ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடையவர்களை தண்டிப்பதைத் தவிர்க்க சூழ்ச்சி நடைபெறுகிறது: பேராயர் மெல்கம் ரஞ்சித் குற்றச்சாட்டு

🕔 August 13, 2021

– எம்.எம். சில்வெஸ்டர் –

ஸ்டர் தின தாக்குதலுக்கு சூழ்ச்சி நடைபெற்றது போலவே, அந்த தாக்குதலுடன் தொடர்பானவர்களை தண்டிப்பதை தவிர்ப்பதற்கும் சூழ்ச்சி நடைபெற்று வருகிறது என கொழும்பு மறை மாவட்ட ‍பேராயர் மெல்கம் ரஞ்சித் குற்றுஞ்சாட்டியுள்ளார்.

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பான விசாரணை நடத்திய ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தாது, அதனை ஆராய்வதற்கு ஒரே கட்சியைச் சேர்ந்த ஆறு அமைச்சர்கள் கொண்ட உப குழுவொன்றை நியமித்திருப்பது நியாயமானது இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

எதிர்வரும் 21 ஆம் திகதியன்று தேவாலயங்கள், வீடுகள், கடைகள் வாகனங்கள் ஆகியவற்றில் கறுப்பு கொடி ஏந்துமாறு இன,மத, மொழி பேதமின்றி சகலருக்கும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

“படிப்படியாக நாம் உள்நாட்டுக்குள்ளேயே எமது எதிர்ப்புக்களை தெரிவித்து வந்துள்ளபோதிலும், இனிவரும் காலங்களில் சர்வதேச ரீதியாக தீர்வைப் பெற்றுக்கொள்வதற்கு நாம் தயாரகவுள்ளோம்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பில் கொழும்பு பேராயர் இல்லத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின்‍போதே பேராயர் இந்த விடயங்களைத் தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில்;

“முழு நாட்டையும் சோகத்தில் ஆழ்த்திய ஈஸ்டர் தின தாக்குதல் இடம்பெற்று 02 ஆண்டு காலத்தை கடந்திருப்பினும், அதன் பின்னாலிருந்த சூழ்ச்சிக்காரர்களை இதுவரை கண்டறியாது இருப்பது கவலையளிக்கிறது. அந்தத் தாக்குதலை நடத்த சூழ்ச்சி இடம்பெற்றது போலவே குற்றவாளிகளை தண்டிப்பதை தவிர்க்கவும் சூழ்ச்சி நடைபெற்று வருகிறது”.

“ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பான விசாரணை நடத்திய ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தாது, அதனை ஆராய்வதற்கு ஒரே கட்சியைச் சேர்ந்த ஆறு அமைச்சர்கள் கொண்ட உப குழுவொன்றை நியமித்திருப்பது நியாயமானது இல்லை. இதன்படி பார்த்தால் ஜனாதிபதி ஆணைக் குழுவையும் மீறிய ஓர் குழுவாகவே இந்த நியமனம் உள்ளது.

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் பரிந்துரைக்கப்பட்டுள்ள விடயங்களுக்கு அமைவாக குறிப்பிடப்பட்டுள்ள நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி கடந்த ஜூலை மாதம் 13 ஆம் திகதி ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பியிருந்தோம்.

இருப்பினும், அந்தக் கடிதத்துக்கு முறையான பதில் எமக்கு கிடைக்கவில்லை. அதற்கான தகுந்த மறுமொழி எமக்கு கிடைக்காமை எமக்கு வருத்தமளிக்கிறது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் எமக்கு திருப்தியில்லை.

முழு நாட்டையும் சோகத்தில் ஆழ்த்திய கொடூரச் சம்பவத்துக்கு ஜனாதிபதி பதிலளிக்காது, ஜனாதிபதி செயலகத்தின் நீதி பிரிவின் பணிப்பாளர் பதில் அனுப்பியுள்ளமை வருத்தமளிக்கிறது. அந்த பதில் கடிதத்தில் ஜனாதிபதியோ, ஜனாதிபதி செயலாளரோ கையொப்பமிடாது, ஜனாதிபதி செயலாளருக்காக என குறிப்பிட்டு ஜனாதிபதி செயலகத்தின் நீதி பிரிவின் பணிப்பாளரான சட்டத்தரணி ஹரிகுப்த ரோஹனதீர கையொப்பமிட்டு பதில் கடிதம் அனுப்பிவைத்துள்ளமை முறையானதல்ல.

மூன்று பக்கங்களைக் கொண்ட அந்தக் கடிதத்தில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை எப்போது வெளியிடப்பட்டது, யார் யாருக்கு எந்தெந்த திகதிகளில் சமர்ப்பிக்கப்பட்டது என்பதே அதிகமாக குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர, ஏற்றுக்கொள்ளக்கூடிய முறையான பதில் எதுவும் அந்த கடிதத்தில் குறிப்படப்படவில்லை.

மேலும், அந்த கடிதத்தில் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் கூறப்பட்டுள்ள விடயங்களை நடைமுறைப்படுத்துவது பற்றி‍யும் குறிப்பிடப்படவில்லை. ஆகவே, இந்த பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதி போதிய கவனம் செலுத்தவில்லை என்றே எண்ணத் தோன்றுகிறது.

நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்து வருவதால் நாம் பாரியளவிலான எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்த நினைக்கவில்லை.

எனினும், எதிர்வரும் 21 ஆம் திகதி ஆலயங்களில், வீடுகளில், வேலைத்தளங்களில், வாகனங்களில் கறுப்புக் கொடி ஏந்துவதற்கு இன, மத, மொழி தாண்டி சகலருக்கும் அழைப்பு விடுக்கிறோம்.

படிப்படியாக நாம் உள்நாட்டுக்குள்ளேயே எமது எதிர்ப்புக்களை தெரிவித்து வந்துள்ளபோதிலும், அவற்றுக்கு பதில் எமக்கு கிடைக்காமல் போனால், நாம் சர்வதேசத்தை நாடுவோம். இவ்விடயம் தொடர்பில் பரிசுத்த பாப்ரசருக்கும் எழுத்து மூலம் அறிவித்துள்ளோம். தொடர்ந்தும் இனிவரும் காலங்களில் சர்வதேச ரீதியாக தீர்வைப் பெற்றுக்கொள்வதற்கு நாம் தயாரகவுள்ளோம்.

தற்போது நாட்டில் கொவிட் 19 கொரோனா தொற்று அச்சுறுத்தலை ஏற்பட்டுள்ளது. கடந்த அரசாங்கத்தால் ஈஸ்டர் தின தாக்குதலை கட்டுப்படுத்த முடியாமல் போனது,

ஈஸ்டர் தின தாக்குதலில் தொடர்புப்பட்டவர்களை கண்டறிந்து சட்டத்துக்கு முன்பாக நிறுத்துவோம் என ஆட்சி பீடமேறிய இந்த அரசாங்கம் – ஈஸ்டர் தின குற்றவாளிகளை கண்டறிய முடியாமல் இருப்பது போலவே, கொரோனா தொற்றையும் கட்டுப்படுத்த முடியாமல் உள்ளது” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்