“நேட்டோ எதிர் வினையாற்றாது என புடின் நினைத்தார்; தவறான வழியில் சம்பாதித்த உங்கள் லாபத்தை நோக்கி வருகிறோம்”: அமெரிக்க ஜனாதிபதி மிரட்டல்

🕔 March 2, 2022

யுக்ரேன் மீது படையெடுத்தால் மேற்கு நாடுகள் எப்படி எதிர்வினையாற்றும் என்பது குறித்து புதின், தவறாக கணக்குப் போட்டுவிட்டார் என, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

யுக்ரேன் மீது நடக்கும் படையெடுப்புக்கு புதின் மட்டுமே பொறுப்பு என்றும் அவர் கூறியுள்ளார்.

இதற்காக புதின் “நீண்ட காலம் தொடர்ந்து பெரிய விலை தரவேண்டியிருக்கும்” என்றும் பைடன் குறிப்பிட்டுள்ளார்.

சர்வாதிகாரிகள் தங்கள் ஆக்கிரமிப்புக்கு உரிய விலையை தராவிட்டால், அவர்கள் மேலும் குழப்பத்தை விளைவிப்பார்கள் என்று கூறிய பைடன், முன்கூட்டியே திட்டமிட்ட, தூண்டுதல் ஏதுமில்லாத போரை தொடங்கியபோது “சுதந்திரத்தை நேசிக்கும் நாடுகள்” அமெரிக்காவுடன் நிற்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

பெரும் முதலாளிகளினாலும், வன்முறை நிறைந்த இந்த ஆட்சியில் இருந்து பல்லாயிரம் கோடியைத் திருடிக் கொண்ட ஊழல் அதிகாரிகளாலும் ரஷ்ய ஆட்சி தாங்கிப் பிடிக்கப்படுவதாகவும் பைடன் குற்றம்சாட்டினார்.

தங்கள் ஐரோப்பியக் கூட்டாளிகளுடன் இணைந்து ரஷ்ய சொகுசுக் கப்பல்கள், ஜெட் விமானங்கள், சொத்துக்களை பறிமுதல் செய்யப்போவதாகவும் பைடன் இதன்போது மிரட்டல் விடுத்தார்.

“தவறான வழியில் சம்பாதித்த உங்கள் லாபத்தை நோக்கி வருகிறோம்” என்றும் அவர் கூறினார்.

மேலும் தனது உரையில், “கொடுங்கோன்மைக்கு எதிராக சுதந்திரமே எப்போதும் வெல்லும் என்பது அசைக்க முடியாதது” என பைடன் தெரிவித்தார்.

இந்த உரையின் போது, ஒற்றுமையாக இணைந்து யுக்ரேனுக்கு ஆதரவை தெரிவிக்குமாறு பைடன் கேட்டுக்கொண்டதற்கு, ஜனநாயக கட்சியினர் மற்றும் குடியரசு கட்சியினர் கைத்தட்டல் மூலம் ஆமோதித்தனர்.

“நேட்டோவும் மேற்கு நாடுகளும் எதிர்வினையாற்றாது என அவர் நினைத்தார். மேலும், அவர் எங்களை பிரித்துவிடலாம் எனவும் நினைத்தார்,” என பைடன் இதன்போது கூறினார்.

“புதின் தவறாக கணக்குப் போட்டுவிட்டார். நாங்கள் தயாராகவே இருந்தோம்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், அமெரிக்க வான் பரப்பில் ரஷ்ய விமானங்கள் விரைவில் தடை செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்