கால்நடைகளை அறுப்பதைத் தடை செய்யும் சட்டமூலம்: அமைச்சரவை அங்கீகாரம்

🕔 October 19, 2021

கால்நடைகளை அறுப்பதை தடை செய்யும் சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், நாடாளுமன்றத்தில் அந்தச் சட்டமூலத்தைத் தாக்கல் செய்வதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (19) அமைச்சரவையில் இந்த சட்டமூலத்தைச் சமர்ப்பித்தார்.

விடயத்துக்குப் பொருந்தும் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை திருத்துவதற்கும், கால்நடைகளை அறுப்பது தொடர்பாக உள்ளூராட்சி சபைகளால் நிறைவேற்றப்பட்ட சட்டங்களைத் திருத்துவதற்கும் அமைச்சரவை தற்போது அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதற்கிணங்க பின்வரும் சட்டங்கள் மற்றும் கட்டளைகளைத் திருத்துவதற்கான சட்டமூலத்தை சட்ட வரைஞர் உருவாக்கியுள்ளார்.

  • 1893 ஆம் ஆண்டின் 09ஆம் இலக்க கால்நடை அறுப்பு கட்டளைச் சட்டத்தின் 272ஆவது பிரிவு.
  • 1958 ஆம் ஆண்டின் 29ஆம் இலக்க விலங்கு சட்டம்.
  • மாநகர சபைகள் கட்டளைச் சட்டத்தின் 252ஆவது பிரிவு.
  • நகர சபைகள் கட்டளைச் சட்டத்தின் 255ஆவது பிரிவு.
  • 1987 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க பிரதேச சபை கட்டளைச் சட்டம்.

இந்த நிலையில் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ள மேற்படி சட்டமூலம், அரசியலமைப்புடன் முரண்படவில்லை என சட்ட மா அதிபர் உறுதிப்படுத்தியுள்ளார்.

Comments