முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கைது: அதற்கு முன்னதாக ‘பேஸ்புக்’ நேரலை வந்து, தன்னிலை விளக்கம்

🕔 April 13, 2020

– முன்ஸிப் அஹமட் –

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க இன்று திங்கட்கிழமை இரவு மிரிஹான பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள வேலையில் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தார் எனும் குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மாதிவெலயிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வீட்டில் ரஞ்சன் ராமநாயக்க தங்கியிருந்த போது, அங்கு வந்த பொலிஸார் அவரை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

இதன்போது, ரஞ்சன் ராமநாயக்க தனது பேஸ்புக் பக்கத்தினூடாக நேரடிலை ஒளிபரப்பு ஒன்றினை வழங்கியிருந்தார்.

அதில் அவர் பேசுகையில்; “மக்களுக்காக மீண்டும் சிறை செல்லவேண்டியுள்ளது. வெளியில் பொலிஸார் காத்துக்கொண்டிருக்கின்றனர் – என்னைக் கைது செய்வதற்காக.

நீதிக்கு விரோதமாகவும், அரச கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும் கூறி, மீண்டுமொருமுறை என்னைக் கைது செய்ய வந்துள்ளனர்.

நான் மக்களுக்கு சொல்வது, நான் சிறை சென்றுள்ளேன். தொடர்ந்தும் சிறை செல்வதற்கு தயாராகவுள்ளேன். பிரச்சினையில்லை. தேவரப்பெருமவுக்கும் வழக்கொன்று பதிவுசெய்யப்பட்டுள்ளது. இப்போது நான் மிரிஹான பொலிஸுக்கு செல்லவுள்ளேன். அங்கு சென்று பார்ப்போம் என்ன நடக்கின்றது என்று.

கடந்த சில தினங்களாக எனது பணத்தில் மக்களுக்கு உதவி செய்தேன். எல்லா பிரதேசங்களுக்கும் சென்று அரிசி பகிர்ந்தளித்தேன். கலைஞர்களுக்கும் கொடுத்தேன். மீண்டும் சிறை செல்ல வேண்டி ஏற்பட்டுள்ளது.

பரவாயில்லை. களவெடுத்தமைக்காகவோ, கொலை செய்தமைக்காகவே இது நடக்கவில்லை. அரிசி பகிர்ந்தமைக்காக, நிவாரணம் வழங்கியதற்காகத்தான் நடக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

வீடியோ

Comments

புதிது பேஸ்புக் பக்கம்