அரசியலமைப்புக்கான 20ஆவது திருத்தம் சபையில் சமர்ப்பணம்: ஐக்கிய மக்கள் சக்தியினர் கடும் எதிர்ப்பு

🕔 September 22, 2020

ரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலத்தினை நீதி அமைச்சர் அலி சப்ரி நாடாளுமன்றில் இன்று காலை சமர்ப்பித்தபோது, அதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பினை வெளியிட்டனர்.

சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தலைமையில் நாடாளுமன்றம் இன்று காலை கூடியது.

5.30 மணி வரையில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளதுடன் 4.30 மணி முதல் 5.30 மணி வரையில் சபை ஒத்திவைப்பு விவாதம் நடைபெறவுள்ளது.

20ஆவது திருத்தச் சட்ட மூலத்துக்கு இன்று முதல் 07 நாட்களுக்குள் எந்தவொரு நபருக்கும் எதிர்ப்பு மனுக்கள் இருப்பின் அதனை முன்வைக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

உச்ச நீதிமன்றத்தின் முன் அரசியலமைப்புக்கு சவால் விடுவதே இதன் நோக்கம் என்பதுடன், அவ்வாறு சவால்கள் இல்லாவிடின் 20ஆவது திருத்தம் 07 நாட்களுக்கு நாடாளுமன்றத்தில் இரண்டாவது வாசிப்பிற்காக விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும்.

இருப்பினும் யாரேனும் குறித்த காலப்பகுதியில் 20 ஆவது திருத்தத்துக்கு சவால் விடுவாராயின், உச்ச நீதிமன்றம் மனு தாக்கல் செய்யப்பட்ட நாளில் இருந்து 21 நாட்களுக்குள் தனது முடிவை வழங்க வேண்டும்.

குறித்த காலப்பகுதியில் இந்த அரசியலமைப்பு தொடர்பில் எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்க நாடாளுமன்றத்துக்கு உரிமை இல்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

21 நாட்களுக்கு முன்னர் உச்ச நீதிமன்றம் தனது தீர்மானத்தை அறிவித்தால், அதன்பின்னர் 20ஆவது திருத்தம் நாடாளுமன்றத்தில் இரண்டாவது வாசிப்புக்காக விவதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

இரண்டாவது வாசிப்பு நிறைவடைந்த பின்னர் வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளதுடன் அதில் நாடாளுமன்றத்தில் மூன்றின் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்படுகின்றது.

பின்னர் செயற்குழு கூட்டத்தின் போது 20ஆவது திருத்தத்தின் அனைத்து பிரிவுகளையும் ஒவ்வொன்றாக ஆராய்ந்து திருத்தங்கள் இருப்பின் அதனை தெரிவிப்பதற்கு வாய்ப்பு வழங்கப்படும்.

பின்னர் மூன்றாவது வாசிப்பின் போது வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளதுடன் அதில் நாடாளுமன்றத்தில் மூன்றின் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்படுகின்றது.

இறுதியாக சபாநாயகர் அரசியலமைப்புக்கு கையொப்பமிட்டதை அடுத்து அது சட்டமாக மாறும்.

Comments