சாய்ந்தமருது மதரஸாவில் சிறுவனைத் தாக்கிய ‘முஅல்லிம்’ கைது; காட்டுமிராண்டித் தாக்குதலை நியாயப்படுத்தும் சிலர் காப்பாற்ற முயற்சி

🕔 January 21, 2022

– அஹமட் –

சாய்ந்தமருது மதரஸா ஒன்றில் குர்ஆன் ஓதுவதற்கு கற்று வந்த 07 வயது ஆண் பிள்ளை ஒருவரை, மிகவும் கடுமையாகத் தாக்கியதாகக் கூறப்படும் முஅல்லிம் (ஆசிரியர்) ஒருவரை, கல்முனை பொலிஸார் இன்று (21) கைது செய்துள்ளனர்.

கடந்த இரண்டு நாட்களாக தலைமறைவாக இருந்து வந்த மேற்படி நபர், இன்று காலை – கல்முனை பொலிஸ் நிலையத்தில் சரணைடைந்தமையை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

நடந்தது என்ன?

சாய்ந்தமருதிலுள்ள மதரஸா ஒன்றில் அல்குர்ஆன் மனனம் செய்து வந்த மாணவர் ஒருவர், நேற்று முன்தினம் 19ஆம் திகதி, அங்கு குர்ஆன் கற்றுக் கொடுக்கும் முஅல்லிம் (ஆசிரியர்) ஒருவரால் மிக மோசமாகத் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அங்கு பிற்பகல் 2.30 தொடக்கம் 4.30 மணி வரையில் நடக்கும் வகுப்பில் கலந்து கொண்ட சிறுவனே, இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார்.

சம்பந்தப்பட்ட சிறுவனின் முதுகு மற்றும் காதுகளில், முஅல்லிம் (ஆசிரியர்) தாக்கியமை காரணமாக – கடுமையான வீக்கங்கள் ஏற்பட்டுள்ளன.

இந்த நிலையில், குறித்த சிறுவனை அவரின் தந்தை நேற்று முன்தினமே கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதோடு, இது தொடர்பில் கல்முனை பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்திருந்தார்.

அத்தோடு, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தொலைபேசி இலக்கத்துக்கு அழைத்து – இது தொடர்பில் முறைப்பாடு செய்ததாகவும், பிரதேச செயலகத்திலுள்ள பெண்கள் மற்றும் சிறுவர் நன்னடத்தை பிரிவு உத்தியோகத்தரிடம் விடயத்தைத் தெரியப்படுத்தியதாகவும் புதிது செய்தித்தளத்திடம் சிறுவனின் தந்தை கூறினார்.

இதனையடுத்து சிறுவனைத் தாக்கிய நபர், 19ஆம் திகதி இரவு தனது வீட்டுக்கு வந்து – தன்னிடம் சமரசம் பேசியதாகவும், அதற்கு தான் இணைங்கவில்லை எனவும் சிறுவனின் தந்தை தெரிவிக்கின்றார்.

பின்னர், சிறுவனைத் தாக்கியதாகக் கூறப்படும் முஅல்லிம் (ஆசிரியர்) தலைமறைவானார்.

தாக்குதலுக்கான காரணம்

குறித்த பிள்ளை – குர்ஆனை திக்கித் திணறி ஓதினார் என்பதற்காகவே, அவரை – அந்த முஅல்லிம் (ஆசிரியர்) தாக்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தனது 07 வயது மகனுக்கு அந்த முஅல்லிம் கன்னத்தில் அறைந்ததால் தனது மகன் கீழே விழுந்ததாகவும், பக்கத்தில் இருந்த மேசையில் அவருடைய தலை பலமாக அடிபட்டதாகவும் சிறுவனின் தந்தை கூறுகிறார். மேலும் தனது மகனின் இரண்டு காதுகளையும் முஅல்லிம் பலமாகத் திருகி, இரண்டு காதுகளிலும் இரத்தம் கண்டித்துள்ளதாகவும், சம்பவம் நடந்து மூன்றாவது நாளாகியும் அது அழியாமல் காணப்படுகிறது எனவும் அந்தத் தந்தை குறிப்பிட்டுள்ளார்.

காப்பாற்ற முயற்சி

இவ்வாறான பின்னணியில் அந்த 07 வயது பிள்ளையை காட்டுமிராண்டித்தனமாக தாக்கிய நபரை நியமாயப்படுத்தும் வகையில், சிலர் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களைப் பதிவிடுவதாக சிறுவனின் தந்தை ‘புதிது’ செய்தித்தளத்திடம் கவலை தெரிவித்தார்.

அந்த சிறுவனை இவ்வாறு தாக்கியமை இஸ்லாத்தின்படி சரியானதுதான் என்றும், சமூக வலைத்தளங்களில் சிலர் எழுதியுள்ளதாகவும் அவர் கூறினார்.

பாதிக்கப்பட்ட சிறுவனின் தந்தை ஓர் ஆசிரியர் என்பதோடு, தாயும் அரச உத்தியோகத்தராகப் பணியாற்றி வருகின்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்