகனும் கூடவே வந்தார்”.

“நீர்த் தாவரங்களை சேகரித்து விட்டு, ஆற்றங்கரையில் வளர்ந்திருந்த கீரையை பறித்துக் கொண்டிருந்தேன். அப்போதுதான் அந்த சம்பவம் நடந்தது. கண்மூடித் திறக்கும் நேரத்துக்குள் கரையில் நின்று கொண்டிருந்த எனது மகனை முதலை இழுத்துக்கொண்டு போனது. அதனை நான் காணவில்லை. சேற்றுக்குள் முதலை மறைந்து போனது. அப்போது உம்மு சலாமா எனும் அந்தப் பெண்தான்; ‘உனது பிள்ளையை முதலை இழுத்துக் கொண்டு போகிறது, இனிக் கிடைக்காது, ஆற்றுக்குள் இறங்காமல் வா போவோம்’ என்று சத்தமிட்டார். நான் உடனே நீருக்குள் பாய்ந்தேன். ஆனால் அந்தப் பெண்ணோ அருகிலிருந்த வீதியை நோக்கி நடந்தார். ஆற்றுக்குள் எனது பிள்ளையை தேடினேன், சேற்றுக்குள் கைகளை விட்டுத் துழாவிப் பார்த்தேன். அப்போது எனது பிள்ளையின் முடி, எனது கையில் பட்டது. முடியைப் பிடித்து இழுத்தேன். மகன் கைகளை உயத்தினார். அவரின் தோள்களைப் பிடித்துக் கொண்டேன். ஆனால், மகனின் காலினை முதலை கவ்விக் கொண்டிருந்தது”.

“நான் மகனை வெளியில் இழுத்தெடுக்க முயற்சித்த போது, முதலையும் மறு பக்கமான இழுத்துக் கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் முதலை மீண்டும் சேற்றுக்குள் எனது மகனைக் கொண்டு சென்றது. இதனைக் கண்ட உம்மு சலாமா என்கிற அந்தப் பெண் – அங்கு வந்து; ‘உனது பிள்ளையை முதலை விட மாட்டாது. நீயும் அங்கு நின்றால் உன்னையும் இழுத்துக் கொண்டு போய்விடும். மற்றைய பிள்ளைகளுக்காவது நீ உயிருடன் இருக்க வேண்டும். கரைக்கு வா” என்று சத்தமிட்டார்.

“ஆனால் எனது உயிர் போனாலும் பிள்ளையை இழக்கக் கூடாது என்கிற முடிவில் இருந்தேன். எனது போராட்டத்தின் போது, ஒரு கட்டத்தில் வெளியே தெரிந்த முதலையின் தலையில் எனது கையால் ஓங்கிக் குத்தினேன். முதலையினுடைய பல்லில் எனது கை பட்டிருக்க வேண்டும்; எனது கையில் பெரிய காயமொன்று ஏற்பட்டு இரத்தம் கொட்டத் தொடங்கியது. ஆனால் மகனை மீட்கும் முயற்சியை நான் விடவில்லை. தொடர்ந்தும் முதலையின் தலையில் ஓங்கிக் குத்தினேன். திடீரென முதலை – வாயைத் திறந்தவாறு தலைகீழாகப் புரண்டது. உடனடியாக எனது மகனைத் தூக்கியெடுத்துக் கொண்டு கரைக்கு வந்தேன்” என்று, அந்த திகில் அனுபவத்தை நம்முடன் ஜமீலா பகிர்ந்து கொண்டார்.

“எனக்கு 06 பிள்ளைகள் உள்ளனர். பிரசவ வலிகளை நான் அனுபவித்துள்ளேன். எனது மகனை அந்த முதலையிடம் போராடி மீட்டுக் கொண்டு கரைக்கு வந்தபோது, விவரிக்க முடியாத சோர்வாக இருந்தது. பிரசவ வலியைப் போல், பெரும் வேதனையை அப்போது நான் உணர்ந்தேன்” என்றார் ஜமீலா.

“இந்த சம்பவத்தின் போது எனது மகன் மயக்கமடையாமல் நினைவுடன்தான் இருந்தார். அவரைக் கரைக்குக் கொண்டு வந்த போது, அவசர அம்புலன்ஸ் வாகனத்தை உதவிக்கு அழைக்கும் இலக்கத்தை எனக்குக் கூறினார். அவரின் காலில் பாரிய காயங்கள் இருந்தன. அங்கு நின்றிருந்த உம்மு சலாமா அவருடைய கைப்பேசி மூலம் தொடர்புகொண்டு ஆட்டோ (முச்சக்கர வண்டி) ஒன்றை அழைப்பித்தார். ஒரு வழியாக மகனை சம்மாந்துறை வைத்தியசாலைக்குக் கொண்டு வந்தேன். உம்மு சலாமாவும் என்னுடன் வந்தார். அதன் பிறகு அவரை நான் காணவில்லை. எனது மகனை அவர் ஒரு தடவை கூட வந்து பார்க்வில்லை. ஆனால், அவர் எனது மகனை முதலையிடமிருந்து போராடி காப்பாற்றியதாகக் கூறி, பிரதேச செயலகத்தினால் விருது வழங்கப்பட்டுள்ளது. இது எனக்கு அதிர்ச்சியாக உள்ளது”.

“வழங்கப்பட்டுள்ள விருது பெரியதா? சிறியதா என்பது பற்றி இங்கு பிரச்சினையில்லை. எனது மகனை காப்பாற்றுவதற்கு ஒரு சிறு உதவியைக் கூடச் செய்யாத ஒருவருக்கு, எனது மகனைக் காப்பாற்றியதாக் கூறி, ‘வீரப் பெண்’ எனப் புகழ்ந்து, விருது வழங்கியிருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த விருதினை அவருக்கு வழங்குவதற்கான தீர்மானத்தை எடுத்த கிராம அபிவிருத்தி உத்தியோகத்தரைச் சந்தித்து நடந்தவற்றைச் சொன்னேன். இந்த விருதை வழங்கியதன் மூலம், ஓர் உண்மையைச் சாகடித்து, பொய்யை வாழ வைத்துள்ளீர்கள் என அவரிடம் கூறினேன்” என, ஜமீலா மேலும் தெரிவித்தார்.

உண்மையை சொன்னதற்காக மிரட்டப்பட்டாரா?

உம்மு சலாமா என்பவருக்கு மேற்படி விருதினை வழங்குவதற்கு, நிந்தவூர் பிரதேச செயலகத்தில் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தராகக் கடமையாற்றும் ஹனீப் என்பவரே தீர்மானித்துள்ளார்.

இந்த விருது வழங்கப்பட்டமைக்கு – தன்னுடைய எதிர்ப்பினைத் தெரிவித்தமையை அடுத்து, குறித்த கிராம அபிவிருத்தி உத்தியோகத்தரால் தான் அச்சுறுத்தப்பட்டதாக ஜமீலா கூறுகின்றார்.

“இந்த விருது வழங்கியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தால், சிறு வயதுடைய உனது மகனை வேலை செய்வதற்கு நீ அழைத்துப் போனதாகவும், அப்போதுதான் அவனை முதலை இழுத்துச் சென்றது எனவும்கூறி, சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் மூலம், உனக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வைப்பேன் என, கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் பலர் முன்னிலையில் என்னை மிரட்டினார்” என, பாதிக்கப்பட்ட சிறுவனின் தாய் ஜெமீலா தெரிவித்தார்.

இதேவேளை, உம்மு சலாமா என்பவருக்கு, தேசிய ரீயில் வழங்கப்படும் விருதுகளைப் பெற்றுக் கொடுக்க, சிபாரிசு செய்யப்படவுள்ளதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த விவகாரம் தொடர்பில், மேற்படி பெண்ணுக்கு விருது வழங்குவதற்கான தீர்மானத்தை எடுத்த – நிந்தவூர் பிரதேச செயலகத்தின் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.சி.எம். ஹனீப் என்பவரைத் தொடர்பு கொண்டு பேசியபோது; முதலையினால் இழுத்துச் செல்லப்பட்ட சிறுவனை, அவனின் தாயுடன் சேர்ந்து தானும் களத்தில் இறங்கி போராடி மீட்டதாக, உம்மு சலாமா என்பவர் கூறியதாகவும், அதனாலேயே அவருக்கு – குறித்த விருதினை வழங்குவதற்கான தீர்மானத்தை தான் எடுத்ததாகவும் தெரிவித்தார்.

இது இவ்வாறிருக்க, குறித்த விருதை உம்மு சலாமா எனும் பெண்ணுக்கு வழங்குவதற்கு முன்னர், சம்பவ தினம் நடந்த விடயம் பற்றி, பாதிக்கப்பட்ட சிறுவனின் தாயிடமோ அல்லது சிறுவனிடமோ, கிராம அபிவிருத்தி உத்தியோத்தர் ஹனீப் கேட்டறிந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

“உம்மு சலாமா மாதர் சங்கமொன்றின் தலைவியாக உள்ளார். அவர் அந்த சிறுவனை முதலையிடமிருந்து காப்பாற்றியதாகக் கூறியிருந்தார். அதற்காக, அவருக்கு அந்த விருதை வழங்கத் தீர்மானித்தோம். ஆனால், இது தொடர்பில் சிறுவனின் தாயிடம் நான் விசாரிக்கவில்லை” என்றார் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் ஹனீப்.

இதேவேளை, சிறுவனின் தாய்க்கு எதிராக சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் மூலம் நடவடிக்கை எடுக்கப்போவதாக தான் சொன்னது உண்மைதான் எனவும் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் கூறினார்.

உம்மு சலாமாவுக்கு மட்டுமன்றி, சர்வதேச மகளிர் தினத்தையொட்டி தாம் நடத்திய விழாவில், மேலும் பல பெண்களுக்கும் அவர்கள் வெளிக்காட்டிய திறமைகளுக்காக விருதுகள் வழங்கப்பட்டன எனவும் அவர் குறிப்பிட்டார்.

பொறாமையில் பொய் சொல்கிறார்

விருது பெற்ற உம்மு சலாமா எனும் பெண்ணிடம், அவருக்கு எதிராக முன்வைக்கப்படும் புகார் தொடர்பில் பேசியபோது; “ஜமீலாவும் நானும் சேர்ந்துதான் அவரின் மகனை முதலையிடமிருந்து போராடி மீட்டோம்” என்கிறார்.

தனக்கு விருது கிடைத்த பொறாமையில்தான் இப்போது அதனை ஜமீலா மறுக்கிறார் எனவும் உம்மு சலாமா கூறுகின்றார்.

நிந்தவூர் பிரதேச செயலகத்தில் நடந்த – சர்வதேச மகளிர் தின விழாவில் கலந்து கொள்வதற்கு – தான் சென்றிருந்ததாகவும், ஆனால், அங்கு தனக்கு விருது வழங்கப்படவுள்ளதை, தான் அறிந்திருக்கவில்லை என்றும் தெரிவித்த உம்மு சலாமா; “எதிர்பாராத விதமாகவே எனக்கு அந்த விருது கிடைத்தது” என்கிறார்.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுவன் பாஹிம் உடன் பேசியபோது; தனது தாய்தான் மிகக் கடுமையாகப் போராடி முதலையின் பிடியிலிருந்து  தன்னைக் காப்பாற்றியதாகக் கூறியதோடு, விருது வழங்கப்பட்ட பெண் உம்மு சலாமா என்பவர் – அப்போது கரையில் கொஞ்ச தூரத்தில் நின்றிருந்ததாகவும் தெரிவித்தார்.

பாஹிம் இப்போது பாடசாலைக்குச் சென்று வருகிறார். ஆனால், அவரின் காலில் ஏற்பட்ட பாதிப்பு இன்னும் பூரணமாக சுகமாகவில்லை.

பாஹிமுடைய பெற்றோருக்கு 06 பிள்ளைகள். மூவர் பெண்கள், மூவர் ஆண்கள். பாஹிம் கடைசிப் பிள்ளை. பாஹிமுடைய சகோதரிகள் இருவர் பல்கலைக்கழகத்தில் கற்று வருகின்றனர். பாஹிமுடைய தந்தை பேக்கரியொன்றில் வேலை செய்கிறார்.

“முதலையிடமிருந்து எனது பிள்ளையை காப்பாற்றிக் கரைக்குக் கொண்டுவந்த பிறகு, அவரை அருகிலிருக்கும் வீதிவரை தூக்கிக் கொண்டு போவதற்கு உம்மு சலாமாவை நான் அழைத்த போது, ‘முடியாது’ என்று கூறி விட்டார். அப்போது வீதியால் வந்த ஒருவர்தான் உதவினார். அவரும் நானுமாகச் சேர்ந்துதான் எனது மகனை சுமந்து கொண்டு போனோம்”.

“அப்படியான ஒருவருக்கு, எனது மகனை போராடிக் காப்பாற்றியதாகக் கூறி விருது கொடுக்கப்பட்டிருப்பதை எப்படி நான் பொறுத்துக் கொள்வது” என்று கேட்கிறார் ஜமீலா.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்