கடமை நேரத்தில் ‘காணாமல் போகும்’ கல்முனை மாநகர சபை ஊழியர்: ஆளுநருக்கு முறைப்பாடு

🕔 September 28, 2020

– அஹமட் –

ல்முனை மாநகர சபையில் தோட்டப் பராமரிப்பாளராக (கெயா டேக்கர்) கடமையாற்றும் ஏ.சி. சமால்தீன் என்பவர், தனது பணி நேரத்தில் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாகவும், கடமை பொழுதுகளில் அலுவலகத்தில் இருப்பதில்லை எனவும் தெரிவித்து, கிழக்கு மாகாண ஆளுநருக்கு எழுத்து மூலம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கல்முனையைச் சேர்ந்த ஏ.எம். நசீர் என்பவர் இந்த முறைப்பாட்டுக் கடிதத்தை ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இம்மாதம் 01ஆம் திகதி அலுவலக வரவுப் புத்தகத்தில் காலை 8.05 மணிக்கு கடமையேற்று ஒப்பமிட்டுள்ள மேற்படி சமால்தீன் (ஊழியர் இலக்கம் – 05) என்பவர், அதே தினம் மாலை 7.50க்கு கடமையை நிறைவு செய்துள்ளதாகவும் ஒப்பமிட்டுள்ளார்.

இருந்தபோதும், அன்றைய தினம் சம்மாந்துறையில் தங்கியிருந்த முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீமுடன் மேற்படி சமால்தீன் என்பவர் தனது கடமை நேரத்தில் இருந்துள்ளார் என, குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை நிரூபிக்கும் வகையில் சம்மாந்துறையில் ஹக்கீமுடன், தான் காணப்படும் படங்களை, தனது பேஸ்புக் பக்கத்தில் சமால்தீன் மாலை 4.40 மணிக்கு பதிவேற்றியுள்ளார்.

அதேபோன்று முஸ்லிம் காங்கிரஸின் மறைந்த தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் நினைவு தினத்தையொட்டி, கல்முனையிலுள்ள அமைப்பொன்று இம்மாதம் 16ஆம் திகதி காலை ஏற்பாடு செய்திருந்த நிகழ்வொன்றிலும் சமால்தீன் என்பவர் தனது கடமை நேரத்தில் பங்குபற்றியிருந்தார் என்றும் குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த நிகழ்வில் எடுக்கப்பட்ட படங்களையும் தனது பேஸ்புக் பக்கத்தில் சமால்தீன் பதிவிட்டுள்ளார்.

இவை இவ்வாறிருக்க, மேற்படி சமால்தீன் என்பவருக்கு கல்முனை மாநகர சபையின் ஆணையாளர் – சட்டத்தை மீறும் வகையில் பல்வேறு சலுகைகளை வழங்குவதாகவும், சமால்தீன் என்பவரின் பிழைகளை ஆணையாளர் தட்டிக் கேட்பதில்லை எனவும் கிழக்கு மாகாண ஆணையாளருக்கு அனுப்பப்பட்டுள்ள முறைப்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கல்முனை மாநகர சபை – முஸ்லிம் காங்கிரஸின் ஆளுகையின் கீழ் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்