தேர்தல் கால சுவாரசியம்: ‘யு’ டேர்ன் (U turn) எடுத்த ‘லொயிட்ஸ்’ ஆதம்லெப்பை; இன்னும் திறந்திருக்கும் மக்கள் காங்கிரஸின் கதவு

🕔 March 18, 2020

– மரைக்கார் –

01)

கில இலங்கை மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தரும் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான சட்டத்தரணி எம்.ஏ. அன்சிலுக்கு தொலைபேசி அழைப்பொன்று வருகிறது. எதிர்முனையில் அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினரும் தொழிலதிபருமான ‘லொயிட்ஸ்’ ஆதம் லெப்பை. இருவருக்குமிடையில் உரையாடல் இடம்பெறுகிறது. ஒரு கட்டத்தில்; அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக அம்பாறை மாவட்டத்தில் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு தனக்கு சந்தர்ப்பம் வேண்டும் என்று ‘லொயிட்ஸ்’ ஆதம்லெப்பை கூறுகிறார். தலைவர் றிசாட் பதியுதீனிடம் பேசிவிட்டு சொல்கிறேன் என்கிறார் அன்சில்.

02)

‘லொயிட்ஸ்’ ஆதம்லெப்பை, கடந்த பொதுத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக போட்டியிட்டவர். இவர் ஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளுர் பிரமுகர், தற்போது அட்டாளைச்சேனை பிரதேச சபையில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பான உறுப்பினராக உள்ளார்.

இவர் இம்முறை பொதுத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடும் விருப்பத்துடன் உள்ளார். இந்த விருப்பத்தை ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவிடம் ஆதம்லெப்பை கூறியபோது, மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீமிடம் பேசுமாறும், அவர் விரும்பினால்தான் வேட்பாளராக நியமிக்க முடியும் என்றும் சஜித் பதிலளித்துள்ளார்.

இதனால் ஆதம்லெப்பை கடுப்பாகியுள்ளார். என்னை நியமிப்பதற்கு ஹக்கீமிடம் ஏன் கேட்க வேண்டும் என்று நினைத்த அவர்; நான் தேர்தலில் போட்டியிட்டுக் காட்டுகிறேன் பார், என்கிற மனநிலையுடன்தான், அன்சிலுக்கு தொலைபேசி அழைப்பெடுத்து, மக்கள் காங்கிரஸில் போட்டியிடுவதற்கான சந்தர்ப்பத்தைக் கேட்டுள்ளார்.

03)

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரிடம் ‘லொயிட்ஸ்’ ஆதம்லெப்பை விவகாரம் தொடர்பில் அன்சில் பேசியுள்ளார். அப்போது; அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பாலமுனையைச் சேர்ந்த முன்னாள் நீதிபதி கலாநிதி ஏ.எல். அப்துல் கபூருக்கு, பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு சந்தர்ப்பம் வழங்குவதாக தான் வாக்குறுதி வழங்கியுள்ளதாகவும், அந்த உறுதிமொழியை தன்னால், மீற முடியாது என்றும் றிசாட் பதியுதீன் கூறியுள்ளார். வேண்டுமென்றால், இது குறித்து கலாநிதி கபூரிடம் பேசிக் கொள்ளுமாறும், மக்கள் காங்கிரஸ் தலைவர் சொல்லியுள்ளார்.

04)

மக்கள் காங்கிரஸ் சார்பாக தேர்தலில் போட்டியிட ‘லொயிட்ஸ்’ ஆதம்லெப்பை விருப்பம் தெரிவித்துள்ளமை குறித்து, கலாநிதி கபூரிடம் மக்கள் காங்கிரஸ் பிரமுகர்கள் பேசியிருக்கின்றனர். அதன்போது கட்சியின் நலன் கருதி, தனது இடத்தை ஆதம்லெப்பைக்கு வழங்க பெருந்தன்மையுடன் கலாநிதி கபூர் முன்வந்துள்ளார்.

05)

இந்த தகவலை ‘லொயிட்ஸ்’ ஆதம்லெப்பையிடம் தெரிவித்து, மக்கள் காங்கிரஸில் போட்டியிடுவதற்கான சந்தர்ப்பத்தை அவருக்கு வழங்க, தமது கட்சி தயாராக உள்ளதாக கூறுவதற்கு, அந்தக் கட்சியின் முக்கியஸ்தர்கள் தயாராகிய நிலையில், ஒரு செய்தி கிடைக்கிறது…

ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்புமனுவில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக ‘லொயிட்ஸ்’ ஆதம்லெப்பை கையொப்பம் இட்டு விட்டார் என்பதுதான் அந்தச் செய்தியாகும்.

06)

இதனால் இந்த விவகாரத்துடன் சம்பந்தப்பட்ட பலரும் கவலையடைந்துள்ளனர். ‘லொயிட்ஸ்’ ஆதம்லெப்பையைத் தொடர்பு கொண்ட மக்கள் காங்கிரஸின் பிரமுகர்கள்; அவர் கையொப்பமிட்ட வேட்புமனுவிலிருந்து விலகி வந்து, மக்கள் காங்கிரஸ் சார்பாக போட்டியிடுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், ஆதம்லெப்பை இதுவரை கையொப்பமிட்ட வேட்புமனுவிலிருந்து விலகவில்லை என்றே கூறப்படுகிறது.

07)

லொயிட்ஸ் ஆதம்லெப்பைக்காக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கதவு திறந்தே உள்ளது என்று, ‘புதிது’ செய்தித்தளத்துக்குத் தெரிவித்த அந்தக் கட்சியின் பிரமுகர் ஒருவர்; “ஆதம்லெப்பை எங்களுடன் இணைந்தால், நாம் மிகுந்த மகிழ்ச்சியடைவோம்” என்றும் கூறினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்