கூட்டுத் தொழுகை இல்லை; ஒரே நேரத்தில் 30 பேருக்கு மட்டும் அனுமதி: 15ஆம் திகதி பள்ளிவாசல்களைத் திறக்க தீர்மானம்

🕔 June 3, 2020

ல்வேறு நிபந்தனைகளுக்கு மத்தியில் எதிர்வரும் 15ஆம் திகதி தொழுகைக்காக பள்ளிவாசல்கள் திறக்கப்படவுள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.

மட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளைத் தவிர, நாட்டிலுள்ள ஏனைய பள்ளிவாசல்கள் சுகாதார வழிமுறைகளுக்கு உட்பட்டவாறு திறக்கப்படவுள்ளன.

மட்டுப்படுத்தப்பட்ட பகுதி – காலத்துக்கு காலம் மாறுபடும் என்பதால், அது குறித்து சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் உள்ளிட்ட சுகாதாரத் தரப்பினரிடம் கேட்டறிந்து கொள்ள முடியும் என, வக்பு சபை தெரிவித்துள்ளது.

வணக்கஸ்தலங்கள் தொடர்பாக கடந்த மாதம் 27 ஆம் திகதி சுகாதார அமைச்சினால் வௌியிடப்பட்ட இறுக்கமான வழிகாட்டல்களின் அடிப்படையில், இலங்கை வக்பு சபை இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

பள்ளிவாசல்களை திறப்பதற்கான வழிமுறைகளைக் கட்டாயமாக பள்ளிவாசல் நிர்வாகிகள் பின்பற்ற வேண்டும் என முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிவாசல்களை மீளத் திறப்பதற்கு முன்னர் பொது சுகாதார வைத்தியரின் முழுமையான கண்காணிப்பில், அவை சுத்திகரிக்கப்பட வேண்டும்.

பள்ளிவாசல்களுக்குள் நுழைவதற்கு ஒரு வாயிலை மாத்திரம் பயன்படுத்த வேண்டும்.

தொழுகையில் ஈடுபடுவோர் ஒரு மீட்டர் இடைவௌியைப் பேண வேண்டும்.

பள்ளிவாசல்களின் நுழைவாயிலில் கைகளை கழுவுவதற்கான வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

சுகாதார அமைச்சின் வழிகாட்டல்களுக்கு அமைவாக வழமையான அல்லது விசேட கூட்டுத்தொழுகைகளுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது.

ஐவேளை கூட்டுத்தொழுகை மற்றும் ஜூம்மா தொழுகை என்பன மறு அறிவித்தல் வரை அனுமதிக்கப்பட மாட்டாது.

ஒரே நேரத்தில் 30 அல்லது அதற்கும் குறைவானவர்களே தனிநபர் தொழுகைகளுக்காக பள்ளிவாசல்களுக்குள் அனுமதிக்கப்பட வேண்டும்

பள்ளிவாசலுக்கு வரும் ஒவ்வொருவரும் தன்னுடைய தொழுகை விரிப்பை வீட்டில் இருந்து எடுத்துவர வேண்டும்

என முஸ்லிம் சமய கலாசார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்