கொவிட் உடல்களை அடக்கம் செய்யலாம்: சுகாதார அமைச்சு நியமித்த பேராசிரியர் ஜெனிபர் பெரேரா தலைமையிலான நிபுணர் குழு பரிந்துரைப்பு

🕔 January 2, 2021

சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்ட 11 பேர் கொண்ட நிபுணர் குழு, கொவிட் காரணமாக மரணமடைந்தவர்களின் உடல்களை தகனம் செய்யவும், அடக்கம் செய்யவும் முடியும் என பரிந்துரை வழங்கியுள்ளதாக ‘கொழும்பு டெலிகிராப்’ தெரிவித்துள்ளது.

சிரேஷ்ட பேராசிரியர் ஜெனிபர் பெரேரா தலைமையிலான நிபுணர்கள் குழுவினர், சுகாதார அமைச்சுக்கு இந்த வாரம் மேற்படி பரிந்துரைகளை சமர்ப்பித்துள்ளது.

இதன் பிரகாரம், கொரோனாவினால் மரணிப்போரின் உடல்களை தகனம் செய்ய வேண்டும் என – முன்னர் வழங்கப்பட்ட பரிந்துரையை, சிரேஷ்ட பேராசிரியர் ஜெனிபர் பெரேரா தலைமையிலான குழுவினர் திருத்தியுள்ளனர்.

கடந்த மாதம் 24ஆம் திகதி, மேற்படி நிபுணர்கள் குழு நியமிக்கப்பட்டது.

‘பாதிக்கப்பட்ட நபர் இறந்தவுடன் அந்த உடலில் வைரஸ்கள் பெருக்கமடையாது என்றும், ஒரு நபரின் மரணத்துடன் அந்த உடலிலுள்ள உயிரணுக்களும் இறந்து விடும் என்பதால், அவ்வுடலில் மீதமுள்ள வைரஸ்களும் ஒரு குறிப்பிட்ட காலப் பகுதிக்குள் இறந்து போய்விடும்’ எனவும் மேற்படி நிபுணர்கள் குழுவின் பரிந்துரை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த வகையில் மேற்படி குழுவின் பரிந்துரைகள் வருமாறு;

1. உடல்களை அகற்றும் முறையின் போது – இறந்தவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களின் கண்ணியம் மதித்து பாதுகாக்கப்பட வேண்டும்.

2. நியமிக்கப்பட்ட சுகாதாரப் பணியாளர்கள் மட்டுமே சடலங்களைக் கையாள வேண்டும்.

3. உடலை தகனம் அல்லது அடக்கம் செய்வதற்காக உறவினர்களிடம் ஒப்படைக்கக் கூடாது.

4. உடலுடன் தொடர்பு கொள்ளும் அனைவரையும் (சுகாதார மற்றும் பிணவறை ஊழியர்கள்) நிலையான தொற்று தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு முன்னெச்சரிக்கைகளைப் பயன்படுத்துவதை உறுதி செய்தல் வேண்டும். தொடர்ச்சியாகவும் மற்றும் போதுமானளவு சுகாதார பொருட்கள், துப்புரவு மற்றும் கிருமிநாசினி பொருட்கள் கிடைக்கச் செய்தல் வேண்டும்.

5. தகனம் அல்லது அடக்கம் செய்வதற்கான உடல்களை ‘எம்பாம்’ செய்யக்கூடாது.

6. உடலை அகற்றுவதற்கான உத்தரவு வழங்கப்பட்டவுடன், தகனம் அல்லது அடக்கம் 24 மணி நேரத்திற்குள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

7. சவப்பெட்டியில் வைப்பதற்கு முன், உடலை இரட்டை அடுக்கு பையில் வைக்க வேண்டும். அந்த பையானது 300 தடிப்பளவுள்ளதாகவும் உறிஞ்சக்கூடியதாகவும் கசிவு ஏற்படாததாகவும் மக்கக் கூடியதாகவுவும் இருக்க வேண்டும்.

8. உடலைப் பார்ப்பது சுகாதார/பிணவறை வசதிகளின் படி மட்டுமே அனுமதிக்கப்படும்.

9. குடும்பத்தினர் உடலைக் காண விரும்பினால், உடல் பையைத் திறந்து / அவிழ்த்து காண்பிக்க முடியும். அதன்போது உடலைக் காண்பவர் முகக் கவசம் அணிந்து, உடலிருந்து ஒரு மீட்டர் தூரத்தில் இருக்க வேண்டும். அதேபோன்று உடலைப் பார்ப்போரும் ஒரு மீற்றர் இடைவெளியில் இருக்க வேண்டும். இறந்த நபரின் உடலையோ அல்லது உடமைகளையோ தொடுவது அனுமதிக்கப்படாது. உடலைப் பார்ப்பதற்கு பையில் இருந்து அகற்றக்கூடாது.

10. குடும்பத்தைச் சேர்ந்த 04 நபர்கள் மட்டுமே உடலைக் காண அனுமதிக்கப்படுவார்கள். ஒரு நேரத்தில் இரண்டு நபர்கள் உடலைக் காண அனுமதிக்கப்பட முடியும். இரண்டு நபர்களுக்கு அதிகபட்சம் 05 நிமிடம் மேற்பார்வையின் கீழ் அனுமதிக்கப்படலாம். உடலைப் பார்க்க மொத்தம் 10 நிமிடம் அனுமதிக் வழங்க முடியும்.

11. உடலை தகனம் அல்லது அடக்கம் செய்யும் இடத்துக்குக் கொண்டு செல்லும் போது, ​​உடலுடன் குடும்பத்தைச் சேர்ந்த அதிகபட்சம் 04 பேர் செல்வதற்கு அனுமதிக்க முடியும். அவர்கள் தனியான வாகனத்தில் செல்ல வேண்டும்.

12. சுகாதார அதிகாரிகளால் அனுமதிக்கப்பட்ட இடத்தில் தகனம் / அடக்கம் செய்யப்பட வேண்டும்.

13. எந்தவொரு காரணத்துக்காகவும் சவப்பெட்டி தகனம் அல்லது அடக்கம் செய்யப்படும் இடத்தில் திறக்கப்படாது.

14. தகனம் / அடக்கம் செய்வதற்கு முன்னர் தகனம் / அடக்கம் செய்யும் இடத்தில் மத நடவடிக்கைகளுக்கும் 10 நிமிடங்கள் அனுமதிக்கலாம். இதன்போது சமூக இடைவெளி மற்றும் நிலையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்க ணே்டும். மதச் செயல்பாட்டின் போது ஒரு மத பிரமுகரும் குடும்பத்தைச் சேர்ந்த நால்வரும் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

15. கல்லறையின் அடிப்பகுதி தரையின் மேற்பரப்பில் இருந்து 1.5 மீற்றரும், நீர் மட்டத்துக்கு 1.2 மீற்றர் மேலேயும் இருக்க வேண்டும்.

அடக்கம் செய்யும் இடம் மற்றும் வயல் வாய்கால்களுக்கு இடையிலான தூரம் குறைந்தபட்சம் 10 மீற்றர் இருக்க வேண்டும்.

அடக்கப்படம் இடம் மற்றும் குடிநீர் கிணறுகள், தோண்டப்பட்ட துளைகள் மற்றும் கிணறுகள் ஆகியவற்றுக்கு இடையேயான தூரம் குறைந்தபட்சம் 250 மீற்றர் இருக்க வேண்டும்.

உலகளாவிய நிபுணர்களின் தற்போதைய பரிந்துரைகளின்படி அடக்கம் செய்யப்படும் இடம் மற்றும் நீரூற்றுகள், நீர் நிலைகள் ஆகியவற்றுக்கிடையிலான தூரம் குறைந்தபட்சம் 30 மீற்றர் இருக்க வேண்டும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்