டொக்டர் ஷாபிக்கு சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது: நீதிமன்றுக்கு சட்ட மா அதிபர் அறிவிப்பு

🕔 March 23, 2022

குருணாகல் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் ஷாபி சிஹாப்தீன் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டு பணி இடைநிறுத்தப்பட்ட காலத்தில், அவருக்கு வழங்கப்பட வேண்டிய சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

பிரசவத்தின் பொருட்டு மேற்கொள்ளப்பட்ட சிசேரியன் அறுவை சிசிக்சைகளின்போது பௌத்த, சிங்களப் பெண்களுக்கு – மோசடியாக கருத்தடை செய்தார் என்பது உள்ளிட்ட மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு 60 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட பின்னர், பிணையில் விடுவிக்கப்பட்ட டொக்டர் எஸ்.எம்.எம். ஷாபியை, மீண்டும் பணியில் இணைத்துக் கொள்ளுமாறும், அவர் கட்டாய விடுமுறையில் (Compulsory leave) அனுப்பப்பட்டிருந்த காலப் பகுதிக்குரிய சம்பளத்தை வழங்குமாறும் சுகாதார அமைச்சு கடந்த வருடம் டிசம்பர் மாதம் உத்தரவிட்டிருந்தது.

குருணாகல் போதனா வைத்தியசாலையில் பிரசவம் மற்றும் பெண்ணியல் நோய் மூத்த மருத்துவராக கடமையாற்றி வந்த நிலையில், 2019ஆம் ஆண்டு மே மாதம் 25ஆம் திகதி குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் டொக்டர் ஷாபி கைது செய்யப்பட்டார்.

டொக்டர் ஷாபி தனது பணிக் காலத்தில் மொத்தமாக 07 ஆயிரத்துக்கும் அதிகமான சிசேரியன் அறுவை சிகிச்சைகளைச் செய்துள்ளார்.

04 ஆயிரம் பெண்களுக்கு மோசடியாக கருத்தடை செய்யப்பட்டதாக பத்திரிகையொன்றில் வெளியான செய்தியை, தன்னுடன் தொடர்புபடுத்தி பேஸ்புக்கில் எழுதிய பேராசிரியர் ஒருவருக்கு எதிரா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்வதற்கு தான் தீர்மானித்திருந்த சந்தர்ப்பத்திலேயே, தன்னை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்ததாக டொக்டர் ஷாபி கூறியிருந்தார்.

அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதற்குப் போதுமான ஆதாரங்கள் இல்லை என, நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்ட முதற் கட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தமையினால், டொக்டர் ஷாபி பிணையில் விடுவிக்கப்பட்டார்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்