“பிரிந்து வாக்களிக்களியுங்கள்” என, சில உலமாக்கள் சொல்ல வைக்கப்படுகின்றனர்: முன்னாள் அமைச்சர் றிசாட் குற்றச்சாட்டு

🕔 March 15, 2020

“இனங்களுக்கிடையே நல்லுறவையும் ஐக்கியத்தையும் எதிர்கால சந்ததியினரின் நல்வாழ்வையும் சிந்திக்கும் ஒவ்வொரு பிரஜையும் மிகவும் நிதானமாகவும் பொறுப்புணர்வுடனும் இந்தத் தேர்தலில் வாக்களிக்க வேண்டும்”.

“சிறுபான்மைச் சமூகம் மாத்திரமின்றி, பெரும்பான்மை மொழி பேசும் பௌத்த, கத்தோலிக்க மக்களுக்கும் இந்த கடப்பாடு பெரிதும் உண்டு” என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

கட்சியின் தேசிய அமைப்பாளர் அப்துல்லாஹ் மஹ்ரூப் தலைமயில், கிண்ணியா, பொது நூலக மண்டபத்தில், நேற்று சனிக்கிழமை மாலை இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனக் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

“சமூகப்பற்று உள்ளவர்களையும் இன ஐக்கியத்துக்கு உழைத்தவர்களையும் தெரிந்தெடுத்து, வாக்களித்து, அவர்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்பவேண்டிய தேவை எல்லோருக்கும் இருக்கின்றது.

சிறுபான்மைச் சமூகத்தைப் பொறுத்தவரையில் குறிப்பாக, முஸ்லிம் சமூகத்தவருடைய வாக்குகளை சுக்குநூறாக்கும் பணியில், பல்வேறு திட்டமிட்ட முயற்சிகளும், மக்களை நாளுக்குநாள் ஏமாற்றும் படலங்களும் மிகத் தீவிரமாக அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

அந்தவகையில், முஸ்லிம் பிரதேசங்களில் வாக்குகளை சிதைப்பதற்காக வியாபாரிகள் களமிறக்கப்பட்டுள்ளனர். அதுமாத்திரமின்றி, எதிர்வரும் நாட்களில், பேரினவாதத்துக்கு சாமரை வீசும் சுயேச்சைக் குழுக்களும் களமிறங்கும் முயற்சிகள் இடம்பெறும்.

முஸ்லிம்கள் பரந்துபட்ட கட்சிகளில் அங்கம் வகிக்க வேண்டுமென்ற கோஷத்துடன் ஒருகூட்டம் தற்போது புறப்பட்டுள்ளது.

‘பிரிந்து வாக்களியுங்கள். அப்போதுதான் எமக்கு நன்மை’ என சில உலமாக்கள் கூறுகின்றனர். இவர்கள் அவ்வாறு சொல்ல வைக்கப்பட்டுள்ளனர். அதனைத்தான் நமக்கு ஒப்புவிக்கின்றனர்.

அதுமாத்திரமின்றி, பேரினவாதிகளால் தமக்குச் சொல்லப்பட்டவற்றை ஒப்புவிக்க புத்திஜீவிகளும் புறப்பட்டுள்ளனர். எனவேதான், சிறுபான்மைக் கட்சிகளை ஒன்றுபடுத்தும் பணியில், நமது கட்சியும் பெரும்பங்காற்றி வருகின்றது.

எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியை பிளவுபடுத்தும் பணியில் பாரிய சதியொன்று முன்னெடுக்கப்படுகின்றது. இதில் பெரிய பின்னணியே இருக்கின்றது. இதன்மூலம் தங்கள் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கும் அரசாங்கத்தைக் கைப்பற்றி, ஆட்சியை நிலைநிறுத்துவதற்குமான திட்டங்களும் வகுக்கப்பட்டுள்ளன.

முஸ்லிம்களைப் பற்றியும் அவர்களின் உயிர் நாடியான குர்ஆன், பள்ளிவாசல்கள் மற்றும் பெருமானார் (ஸல்) தொடர்பாக கேவலமாகச் சித்தரித்து, அபாண்டங்களைப் பரப்பி, பழிசுமத்திவந்த கயவர் கூட்டத்துக்கு, உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் மிகவும் வாய்ப்பானதாக அமைந்தது.

சரியான தருணத்தில் மிகச் சரியாக இனவாதத் துரும்பை அவர்கள் கையிலெடுத்து ஆடினர்.

இந்த நாட்டில் ஏனைய இனங்களுடன் நல்லுறவு பேணி வாழும் முஸ்லிம்களை தனிமைப்படுத்தினர், கேவலப்படுத்தினர். கொடுமைப்படுத்தினர். அதுமாத்திரமின்றி, பொருளாதாரத்தை அழித்தனர். அப்பாவி உயிர்களையும் பலியெடுத்தனர். தாக்குதலுடன் துளியளவும் சம்பந்தமில்லாத முஸ்லிம்களையும் முஸ்லிம் அரசியல்வாதிகளையும் மோசமாகத் தூசித்தனர்.

குறிப்பாக, என்னை இலக்குவைக்கத் தொடங்கினர். எனது அமைச்சுப் பதவியைப் பறித்தெடுப்பதற்காக நம்பிக்கையில்லாப் பிரேரணையும், உண்ணாவிரதப் போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன. வஹ்ஹாபிசம் என்னவென்று தெரியாத இனவாத அரசியல்வாதிகளான உதயகம்மன்பில, விமல் வீரவன்ச ஆகியோர், கொழும்பில் வஹ்ஹாபிசத்துக்கு எதிராக மாநாடு நடத்தினர். டொக்டர் ஷாபி மீது இனவாதத் தேரர்கள் பெரும்பழி சுமத்தினர்.

இவை எல்லாம் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அவர்கள் விரும்புகின்ற ஒருவரை ஜனாதிபதியாக்கும் முன்னேற்பாடாகவே இருந்தன. அதனையும் அவர்கள் திட்டமிட்டு சரியாகச் செய்ததுடன், இனவாத்தின் உச்சக்கட்ட பிரச்சாரத்தை மேற்கொண்டதனால் தமது நோக்கத்தை இலகுவில அடைந்தனர்.

இப்போது மீண்டும் இனவாதத்தைப் பரப்பி, நாடாளுமன்ற ஆட்சியை தமது கைக்குள் கொண்டுவருவதும், மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்று, சிறுபான்மை மக்களை தாம் நினைத்த மாத்திரத்தில் ஆட்டுவிப்பதுமே இவர்களின் நோக்கம் ஆகும்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்