கோஷங்களுக்காக புள்ளடி வழங்கிய காலம் இப்போது இல்லை: முன்னாள் அமைச்சர் றிஷாட்

🕔 July 26, 2020

ட்சிகளுக்காகவும், சின்னங்களுக்காகவும், கோஷங்களுக்காகவும் புள்ளடிகள் வழங்கிய காலம் இப்போது இல்லையெனவும், சமூக இருப்பை முன்னிறுத்தி, நிதானமாகச் சிந்தித்து வாக்குகளை வழங்குமாறும் மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்டத்தில், ஐக்கிய மக்கள் சக்தியின் முதன்மை வேட்பாளர் அப்துல்லாஹ் மஹ்ரூபை ஆதரித்து, தோப்பூரில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் பங்கேற்று, அவர் உரையாற்றினார்.

தொடர்ந்து கருத்துரைத்த முன்னாள் அமைச்சர் றிஷாட் கூறுகையில்;

“மக்கள் காங்கிரஸின் மீது கொண்டுள்ள அபரிமிதமான நம்பிக்கை காரணமாகவே, திருமலை மாவட்டத்தில், பல்வேறு அரசியல் கட்சிகளைச் சார்ந்த முக்கியஸ்தர்கள் எம்முடன் தொடர்ந்தும் இணைந்து வருகின்றனர்.

திருமலை மாவட்டத்தில், சிறுபான்மைச் சமூகம் ஒன்றுபட்டுச் செய்ய வேண்டிய கடமையை, இப்போது சரியாகச் செய்வதாகவே எமக்குப்படுகின்றது. ‘அதைத் தருவோம், இதைத் தருவோம். எமக்கு வாக்குத் தாருங்கள்’ எனக் கேட்கும் காலம் இதுவல்ல.

குற்றஞ் செய்யாதவர்களை கூண்டில் அடைப்பதன் மூலமே, வாக்கு வாங்கியை பெரிதும் கூட்டிக்கொள்ள முடியுமென்ற நம்பிக்கையில் ஒருதரப்பு அலைகின்றது.

சிறுபான்மை மக்கள் ஜனநாயக ரீதியில் ஒன்றுபடும் போது, அவர்களை தட்டிக்கொடுத்து, பக்கபலமாக இருக்க வேண்டிய அரசாங்கம், சிறுபான்மை மக்களை மிதிக்கின்றது. தலைமைகளை ஒடுக்க முயற்சிக்கின்றது. சமூகத்தின் கவலைகளை எமது கவலைகளாக சுமந்துகொண்டு, அதற்கான தீர்வுகளைத் தேடுவதனாலேயே நாம் அடக்கப்படுகின்றோம்.

தோப்பூரில் கூட, ஹாஜா மொஹிடீன் என்பவரை சிறையிலடைத்து வைத்துள்ளனர். சுமார் ஒன்றரை வருடத்துக்குப் பின்னர், இந்தப் புதிய நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளது. எவனோ ஒரு கயவன் செய்த செயலுக்காக, முழுச் சமுதாயத்தையும் பழிவாங்கத் துடிக்கின்றனர். கயவர் கூட்டத்தைக் காட்டிக்கொடுத்தோம். பல சூத்திரதாரிகளை கூண்டோடு அழிக்க உதவினோம். அவர்களின் வலையமைப்பை சிதைப்பதற்கு துணை செய்தோம். எஞ்சியுள்ளவர்களை தண்டிப்பதற்கும் வழி செய்து கொடுத்தோம். இவ்வாறு நல்ல பல காரியங்களைச் செய்து, பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு உதவிய நமது சமுதாயம், இன்னும் ஏன் குறிவைக்கப்படுகின்றது? தலைமைகள் ஏன் துரத்தப்படுகின்றன?

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், எமது கட்சியின் தேசிய அமைப்பாளருமான அப்துல்லாஹ் மஹ்ரூப், நாடாளுமன்றில் மௌனம் காத்தவர் அல்லர். சமுதாயத்துக்கு ஆபத்துக்கள் வந்த போதெல்லாம் தட்டிக்கேட்டவர். அஞ்சாநெஞ்சமுள்ள அவர், சமூகப் பிரச்சினைகளை வென்றெடுக்கும் திராணியுள்ளவர். அச்சம் இல்லாமல் எழுந்து, சிங்கம் போல கர்ஜித்து, நியாயத்துக்காக போராடியவர். இனிவரும் காலங்களிலும் அவர் எமக்குப் பக்கபலமாக இருக்க வேண்டும்.

எனவே, திருமலை மாவட்ட மக்களாகிய நீங்கள், அவரை தேர்ந்தெடுக்க உங்கள் வாக்குகளை அவருக்கு வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்