இருந்தவரின் தீர்ப்பை, வந்தவர் ரத்துச் செய்தார்: மன்னார் பிரதேச சபையின் தவிசாளராகிறார் மீண்டும் முஜாஹிர்

🕔 November 14, 2021

ன்னார் பிரதேச சபை தவிசாளர் பதவி மற்றும் உறுப்புரிமை ஆகியவற்றிலிருந்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸை சேர்ந்த சாகுல் ஹமீட் முகம்மட் முஜாஹிர் என்பவரை நீக்குவதாகக் குறிப்பிட்டு, வடக்கு மாகாண முன்னாள் ஆளுநர் பீ.எஸ்.எம். சார்ல்ஸ் வௌியிட்ட வர்த்தமானி அறிவிப்பை, வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநர் ஜீவன் தியாகராஜா ரத்துச் செய்துள்ளார்.

மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் சாஹுல் ஹமீட் மொஹமட் முஜாஹிர் தொடர்பில் – ஓய்வுபெற்ற நீதிமன்ற அதிகாரி கந்தையா அரியநாயகம் முன்னெடுத்த விசாரணை முடிவின் அடிப்படையில், அவரை தவிசாளர் பதவியில் இருந்தும் உறுப்பினர் பதிவியில் இருந்து நீக்குவதாக முன்னாள் ஆளுநர் சாள்ஸ் அறிவித்திருந்தார்.

செப்டம்பர் 14 ஆம் திகதி முதல் அவரை பதவியில் இருந்து நீக்குவதாகக் குறிப்பிட்டு, செப்டம்பர் மாதம் 13 ஆம் திகதி வர்த்தமானி அறிவிப்பு வௌியிடப்பட்டிருந்தது.

இருந்த போதிலும், புதிய ஆளுநரின் அதிகாரத்தின் அடிப்படையில் மேற்படி வர்த்மானி அறிவிப்பு ரத்துச் செய்யப்பட்டுள்ளது.

நொவம்பர் 09 ஆம் திகதி தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில், இந்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே, மன்னார் தவிசாளர் பதவியிலிருந்து தன்னை நீக்கியமையை ஆட்சேபித்து அச்சபையின் தவிசாளராக இருந்த முஜாஹிர் கடந்த செப்டம்பர் 28ஆம் திகதி, கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.

இந்த நிலையில் மன்னார் பிரதேச சபையின் புதிய தவிசாளராக முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்த எம்.ஐ.எம். இஸ்ஸதீன் என்பவர் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

இருந்த போதிலும், மன்னார் பிரதேச சபைக்கான புதிய தவிசாளரை நியமித்து, வர்த்தமானி வெளியிடுவதை தடுக்கும் உத்தரவை, வடமாகாண உள்ளூராட்சி மன்ற ஆணையாளருக்கு கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த செப்டம்பர் 29ஆம் திகதி பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்