ரஹ்மத் நகரில் நீர் வழங்கல் அதிகார சபையின் சட்ட விரோத செயற்பாடு; அட்டாளைச்சேனையின் ஒரு பகுதியை இறக்காமத்துக்கு அபகரிக்கும் சூழ்ச்சியின் ஒரு பகுதியா?

🕔 December 29, 2021
அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் அமானுல்லா ரஹ்மத் நகரில்…

– மரைக்கார் –

ட்டாளைச்சேனை பிரதேச சபை பிரிவுக்குட்பட்ட ரஹ்மத் நகரிலுள்ள வீதிகள் தோண்டப்பட்டு, குழாய்கள் புதைக்கும் நடவடிக்கையினை நீர் வழங்கல் அதிகார சபை ஆரம்பித்துள்ள நிலையில், அதற்கான அனுமதி – அட்டாளைச்சேனை பிரதேச சபையில் பெறப்படவில்லை என புகார் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 16ஆம் திகதி தொடக்கம், நீர் வழங்கல் அதிகார சபையினால் ரஹ்மத் நகரிலுள்ள பாதைகள் தோண்டப்பட்டு குழாய்கள் புதைக்கப்பட்டு வந்த போதிலும், அதற்கான அனுமதி – பிரதேச சபையிடம் பெறப்படவில்லை என, அங்குள்ள மஸ்ஜிதுர் ரஹ்மா ஜும்ஆ பள்ளிவாசல் நிருவாகத்தினர், நீர்வழங்கல் அதிகார சபையின் அக்கரைப்பற்று நிலையப் பொறுப்பதிகாரிக்கு கடிதம் மூலம் முறையிட்டுள்ளனர்.

‘ஊழலையும் சட்டத்துக்கு முரணாக செயற்படுவதையும் தெரியப்படுத்தல்’ எனும் தலைப்பில் இந்தக் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

பின்னணி

அட்டாளைச்சேனை பிரதேச சபைப் பிரிவுக்குட்பட்ட ரஹ்மத் நகர் பகுதியை, இறக்காமம் பிரதேச சபைப் பிரிவுக்குள் சூழ்ச்சிகரமாகக் கொண்டுவரும் நடவடிக்கையொன்று சில காலங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இறக்காமம் பிரதேச சபை பிரிவுக்குட்பட்ட அறபா நகர், மேற்படி ரஹ்மத் நகரின் எல்லைப்பகுதியாக அமைந்திருப்பதால், அறபா நகராக ரஹ்மத் நகரையும் மாற்றும் சட்டவிரோத செயற்பாடுகள் இறக்காமத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகள் சிலரால் தொடங்கப்பட்டுள்ளதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

அட்டாளைச்சேனை பிரதேச சபை பிரிவுக்குட்பட்ட ரஹ்மத் நகர் பகுதியில் சுமார் 350 ஏக்கர் நெற்செய்கைக் காணிகள், 30 குடியிருப்புகள் மற்றும் பள்ளிவாசல் போன்றவை அமைந்துள்ளன.

ரஹ்மத் நகரிலுள்ள காணிகளுக்கான ஜயபூமி உறுதிகள், அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தினாலேயே வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ரஹ்மத் நகர் பகுதியிலுள்ள வீதிகளைத் தோண்டி, நீர் வழங்கல் அதிகார சபையினர் குழாய்களைப் புதைக்கும் நடவடிக்கைகளை அண்மையில் ஆரம்பித்துள்ள நிலையில், அதற்கான அனுமதிகள் எதனையும் அட்டாளைச்சேனை பிரதேச சபையில் பெற்றிருக்கவில்லை.

இது குறித்து அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கும் ரஹ்மத் நகர் மக்கள் அறிவித்தமையை அடுத்து, கடந்த 22ஆம் திகதி, அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் ஏ.எல். அமானுல்லா – ரஹ்மத் நகருக்குச் சென்றிருந்தார்.

இதன்போது அட்டாளைச்சேனை பிரதேச சபையில் உரிய அனுமதியை பெறாமல் அங்கு குழாய்கள் புதைக்கப்படுவதால், அந்த நடவடிக்கையை உடனடியாக நிறுத்துமாறு, அங்கிருந்த நீர்வழங்கல் அதிகார சபை அதிகாரிகளிடம் தவிசாளர் அமானுல்லா கூறியிருந்தார்.

இருந்தபோதும், குறித்த வேலை அடுத்தடுத்த நாட்களில் தொடர்ச்சியாக நடைபெற்றதாகவும், ஆனால் தற்போது குழாய்கள் புதைக்கும் நடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அங்குள்ள மக்கள் கூறுகின்றனர்.

இறக்காமம் பிரதேசத்திலுள்ள சில அரசியல்வாதிகள் தமது கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரையாக, அட்டாளைச்சேனை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட ரஹ்மத் நகர் பகுதியை அபகரிக்க முயற்சிப்பதாக புகார் தெரிவிக்கப்படுகிறது. இதனால், ரஹ்மத் நகரை – இறக்காமம் பிரதேச சபைக்குட்பட்ட பகுதியாக்கும் சட்டவிரோத நடவடிக்கைகளில் மேற்படி அரசியல்வாதிகள் ஈடுபட்டு வருவதாக ரஹ்மத் நகர் பொதுமக்கள் கூறுகின்றனர்.

ரஹ்மத் நகரை இறக்காமத்துடன் இணைப்பதற்காக மேற்கொள்ளப்படும் சூழ்ச்சிகரமான சட்டவிரோத செயற்பாட்டுக்கு எதிராக, ரஹ்மத் நகரிலுள்ள விவசாய அமைப்புக்கள், சமூக நிறுவனங்கள் போன்றவை தமது கடுமையான எதிர்ப்புக்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த சர்ச்சை தொடர்பில் ‘புதிது’ செய்தித்தளம் முழுமையாக அவதானம் செலுத்தி, தொடர்ச்சியாகவும் விரிவாகவும், அனைத்துத் தரப்பினரின் கருத்துக்களையும் உள்வாங்கி செய்திகளை வழங்கவுள்ளது.

ரஹ்மத் நகரில் அனுமதி பெறாமல் தோண்டப்பட்ட வீதி…

Comments