குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் கைது; வழக்கின் சாட்சியங்களை மறைத்ததாக குற்றச்சாட்டு

🕔 July 31, 2020

ணி நீக்கம் செய்யப்பட்டுள்ள குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேக்கர – கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன சம்பந்தப்பட்ட ஆயுத வழக்கில் ஆதாரங்களை மறைத்து வைத்த குற்றச்சாட்டின் பேரில் இவர் கைதாகியுள்ளார் என, பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இன்று காலை அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்ட ஷானி அபேசேகர, கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

தன்னை மீண்டும் பதவியில் அமர்த்துமாறு உச்ச நீதிமன்றில் ஷானி அபேசேகர தொடுத்த அடிப்படை உரிமை மனுவை, நேற்றைய தினம் அவர் வாபஸ் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் முன்னதாக மற்றொரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் சமீபத்திய அடிப்படை உரிமை மனுவை வாபஸ் பெற்றுள்ளதாக ஷானி அபேசேகரவின் சட்டத்தரணிகள் நீதிமன்றுக்கு தெரிவித்தனர்.

தற்போது ஆட்சியிலுள்ள அரசியல்வாதிகள், எதிர்க்கட்சியில் இருந்தபோது, அவர்கள் சம்பந்தப்பட்ட பல வழக்குகள் குறித்து ஷானி அபேசேகர விசாரணைகளை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments