18 சங்கங்கள் மேற்கொண்டு வரும் வேலை நிறுத்தத்திலிருந்து, அரச தாதியர் சங்கம் விலகியது

🕔 February 12, 2022

தாதியர்கள் முன்னெடுத்து வரும் வேலை நிறுத்தத்திலிருந்து, அரச தாதியர் சங்கம் விலகுவதாக அச்சங்கத்தின் தலைவர் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார்.

நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு அமைவாக, இச்சங்கம் மேற்படி முடிவை எடுத்துள்ளது.

18 தொழிற் சங்கங்களினால் முன்னெடுக்கப்படும் வேலை நிறுத்த போராட்டத்தில் இருந்து, அரச தாதிய உத்தியோகத்தர்கள் சங்கம் இவ்வாறு விலக தீர்மானித்துள்ளது.

கடந்த 07ஆம் திகதி இந்த வேலை நிறுத்தம் ஆரம்பித்திருந்த நிலையில், அரச தாதியர் சங்கத் தலைவர் சமன் ரத்னபிரியவுக்கு எதிராக, நீதிமன்றம் இரு தடையுத்தரவுகளைப் பிறப்பித்திருந்தது.

சட்ட மா அதிபரின் கோரிக்கைக்கு அமைவாக இந்த தடையுத்தரவு வழங்கப்பட்டது.

சமன் ரத்னபிரிய தலைமை தாங்கும் சங்கத்தின் வேலை நிறுத்தத்தை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு எதிராக, அந்தத் தடையுத்தரவுகள் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், ஏனைய தொழிற்சங்க ஊழியர்களின் போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார்.

கடந்த 05 நாட்களாக, நாடளாவிய ரீதியில் மேற்படி வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Comments