சங்கமன்கண்டியில் வைக்கப்பட்ட புத்தர் சிலை அகற்றப்பட்டது; மக்களின் எதிர்ப்புக்கு வெற்றி

🕔 December 12, 2021

– புதிது செய்தியாளர் அஹமட் –

பொத்துவில் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட சங்கமன்கண்டியில் நேற்று (11) அதிகாலை வைக்கப்பட்ட புத்தர் சிலை, இன்று அதிகாலை (12) அகற்றப்பட்டுள்ளது.

தமிழர்கள் வாழும் சங்கமன்கண்டி பகுதியிலுள்ள மயானத்துக்கு முன்பாக உள்ள அரச காணியில் – நேற்று அதிகாலை புத்தர் சிலையொன்று வைக்கப்பட்டது.

இதனையடுத்து அப்பிரதேச மக்கள் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்பை வெளியிட்டதோடு, தமிழ் அரசியல்வாதிகளும் இந்த நடவடிக்கைக்குத் தமது எதிர்ப்பைத் தெரிவித்திருந்தனர்.

இதனால் புத்தர் சிலை வைக்கப்பட்டிருந்த பகுதியில் பதட்டநிலை ஏற்பட்டமையை அடுத்து – பொலிஸார், பொத்துவில் பிரதேச செயலாளர், பொத்துவில் பிரதேச சபைத் தவிசாளர் உள்ளிட்ட பல அதிகாரிகள் அந்த இடத்துக்கு வருகை தந்திருந்தனர்.

இந்த நிலையில் குறித்த சிலையை வைப்பதற்கு முறையான அனுமதியை பிரதேச சபையில் பெற்றிருக்கவில்லை எனத் தெரிவித்து, பொத்துவில் பொலிஸ் நிலையத்தில் பொத்துவில் பிரதேச சபையின் செயலாளர் முறைப்பாடொன்றினையும் பதிவு செய்திருந்தார்.

இவ்வாறான எதிர்ப்புகளையடுத்து சங்கமன்கண்டி பகுதியில் வைக்கப்பட்ட சிலையை இரண்டு நாட்களுக்குள் அங்கிருந்து அகற்றுவதாக பொலிஸார் நேற்று வாக்குறுதி வழங்கினர். இதனால், சிலை வைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்தோர் அங்கிருந்து சென்றனர்.

இந்தப் பின்னணியிலேயே சங்கமன்கண்டி பகுதியில் வைக்கப்பட்ட புத்தர் சிலை தற்போது அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளது.

தொடர்பான செய்தி: தமிழர் பிரதேசத்தில் ‘முளைத்த’ திடீர் புத்தர் சிலை: மக்களின் எதிர்ப்பினால் அகற்றுவதற்கு சம்மதம்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்