ஹரீஸ் எனும் அரசியல் பூச்சாண்டி: அழுக்கை அழுக்கால் கழுவும் வீரன்

🕔 July 27, 2020

– மப்றூக் –

‘கல்முனையைக் காப்பாற்றுவோம்’ என்கிற கோஷமொன்றினை முன்னாள் ராஜாங்க அமைச்சரும் தொலைபேசி சின்னத்தில் மு.காங்கிரஸ் சார்பாக அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடுகின்றவருமான எச்.எம்.எம். ஹரீஸ் கையில் எடுத்துள்ளார்.

அப்படியென்ன கல்முனைக்கு நடந்தது?

புதிதாக ஒன்றுமே நடக்கவில்லை.

ஆனால், கல்முனையைச் சேர்ந்த ஹரீஸுக்கு, இந்தத் தேர்தலில் உரத்துப் பிரசாரம் செய்வதற்கு ஒரு கோஷம் தேவைப்பட்டது. அதற்காகத்தான் ‘கல்முனையைக் காப்பாற்றுவோம்’ என்பதை கையில் எடுத்திருக்கின்றார்.

ஹரீஸின் ‘புண்’

கல்முனைக்கு அப்படியொன்றும் பெரியதாக ஆபத்துக்கள் இல்லை. கல்முனையிலுள்ள உப பிரதேச செயலகம் ஒன்றினை தரமுயர்த்தித் தருமாறு அங்குள்ள தமிழர்கள் கேட்கிறார்கள். அதைக் கொடுப்பதில் முஸ்லிம் தரப்பில் பெரும்பாலானோருக்கு மறுப்பு இல்லை. ஆனால், அந்த பிரதேச செயலகத்துக்கான எல்லை எவை என்பதைத் தீர்மானிப்பதில்தான் பிரச்சினை உள்ளது.

கடந்த ஆட்சியில் ராஜாங்க அமைச்சராக ஹரீஸ் இருந்தார். அவரின் முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு – கடந்த நல்லாட்சி அரசாங்கக் காலம்; ‘ஒரு வசந்த காலம்’ என்று, மு.காங்கிரஸ் தலைவரே பலமுறை கூறியிருக்கின்றார்.

அவ்வாறானதொரு அரசாங்கத்தில் கல்முனை உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்தும் விவகாரத்துக்கு ஹரீஸ் தீர்வைக் காணாமல்தான், இப்போது கல்முனையைக் காப்பாற்றப் போவதாகக் கோஷமிடுகிறார்.

உண்மையில் கல்முனை உப பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்தும் விவகாரத்துக்கு தீர்வு காண முடியவில்லையா? அல்லது தீர்வு காண ஹரீஸ் விரும்பவில்லையா என்கிற கேள்வி முக்கியமானது.

சரியாகக் சொன்னால் பிச்சைக்காரனுக்கு ஒரு புண் தேவையாக இருப்பது போல், கல்முனையில் தமிழர் – முஸ்லிம்களுக்கு இடையிலான ஒரு பிரச்சினை ஹரீஸுக்குத் தேவைப்பட்டது. அதனால், கல்முனை உப பிரதேச செயலகப் பிரச்சினைக்கு ஹரீஸ் தீர்வுகாண விரும்பவில்லை.

வேலைக்கு ஆகாதவர்

கடந்த நாலரை வருட ஆட்சிக் காலத்தில் வெறும் 13 தடவை மட்டுமே நாடாளுமன்றில் ஹரீஸ் உரையாற்றியுள்ளார் என தெரியவருகிறது. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தரப்படுத்தலில் ஹரீஸுக்கு 150ஆவது இடம் தாண்டிய நிலைதான் கிடைத்துள்ளது. அதாவது நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஹரீஸ் ஒரு சோம்பேறி, செயற் திறனற்றவர், வேலைக்கு ஆகாதவர் என்பதை இந்த தகவல்கள் கூறுகின்றன.

அம்பாறை மாவட்டத்தில் உருப்படியாக ஹரீஸ் எந்தவொரு அபிவிருத்தியையும் செய்யவில்லை. சர்வதேச விளையாட்டு மைதானம் அமைக்கப் போவதாகக் கூறி, கல்முனையில் ஆரம்பித்த திட்டம் கொத்தும் குறையுமாகக் கிடக்கிறது. கல்முனையை துபாய் ஆக மாற்றப் போவதாகச் சொல்லி மக்களை ஏமாற்றியதே மிச்சமாகும்.

சரியாகச் சொன்னால், கல்முனை ‘களவு’ போனால் கூட, அதனைக் காப்பாற்றும் திராணி ஹரீஸிடம் இல்லை என்பதைத்தான் மேலுள்ள தரவுகளும், தகவல்களும் வெளிப்படுத்துகின்றன.

ஆக, இந்தத் தேர்தல் காலத்தில் – தான் இன்னதுதான் செய்தேன் என்று கூறி, மக்களிடம் வாக்குக் கேட்பதற்கு ஹரீஸிடம் எதுவும் இல்லை.

கருணா = ஞானசார = ஹரீஸ்

இந்த நிலையில்தான் அம்பாறை மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிடக் களமிறங்கிய புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், தனது பிரசார உரைகளில் முஸ்லிம் மக்களுக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றமையை ஹரீஸ் கவனித்தார்.

அதேவேளை, அம்பாறை மாவட்டத்துக்கு சில நாட்களுக்கு முன்னர் வந்த பொதுபலசேனாவின் செயலாளர் ஞானசார தேரர்; “தேர்தல் முடிந்தவுடன் கல்முனைக்கு முதலில் வந்து, உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்திக் கொடுக்கும் வேலையைத்தான் பார்ப்பேன்” என்று கூறிவிட்டுச் சென்றார். இதையும் ஹரீஸ் கவனித்தார்.

இப்போது, இந்த இரண்டு விடயங்களையும் ஹரீஸ் நன்றாகக் கவ்விப் பிடித்து விட்டார். அவற்றை வைத்து; ‘கருணா, ஞானசாரவிடமிருந்து கல்முனையைப் பாதுகாப்போம்’ என்கிற கோஷத்தை எழுப்பத் தொடங்கியுள்ளார்.

ஞானசார தேரர் கல்முனை பற்றி கூறிய விடயம் பத்திரிகைகளில் வந்தன. அவற்றினை இப்போது தனது விளம்பரப் பதாகைகளில் ஹரீஸ் பயன்படுத்தி வருகிறார். ‘கருணா, ஞானசாரவிடமீருந்து கல்முனையைப் பாதுகாப்போம்’ என்று, ஏதோ ஒரு அமைப்பின் பெயரில் சுவரொட்டிகளை ஹரீஸ் வெளியிட்டிருக்கிறார்.

ஹரீஸ் கையில் எடுத்துள்ள கல்முனையைக் காப்பாற்றுவோம்’ என்கிற இந்தக் கோஷசம் புதியது அல்ல. அவரின் அரசியல் சரிந்து விழும் போதெல்லாம், இந்தக் கோஷசத்தை அவர் கையில் தூக்கிப் பிடிப்பதுண்டு. சரியாகச் சொன்னால் கல்முனை மக்களுக்கு, இது – புளித்துப் போன கோஷமாகும்.

கருணாவும், ஞானசார தேரரும் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதம் பேசுகிறார்கள் என்றால் அதனை முஸ்லிம்கள் மௌமாகக் கடந்து விட வேண்டும். அல்லது நல்லிணக்கத்தினால் அதனை எதிர்கொள்ள வேண்டும்.

ஆனால், ஹரீஸ் என்ன செய்கிறார்?

இனவாதத்தை இனவாதத்தால் எதிர்கொள்ள முயற்சிக்கின்றார். அழுக்கை அழுக்கால் கழுவப் பார்க்கிறார். ஆனால் அது நன்மை தராது.

இதன்படி கருணா, ஞாசார தேரரர் இனவாதிகள் என்றால், ஹரீஸும் இனவாதிதான்.

நெருப்பை நெருப்பால் அணைக்க முடியாது என்பதை, ஹரீஸிடம் யாராவது சொல்லி வையுங்கள்.

Comments