இலங்கையில் பல அரசாங்கங்களை வெளிநாட்டுத் தூதரகங்களே தெரிவு செய்தன: அனுர குமார திஸாநாயக்க

🕔 July 4, 2020

லங்கையில் பல அரசாங்கங்களை ஆட்சியில் அமர்த்தியது நாட்டு மக்கள் அல்ல எனவும் வெளிநாட்டுத் தூதரகங்களே அரசாங்கங்களை ஆட்சியில் அமர்த்தியதாகவும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தெஹிவளை பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இதன்போது அவர் மேலும்தெரிவிக்கையில்;

“இலங்கையில் தலைவர்களை உருவாக்கவும், அரசாங்கங்களை ஆட்சியில் அமர்த்தவும் இந்திய மற்றும் அமெரிக்க தூதரங்கள் தலையீடுகளை மேற்கொண்டு வருகின்றன. மக்கள் வாக்களிக்கின்றனர். ஆனால் மக்கள் தலைவர்களையும், அரசாங்கங்களையும் தெரிவு செய்வதில்லை.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஈஸ்டர் தாக்குதல்கள், எம்.சி.சி. உடன்படிக்கை என்பனவே பிரதான தொனிப் பொருள்களாக இருந்தன.

நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவின் அணியை சேர்ந்தவர்கள் எம்.சி.சி. உடன்படிக்கையை தோற்கடிக்க தமது அணிக்கு வாக்களிக்குமாறு கூறினார். எனினும் ஆட்சிக்கு வந்த பின்னர், அந்த உடன்படிக்கையை ரத்துச் செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை.

நொவம்பர் மாதம் பதவிக்கு வந்த கோட்டாபய ராஜபக்ஷ இந்த உடன்படிக்கையை ஆராய வேண்டும் எனக் கூறினார். இந்த உடன்படிக்கையை ஆராய புதிய அரசாங்கத்துக்கு தாம் ஆறு மாத காலத்தை வழங்குவதாக அமெரிக்க தூதரகம் தெரிவித்தது.

மே மாதம் அந்த ஆறு மாதங்கள் நிறைவடைந்தது. கொரோனா காரணமாக தேர்தலை நடத்த முடியாமல் போனது. தேர்தல் ஓகஸ்ட் மாதத்துக்குத் தள்ளிப் போனது.

தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அமெரிக்க தூதரகம் புதிய அரசாங்கத்துக்கு ஓகஸ்ட் மாதம் வரை, கால அவகாசத்தை வழங்குவதாக கூறியுள்ளது. இது எதற்காக தேர்தல் முடியும் வரை. அப்படியானால் இது யார் ஆட்சிக்கு கொண்டு வந்த அரசாங்கம்.

எம்.சி.சி. உடன்படிக்கையை கிழித்தெறியுமாறு கூறியே அரசாங்கத்தை மக்கள் ஆட்சிக்கு கொண்டு வந்தனர். ஆனால், ஆட்சிக்கு வந்த அரசாங்கம் எம்.சி.சி். உடன்படிக்கையில் கையெழுத்திடுவதை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் வரை ஒத்திவைத்துள்ளது” என்றார்.

Comments