தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரைச் சாடி, விமல் கருத்து: தேசப்பிரிய ‘நடிகர்’ எனவும் தெரிவிப்பு

🕔 June 28, 2020

தேர்தல் ஆணைக்குழு அலுவலத்தை சுற்றி வளைத்து ஆணைக்குழுவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வருமாறு சிரேஷ்ட அமைச்சரும், பொதுஜன பெரமுன கட்சியின் பொதுத் தேர்தல் வேட்பாளருமான விமல் வீரவன்ச பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

நேற்று சனிக்கிழமை ஊடகவியலாளர்களிடம் பேசிய வீரவன்ச; தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசபிரிய எதிர்க்கட்சிக்கு ஏற்றவாறு விளையாடுவதாக குற்றம் சாட்டினார்.

மேலும், தேசபிரிய நாட்டின் சிறந்த “நடிகர்களில்” ஒருவர் என்றும் எதிர்க்கட்சிகளுக்கு உதவுகிறார் என்றும் அமைச்சர் கூறினார்.

கடந்த காலங்களில் வேட்பாளர்கள் தங்கள் படத்தையும் விருப்பு இலக்கங்களையும் தங்கள் தேர்தல் அலுவலகத்தில் காட்சிப்படுத்த முடியும் என்றாலும், இந்த முறை அதற்கு அனுமதி இல்லை என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் தேர்தல் அலுவலகங்களை அமைக்க போராடி வரும் பிளவுபட்ட எதிர்க்கட்சியை ஆதரிப்பதற்காகவே தேர்தல் ஆணைக்குடு இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் வீரவன்ச கூறினார்.

“கடந்த காலத்தில் தான் ஒரு தவறை செய்ததாக கூறும் தேசப்பிரிய; வரவிருக்கும் தேர்தலில் அந்த தவறை மீண்டும் செய்ய மாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார். அப்படியென்றால் அவர் குழந்தையா?” என்றும் விமல் கேள்வியெழுப்பினார்.

பொதுமக்களை மஹிந்த தேசப்பிரிய தவறாக வழிநடத்த முயற்சிப்பதாக குற்றம்சாட்டிய விமல்; தேர்தல் ஆணைக்குழு அலுவலகத்தை சுற்றி வளைத்து அந்த முயற்சியை தோற்கடிக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்