அயன் டோம்: அமெரிக்காவே அசந்து போகும் இஸ்ரேலின் வான் பாதுகாப்பு பொறிமுறை; உருவானது எப்படி?

🕔 May 14, 2021
எதிராளிகளின் ராக்கெட்டுகளை தாக்கியளிக்கும் அயன் டோம் பொறிமுறை

– ஸ்ரான்லி ராஜன் –

யுத்தங்களின் போது மிகப்பெரிய மிரட்டல் ஏவுகணைகளையும் அதிவேக குண்டு வீசும் விமானங்களையும் கண்டுணர்ந்து, பதில் ஏவுகணைகளை வீசி அழிக்கும் ‘வான்பாதுகாப்பு சாதனங்களுக்கு’ தற்காலத்தில் மவுசு அதிகமாகும்.

ரேடார்களின் செயல்திறன்களைப் பொறுத்து இவற்றில் பல வகை உள்ளன. இந்த ரேடார்கள்தான் வானில் வரும் ஏவுகணைகள் மற்றும் விமானங்களை கண்டறிந்து தகவல் சொல்லும். எப்படிக் கண்டறியுமென்றால் ஒருவிதமான கதிர்களை அல்லது சிக்னல்களை அவை வெளியிடும். அது பறக்கும் பொருளில் பட்டு எதிரொலித்து – அசையும் பொருள் வருவதை உறுதி செய்யும். அந்த அசையும் பொருள் வரும் திசை வேகம் உள்ளிட்டவற்றை கணக்கிடும் தானியங்கி அமைப்புகள், பதில் ஏவுகணையினை மிக துல்லியமாக செலுத்தி அடித்து வீழ்த்தும்.

இதிலும் எதிரி ஏவுகனைகள் ஏமாற்றலாம். மிக உயரம் குறைந்த ஏவுகணைகளை சில ரேடார்கள் கவனிக்காது. குறிப்பாக கப்பல் மற்றும் நீர்மூழ்கி கப்பலில் இருந்து வரும் ஏவுகணைகளை இந்த ரேடார்களால் தடுக்க முடியாது.

இதில் முதல் கட்ட சிஸ்டமாக அமெரிக்க ‘பேட்ரியாட்’டும், ரஷ்ய ‘பென்சிர்’ வகையும் உள்ளன. இரண்டாம் கட்டமாக இன்னும் சில உள்ளன. ஆனால் ஒருங்கிணைந்த அமைப்பாக கருதப்படுவது அமெரிக்காவின் ‘தாட்’ சிஸ்டமும், ரஷ்ய ‘எஸ் 400’ சிஸ்டமுமாகும்.

இவற்றில் ரஷ்ய ‘எஸ் 400’ சிஸ்டம் – வான், தரை, கடல் என 06 வழியில் வரும் ஏவுகனைகளை தடுக்கும் என நம்பபடுகின்றது. ஆனால் யுத்த களத்தில் நிருபிக்கபடவில்லை. அமெரிக்க ‘தாட்’ சிஸ்டமும் அப்படியே.

அயன் டோம் என்றால் என்ன?

இதில் இஸ்ரேலின் ‘அயன் டோம்’ இரண்டையும் தூக்கி அடித்து, முதல் இடத்தில் இருக்கின்றது. இந்த அமைப்பு வித்தியாசமானது. ஒரு நகரை அல்லது குறிப்பிட்ட இடத்தை – இரும்புக் கூரை போல் அதன் சிக்னல்கள் அப்படியே மூடிகொள்கின்றன‌. ஒரு அடுக்கு அல்ல ஏறகுறைய 03 அடுக்குகள். இந்த கூரைக்குள் அந்நிய ராக்கெட்டுகள் வரும் முன்பே, அதாவது அவை இஸ்ரேலை நோக்கி கிளம்பியவுடனே அவர்களின் ரேடார்கள் சிக்னலை இங்கு கடத்துகின்றன‌. உடனே கடும் விழிப்புக்குள் வரும் ‘சிஸ்டம்’ தயாராகின்றது.

அந்த கூரைக்குள் வரும் விமானம் மற்றும் ஏவுகணை என அதை சரியாக இனம் கண்டு – பதில் ஏவுகணையினை பாய்ச்சுகின்றன‌. இந்த ஏவுகணைகளின் சிறப்பு என்னவென்றால், எய்த அம்புபோல் நேரே செல்லாது. மாறாக நல்ல பாம்பு இரையினை வேட்டையாடுவது போல் – வளைந்து நெளிந்து விரட்டி சென்று அடித்து வீழ்த்தும்.

முதலடுக்கில் தப்பினால் இரண்டாம் அடுக்கு. அதை தாண்டினால் அடுத்த‌ அடுக்கில் என – வடிகட்டி அழிக்கும் இந்த அயர்ன் டோம்.

இது இன்று உலகின் முதற்கர வான் தடுப்பு சாதனமாக கருதபடுக்கின்றது. 500 ஏவுகனைகள் மழைபோல் பொழிந்தபொழுது அதை 99% முறியடித்த மிக வெற்றிகரமான தரவு அதனுடையது. இதுதான் இன்று டெல் அவிவ், இஸ்ரேலிய அணுவுலை, அவர்களின் ராணுவ தலமையகம் ஆகியவற்றுக்கு வான்வழி பாதுகாப்பு கொடுக்கின்றது.

ஆயினும் இதன் மிகபெரிய சிக்கல் அதன் பேட்டரி. அந்த பேட்டரிகளுக்கான செலவு மிக அதிகம். அமெரிக்க நிறுவமொன்று அதை பெரும் பணம் வாங்கி கொண்டு பராமரிக்கின்றது. இந்த பேட்டரிக்கு மாற்றுவழியைக் கண்டுபிடிக்க இஸ்ரேல் தீவிரமாக ஈடுபடுகின்றது. இந்த சிஸ்டம் ஹமாஸ், ஹிஸ்புல்லா உள்ளிட்ட இயக்கங்களின் ஈரானிய ராக்கெட் ஏவுகணைகளை முறியடித்திருந்தாலும் பெரும் எதிரியுடன் மோதவில்லை.

சமீபத்தில் சிரியாவில் ரஷ்யா காலூன்றிய பின்னர், அதன் தந்திரோபாயமான ‘சிக்னலை குழப்புதல்’ எனும் நுட்பத்தில் இந்த சிஸ்டம் கொஞ்சம் திணறியதாக செய்திகள் வந்தன‌. அதாவது சிரியாவுக்குள் இஸ்ரேல் சும்மா புகுந்து அடிக்க கூடாது எனும் ரஷ்ய எச்சரிக்கை அதுவாகும். ஆனால் இனி ரஷ்ய சிக்னல்களை இஸ்ரேல் குழப்பலாம்.

என்னதான் ‘அயன் டோம்’ என்றாலும், ரேடாரில் சிக்காத ஐந்தாம் தலைமுறை விமானங்களையும் அதிவேக ஏவுகணைகளையும் இந்த சிஸ்டம் சமாளிக்குமா என்பதும் தெரியவில்லை. ஆனால் தடுக்கும் என இஸ்ரேல் நம்புகின்றது. இது போக ‘டேவிட் சிலிங்’ (தாவீதின் கவண்) என்றொரு அமைப்பும் அவர்களிடம் உண்டு. கோலியாத் எனும் ராட்சசனை தாவீது தன் கவண் கல் மூலம் அடித்தானாம் என்று பைபிளில் உள்ளது. அதனை அடிப்படையாக வைத்தே இந்தப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இது ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள் பாதுகாப்பு கொடுக்கும் அமைப்பு. இதனை இஸ்ரேல் அதிகம் வெளியே தெரிவிப்பதில்லை. ஆனால் வலுவானது. இவைதான் இஸ்ரேலின் வான் பாதுகாப்பு சாதன பொறிமுறையாகும்.

அயன் டோம் உருவானது எப்படி?

சரி, இந்த அயன் டோமை இஸ்ரேல் எப்படி உருவாக்கியது? அவர்கள் சொந்த சாதனையா என்றால் இல்லை. இஸ்ரேலுக்கு முதல் ஏவுகணை மிரட்டல் சதாம் ஹுசைன் மூலம் 1990ல் வந்தது, அப்பொழுது அமெரிக்கா ‘பேட்ரியாட் சிஸ்டம்’ என்பதை இஸ்ரேலுக்கு வழங்கியது. உண்மையில் ‘பேட்ரியாட்’ மிகப் பெரிய தோல்வியாக அமைந்தது. சதாமின் ‘ஸ்கட்’ ரக சோவியத் ஏவுகணைகளை அதனால் தடுக்க முடியவில்லை. இஸ்ரேலின் நல்ல காலம் – சதாமிடம் மிக சில ‘ஸ்கட்’ ஏவுகணைகளே இருந்தன. தொடர்ந்து ஏவுகளை வழங்க முடிதளவு சோவியத் அப்பொழுது சிதறி இருந்தது.

சதாமின் மிகபெரிய தவறு அம்மாதிரி ஏவுகணைகளை குவிக்காமல் இருந்ததுதான். அப்படி ஒரு பலம் இருந்திருந்தால் சதாமின் விதி மாறியிருக்கும்.

அப்பொழுது அமெரிக்கா ‘பேட்ரியாட்’ சிஸ்டம் கொடுத்தை அப்படியே விட்டுவிட்டு – ஈராக்கில் எண்ணெய் வேட்டை, பின்லேடன் என பிசியாக இருந்தது. அமெரிக்க வான் தடுப்பு துறையும் ‘தாட் சிஸ்டம்’ என இஸ்ரேலிய ‘பேட்ரியாட்’டை மறந்தார்கள்.

அமெரிக்காவில் ஒரு கோஷ்டி ‘பேட்ரியாட்’ சிஸ்டத்தை மறுநிர்மணம் செய்ய கிளம்பியது. ஆனால் இஸ்ரேல் மிக கவனமாக அமெரிக்கா கொடுத்த ‘பேட்ரியாட்’டை கழற்றி அக்குவேறு ஆணிவேராக பிரித்து – அதில் உள்ள தவறுகளை திருத்தி வெற்றிகரமான ‘அயர் டோம்’ என உருவாக்கிவிட்டது.

இப்பொழுது அமெரிக்கா மேம்படுத்திய ‘பேட்ரியாட்’, இஸ்ரேலின் சிஸ்டம் முன்னால் நிற்க முடியவில்லை என்பது அமெரிக்காவுக்கே அதிர்ச்சியளித்தது. அயன் டோமிலும் சில குறைகள் உள்ளன. 100% பாதுகாப்பானது என உலகில் எதுவுமில்லை. ஆனால் அதன் தவறுகளை திருத்த ஹமாஸ் பெரும் உதவி செய்து கொண்டிருக்கின்றது. இதனால் ஹமாஸை இஸ்ரேல் ஒரு காலமும் அழிக்காது. அதே நேரம் வளரவும் விடாது. ஹமாஸ் இல்லையென்றால் இம்மாதிரி சோதனைகளுக்கு இன்னொரு நாட்டுடன் போர் என இஸ்ரேல் கொடுக்கும் விலை மிக அதிகமாக இருக்கும். அதை இஸ்ரேலால் தாங்கவும் முடியாது.

கூட்டிக் கழித்து பாருங்கள். அவர்களின் ராணுவம், விஞ்ஞானம், அரசியல், பொருளாதார சிந்தனை, செலவே இல்லாமல் பரீட்சிக்கும் தந்திரம் என எல்லாமே ஒருமாதிரியானது. அரபுநாடுகளிடம் ஒரு ஒற்றுமையும் எழுச்சியும் வரும்வரை, இஸ்ரேலின் இந்த ஆட்டம் தொடரத்தான் செய்யும், அவர்களின் விதி அதுதான்.

அயன் டோம் பொறிமுறை
அயன் டோம் பொறிமுறையினூடாக ஏவப்படும் ஏவுகணை

Comments

புதிது பேஸ்புக் பக்கம்