தென்கிழக்குப் பல்கலைக்கழக பாலியல் துன்புறுத்தல் விவகாரம்: ‘இவை’ நடக்கும் வரை, நமது குரல் ஒலித்துக் கொண்டேயிருக்கும்

🕔 January 18, 2022

– ஆசிரியர் கருத்து –

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளர் ஒருவரால் அங்குள்ள மாணவியொருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்ட விவகாரத்தில், சம்பந்தப்பட்ட விரிவுரையாளர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் குறித்த மாணவி தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தனது படிப்பைத் தொடர்வதில்லை என்கிற முடிவுக்கு வந்துள்ளதாக அறிய முடிகிறது.

இதேவேளை பாலியல் தொந்தரவு கொடுத்த விரிவுரையாளரைக் காப்பாற்றும் பொருட்டு, இவ்விவகாரத்துடன் தொடர்புபட்ட மாணவி, ஏற்கனவே பல்கலைக்கழகத்துக்கு செய்த முறைப்பாட்டை வாபஸ் பெறும் கடிதமொன்று, அந்த மாணவியிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சில விரிவுரையாளர்கள், மேற்படி பாலியல் தொந்தரவு கொடுத்த விரிவுரையாளரைக் காப்பாற்றுவதற்காக களத்தில் இறங்கியுள்ளதாகவும் அறிய முடிகிறது.

கல்வி நிறுவனங்களின் ஆசிரியர்கள்/விரிவுரையாளர்கள், அங்குள்ள மாணவர்களுடன் பெற்றோரைப் போன்று நடந்து கொள்ள வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு கணிசமானோரிடத்தில் உள்ளது.

மறுபுறம், ஒருவர் இணங்காதபோது அவரை பாலியல் உறவுக்கு வருமாறு தொந்தரவு செய்வதும் சட்ட ரீதியாகக் குற்றமாகும்.

ஆனால், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடந்த விவகாரம் – மேற்சொன்ன இரண்டு விடயங்களையும் அப்பட்டமாக மீறியுள்ளது.

குறித்த மாணவியிடம் சம்பந்தப்பட்ட விரிவுரையாளர் தனது பாலியல் விருப்பத்தை வெளிப்படுத்திய போது, அதற்கு அந்த மாணவி கடுமையாக எதிர்ப்புக் காட்டியுள்ளார். ஆனால், விரிவுரையாளர் அந்த மாணவியை துன்புறுத்தும் வகையில் நடந்திருக்கின்றார். தனக்கு உபசாரம் (treat) வழங்கும் வகையில் தன்னைக் கட்டிப் பிடிக்குமாறு (Hug) அந்த மாணவியை விரிவுரையாளர் தொந்தரவு செய்துள்ளார்.

அந்த விரிவுரையாளர் இவ்வாறு தொந்தரவு செய்ததால் சம்பவ இடத்திலிருந்து அந்த மாணவி வெளியேறியுள்ளார். ஆனால், மாணவியை விரிவுரையாளர் பின்தொடர்ந்திருக்கின்றார். உணவகம் (Restaurant) ஒன்றுக்கு சாப்பிடச் செல்வோமா என்று அந்த மாணவியை அழைத்திருக்கிறார். இவற்றினால் அதிர்ந்து போன மாணவி, தனது விடுதிக்குச் சென்று அழுதுள்ளார். பின்னர், அங்கிருந்து வெளியேறி, பக்கத்து ஊரிலுள்ள தமது குடும்ப நண்பர் ஒருவரின் வீட்டுக்கு பாதுகாப்பின் நிமித்தம் சென்றிருக்கிறார்.

குறித்த விரிவுரையாளர் தன்னிடம் இவ்வாறு நடந்து கொண்டமைக்கு எந்தவித ஆதாரமும் இல்லை என்பதால், அந்த மாணவி ஆதாரத்தை உருவாக்கியிருக்கின்றார். அந்த விரிவுரையாளரை தொலைபேசி மூலம் அவர் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். நடந்த விடயத்தை வெளியே சொல்லப் போவதாகக் கூறியிருக்கிறார். இதன்போது பயந்து போன அந்த விரிவுரையாளர் அழுது, கெஞ்சி – அப்படி எதுவும் செய்ய வேண்டாம் என மன்றாடியிருக்கின்றார். இதனை அந்த மாணவி ஒலிப்பதிவு செய்து கொண்டார். அதுதான் இப்போது இந்த விடயத்தில் வலுவான சாட்சியாக மாறியுள்ளது.

இப்போது இந்த விவகாரத்தில் இரண்டு விடயங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பது ஓர் ஊடகமாக நமது எதிர்பார்ப்பாகும். ஒன்று, அந்த விரிவுரையாளர் நிரந்தரமாகப் பணி நீக்கம் செய்யப்படுதல் வேண்டும். அடுத்தது, அதற்கு சமாந்தரமாக, இவ் விடயத்துடன் தொடர்புபட்ட மாணவி – படிப்பைத் தொடர்வதற்கான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படுதல் அவசியமாகும்.

அந்த மாணவி, மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர் என்பதால், அவருக்கு கொழும்பு பல்கலைக்கழகத்தில் படிப்பைத் தொடர்வதில் சிக்கல்கள் இருக்காது.

ஏற்கனவே சில வருடங்களுக்கு முன்னர் இதே பல்லைக்கழகத்தில் விரிவுரையாளரொருவரால் பாலியல் தொந்தரவுக்குள்ளான மாணவியொருவர், அது குறித்து முறைப்பாடு செய்தமையினால், அந்த விரிவுரயாளரின் தொழில் பறிக்கப்பட்டது. அதேவேளை, தொந்தரவுக்குள்ளான மாணவிக்கு கொழும்பில் படிப்பைத் தொடர்வதற்கான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தற்போதைய உபவேந்தர் பதவியேற்று 05 மாதங்கள் கடந்துள்ள நிலையில் இவ்வாறானதொரு நிகழ்வு நடந்துள்ளது. இதில் பக்கச் சார்பின்றி நீதியாக நடந்து, தனது நேர்மையை நிரூபிக்க வேண்டிய தேவை உபேவேந்தருக்கு உள்ளது.

குறித்த மாணவி தனது முறைப்பாட்டை வாபஸ் பெற்றுக் கொண்டாலும், நடந்த சம்பவம் தொடர்பில் முறையான விசாரணை நடத்தப்படும் என, ஊடகங்களிடம் உபவேந்தர் வாக்குறுதி வழங்கியிருக்கிருக்கின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இவை இவ்வாறிருக்க, சிலர் தென்கிழக்குப் பல்கலைக்கழகம் மீது சேறு பூசுவதற்கும், பல்கலைக்கழக நிருவாகத்தினர் மீது கொண்ட தனிப்பட்ட பகைமையை மனதில் வைத்துக் கொண்டு, அவர்களைப் பழி தீர்த்துக் கொள்வதற்குமான சந்தரப்பமாகவும் இந்த விவகாரத்தைப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். அது குறித்தும் நாம் அவதானமாக இருக்க வேண்டும்.

ஒட்டுமொத்தமாக, குற்றவாளி தண்டிக்கப்பட்டு, இந்த சம்பவத்துடன் தொடர்புபட்ட மாணவிக்கு நீதி கிடைக்கும் வரை, ஓர் ஊடகமாக நமது குரல் ஓங்கி ஒலித்துக் கொண்டேயிருக்கும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்