சாய்ந்தமருது தொழிற் பயிற்சி நிலையத்துக்கு அமைச்சர் நாமல் விஜயம்: கொரிய, ஜப்பான் மொழிகளைக் கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி

🕔 October 13, 2021

– யூ.கே. காலித்தீன் –

சாய்ந்தமருது தொழிற் பயிற்சி நிலையத்தில் – கொரிய மற்றும் ஜப்பான் மொழிகளை கற்பிப்பதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும், அதற்குரிய ஆளணித் தேவைகள் பூர்த்தி செய்யப்படும் எனவும் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்துக்கு இன்று (13) விஜயம் செய்த நாமல் ராஜபக்ஷ; சாய்ந்தமருது பிரதேசத்துக்கும் வருகை தந்தார்.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் சாய்ந்தமருது தொழிற் பயிற்சி நிலையத்திற்கு பொதுஜன பெரமுனவின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் றிஸ்லி முஸ்தபாவின் அழைப்பின் பேரில் அமைச்சர் வருகை தந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் சாய்ந்தமருது தொழிற் பயிற்சி நிலையத்தினை பார்வையிட்ட அமைச்சர் நாமல் ராஜபக்ஷ; அங்குள்ள தேவைகளை அதிகாரிகளிடம் கேட்டறிந்து கொண்டார்.

இதனையடுத்து அங்குள்ள குறைகளை இல்லாமல் செய்வதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் ஊடகங்களிடம் தெரிவித்ததோடு, கொரிய மற்றும் ஜப்பான் மொழிகளை கற்பிப்பதற்குரிய நடவடிக்கைகளும், அதற்குரிய ஆளணி தேவைகளும் பூர்த்தி செய்யப்படும் என்றும் கூறினார்.

அமைச்சரின் வருகையின்போது தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் அம்பாறை மாவட்ட உதவிப் பணிப்பாளர் கங்கா சாகரிக்கா, சாய்ந்தமருது தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின்  தொழிற் பயிற்சி நிலைய பொறுப்பதிகாரி எம்.ரி.எம். ஹாறுன் ஆகியோரோடு அமைச்சின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Comments