மின்னொளி விளையாட்டுகளுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது: அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் அமானுல்லா தெரிவிப்பு

🕔 September 16, 2020

– றிசாத் ஏ காதர் –

ட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் இரவுநேர மின்னொளி விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்குகு தான் அனுமதிக்கப் போவதில்லை என, அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எல். அமானுல்லா தெரிவித்தார்.

இரவு நேர மின்னொளி கிரிக்கட் சுற்றுப்போட்டிகளுக்கு அனுமதி வழங்குமாறு பிரதேச சபையிடம் விளையாட்டுக் கழகங்கள் கோரிக்கை விடுத்துள்ள நிலையிலேயே அவர் இதனைக் கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்;

“கொரோனா தாக்கம் காரணமா மாணவர்களின் கல்வி நடவடிக்கை முற்றாக பாதிக்கப்பட்டது. இதனை மீளக் கட்டியெழுப்ப அதிபர்கள், ஆசிரியர்கள் கடுமையான உழைக்கின்றனர். இன்னும் ஓரிரு மாதங்களில் உயர்தரம் மற்றும் சாதாரண தரப் பரீட்சைகள் இடம்பெறவுள்ளன. எனவே இப்படியான ஒரு காலப்பகுதியில் இரவு நேர மின்னொளி விளையாட்டுப் போட்டிகளுக்கு அனுமதி வழங்கி மாணவர்களின் கற்றல், கற்பித்தல் நடவடிக்கைகளுக்கு இடைஞ்சலை ஏற்படுத்தும் ஒரு தவிசாளராக நான் இருக்க விரும்பவில்லை.

மின்னொளி விளையாட்டுப் போட்டிகளுக்கு அனுமதி வழங்கினால் மாணவர்களின் கல்விச் செயற்பாடுகள் கடுமையாகப் பாதிக்கப்படும் என்று பாடசாலைகளின் அதிபர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் நலன் விரும்பிகள் தவிசாளராகிய என்னிடம் முறையிடுகின்றனர்.

எனவே மாணவர்களின் சீரான கல்விச் செயற்பாடுகளுக்கு விளையாட்டுக் கழகங்களின் தலைவர்கள் மற்றும் வீரர்கள் ஆதரவு நல்குதல் அவசியமாகும். மின்னொளி விளையாட்டுக்கு அனுமதி வழங்காத தவிசாளரை பிழையாக விமர்சிப்பதில் இருந்து தவிர்ந்துகொள்ளுதல் வேண்டும்.

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் விளையாட்டுகளுக்கு எதிரானவரல்லர். ஆனால், விளையாட்டினால் கல்விச் செயற்பாடுகள் பாதிப்படைதல் கூடாது என்பதிலே நாம் எல்லோரும் ஒன்றுபட்டு கவனம் செலுத்துதல் அவசியமாகும்.

நமது மாணவச் செல்வங்களின் கல்விக்கு முன்னுரிமை வழங்கி இக்கட்டான கால சூழலுக்குள் அகப்பட்ட மாணவர்களை ஊக்கப்படுத்தி வெற்றிபெறச் செய்வேதே நமது இலக்காக அமைதல் வேண்டும்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்