ஐ.தே.கட்சியின் தீர்மானத்துக்கு அமையவே, சஜித் தலைமையில் போட்டியிடுகிறோம்; அகிலவின் அறிவுப்புக்கு சுஜீவ பதிலடி

🕔 May 27, 2020

க்கிய தேசியக் கட்சியின் தீர்மானத்துக்கு அமையவே, ஐக்கிய மக்கள் சக்தியை உருவாக்கி, அந்தக் கட்சியினூடாக எதிர்வரும் பொதுத் தேர்தலில் தாம் போட்டியிடுவதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளருமான சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.

வேறு கட்சிகளின் ஊடாக பொதுத் தேர்தலில் போட்டியிடும் ஐ.தே.கட்சி உறுப்பினர்களின் அங்கத்துவம் ரத்துச் செய்யப்படும் என, அந்தக் கட்சியின் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் அறிவித்துள்ள நிலையில், மேற்படி கருத்தை சுஜீவ சேனசிங்க வெளியிட்டுள்ளார்.

சுஜீவ சேனசிங்க மேலும் கூறுகையில்;

“ஐக்கிய தேசியக் கட்சியின் யாப்புக்கு அமைய – கட்சியின் செயற் குழுவின் தீர்மானத்தையே நாம் நடைமுறைப்படுத்தினோம்.

ஐக்கிய மக்கள் சக்தியை உருவாக்கி அதன் தலைவராக சஜித் பிரேமதாஸவையும் பொதுச்செயலாளராக ரஞ்சித் மத்துமபண்டாரவையும் நியமித்து – பரந்த கூட்டணியின் கீழ் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதே ஐ.தே.கட்சி செயற்குழுவின் குழுவின் இறுதி தீர்மானமாகும்.

அந்தத் தீர்மானத்துக்கு எதிராக ரவி கருணாநாயக்க, அகிலவிராஜ் காரியவசம் மற்றும் ரணில் விக்ரமசிங்க செய்யப்படுகின்றனர். அவர்களுக்கு எதிராக நாம் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க முடியும். எனினும் நாம் அவ்வாறு செய்யப்போவதில்லை. ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளும் பொறுப்பை நாம் மக்களிடம் ஒப்படைக்கவுள்ளோம்.

ரணில் விக்ரமசிங்க, அகில விராஜ் காரியவசம் மற்றும் ரவி கருணாநாயக்க ஆகியோர் தற்போது ராஜபக்ஷ குடும்பத்தாருடன் உள்ளனர்.

இந்த குழுவினர் தற்போது மொட்டுடன் இணைந்து செயற்படுகின்றனர். அதனை நாம் எதிர்க்கவில்லை. ரணில் விக்ரமசிங்க எப்போதும் அவ்வாறுதான் செயற்பட்டார்.

யானையை நாம் எடுப்போம். ராஜபக்ஷ குடும்பத்தினரின் சகோதரர் போலவே ரணில் விக்ரமசிங்கவும் உள்ளார்; அதனை நாமும் அறிவோம்.

தொடர்பான செய்தி: வேறு கட்சிகளின் ஊடாக தேர்தலில் போட்டியிடும், ஐ.தே.கட்சி உறுப்பினர்களின் அங்கத்துவம் ரத்தாகும்: செயலாளர் அகில

Comments

புதிது பேஸ்புக் பக்கம்