500 மில்லியன் ரூபா நிதி மோசடியில் ஈடுபட்ட, வீடமைப்பு அதிகார சபை அதிகாரிகள் 11 பேர், பணியிலிருந்து இடைநிறுத்தம்

🕔 February 25, 2020

– அஸ்ரப் ஏ சமத் –

வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் ஹம்பாந்தோட்ட காரியாலயத்தில், கடந்த ஆட்சியின் போது மேற்கொள்ளப்பட்ட 500 மில்லியன் ரூபா நிதி மோசடியுடன் தொடர்புடைய 11 அதிகாரிகள் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, மேற்படி மோசடி தொடர்பில் ஈடுபட்டவர்களிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினா் விசாரனைகள் மேற்கொண்டதை அடுத்து, குறித்த 11 அதிகாரிகளையும்  பொலிஸார் கைது செய்து மேலதிக விசாரனைகளையும்  மேற்கொண்டு வருகின்றனா். 

ஹம்பாந்தோட்ட மாவட்டத்தில் முன்னைய அரசாங்கத்தின் ஆட்சியில் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சா் சஜித் பிரேமதாசாவின் ‘செமட்ட செவன’  வீடமைப்புக் கிராமங்களை நிர்மாணிக்கவென தனியாா் காணிகள் கொள்முதல் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தன. 

இந்த நிலையில் இக்காணி்கள் கொள்முதல் செய்யப்பட்ட நடவடிக்கையில் பாரிய ஊழல் – மேசடிகள் இடம்பெற்றிருந்தமை தெரியவந்துள்ளதாக, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவா் ரேனுகா பெரோ ஊடகங்களுக்கு தெரிவித்தாா்.   

ஹம்பாந்தோட்ட மாவட்டத்தில் தனியாரிடமிருந்து காணிகளைக் கொள்முதல் செய்யும்போது, ஹம்பாந்தோட்டை மாவட்டக் அலுவலகத்தில் கடமையாற்றிய அதிகாரிகள் இனைந்து 500 மில்லியன் ரூபாவை மோசடி செய்துள்ளனா்.

இவ் விடயம் சம்பந்தமாக பொதுமக்களும் காணி உரிமையாளர்களும் வீடமைப்பு  அதிகார சபையின் தலைமைக் காரியாலயத்தின் கணக்காய்வு பிரிவினருக்கு முறையிட்டதையடுத்து, உரிய பரிசீலனைகள் மேற்கொள்ளப்பட்டடன.

அப்போது 500 மில்லியன் ரூபாவுக்கு அதிகமான தொகை இவ்விவகாரத்தில் கையாடப்பட்டுள்ளதாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இவ் விடயம் சம்பந்தமாக  தேசிய வீடமைப்பு அதிகார சபையின் ஹம்பாந்தோட்ட மாவட்ட அலுவலகத்தின் முகாமையாளா், கணக்காளா் மற்றும் உதவிக் கணக்காளா் உட்பட 11 அதிகாரிகள் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனா்.

மேற்படி விடயமாக பொலிஸில் முறைப்பாடு செய்ப்பட்டதையடுத்து, குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டதை அடுத்து, 11 அதிகாரிகளையும்  பொலிஸார் கைது செய்து மேலதிக விசாரனைகளையும்  மேற்கொண்டு வருகின்றனா்.   

Comments

புதிது பேஸ்புக் பக்கம்