கிழக்கிலங்கை முஸ்லிம்களின் நாட்டார் பாடல்கள்: அழிவின் விளிம்பில் வாய்வழி இலக்கியம்

🕔 January 30, 2020

– யூ.எல். மப்றூக் –

னது மனதுக்குப் பிடித்த பெண்னை நினைத்து, ஏங்கித் தவிக்கும் ஆண் ஒருவனின் உள்ளக் கிடக்கையை வெளிப்படுத்தும் கீழுள்ள வரிகள் இலங்கையின் கிழக்கு மாகாண முஸ்லிம்களின் நாட்டார் பாடலொன்றின் சில அடிகளாகும்.

“மாடப் புறாவே
மாசுபடாச் சித்திரமே
கோடைக் கனவினிலே
கொதிக்கிறன்டி உன்னால…”

“நினைத்தால் கவல
நித்திரையில் ஓர் நடுக்கம்
நெஞ்சில் பெருஞ்சலிப்பு – என்ற
நீலவண்டே ஒன்னால…”

கிழக்கு இலங்கை முஸ்லிம்களின் நாட்டார் பாடல்களுக்கு – இலங்கையின் தமிழ் இலக்கியத்தில் சிறப்பானதொரு இடம் உள்ளது. அந்தப் பாடல்களுக்கென்று சில ராகங்கள் உள்ளன. தாலாட்டுப் பாடல், நையாண்டிப் பாடல், தொழில் பாடல், காதல் பாடல் மற்றும் தத்துவப் பாடல்களென்று, கிழக்கு இலங்கை முஸ்லிம்களின் நாட்டார் பாடல்களில் பல வகை உள்ளன.

ஒரு காலத்தில் கிழக்கு இலங்கை முஸ்லிம்களின் வாழ்க்கையின் அநேக நிகழ்வுகளில் பாடப்பட்டு வந்த நாட்டார் பாடல்கள், இப்போது கிட்டத்தட்ட மறைந்து போயிற்று. இந்தப் பாடல்களை அதன் ராகத்தோடும் உயிர்ப்புடனும் பிழையின்றியும் பாடக்கூடியவர்கள் இல்லாமல் போய் விட்டார்கள்.

நாட்டார் பாடல்களுக்கு சில அடிப்படைப் பண்புகள் உள்ளன என்கிறார் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மொழித்துறைத் தலைவர் பேராசிரியர் ரமீஸ் அப்துல்லா.

“அவை வாய்வழியாகப் பரவியதாக இருக்கும், மரபுவழிப்பட்டதாக இருக்கும், அந்தப் பாடல்களின் ஆசிரியர்கள் யார் என்று தெரிவதில்லை, அவ்வாறான பாடல்களுக்கு சில ஓசை வடிவங்கள் இருக்கும். அவையே நாட்டார் பாடல்களுக்கான அடிப்படைகளாகும்,” என்று பேராசிரியர் ரமீஸ் அப்துல்லா கூறுகின்றார்.

“கிழக்கிலங்கை முஸ்லிம்களின் நாட்டார் பாடல்கள் மறைந்து போகும் நிலை ஏற்பட்டமைக்கு, வாழ்க்கை முறையில் ஏற்பட்ட மாற்றங்கள் பிரதான காரணங்களாக உள்ளன. உதாரணமாக பாரம்பரிய விளையாட்டுகள் இல்லாமல் போனமை, வேளாண்மை போன்ற தொழில்கள் இயந்திர மயமாக்கப்பட்டமை, நாட்டார் பாடல்கள் இல்லாமல் போனமைக்கு முக்கிய காரணங்களாகும்” என்று விவரிக்கின்றார் ரமீஸ் அப்துல்லா.

பேராசிரியர் ரமீஸ் அப்துல்லா

“1980களில் மத்திய கிழக்கு நாடுகளுக்கு முஸ்லிம் பெண்கள் வீட்டுப் பணிப்பெண்களாக செல்லத் தொடங்கியதை அடுத்து, அறுவடைகளிலும், வேளாண்மை நடவடிக்கைகளிலும் பெண்கள் ஈடுபடுவது இல்லாமல் போனது. அதனால், அச்சமயங்களில் அந்தப் பெண்கள் பாடும் நாட்டார் பாடல்களும் இல்லாமல் போயின.”

“அதேபோன்று இனப் பிரச்சனையும் யுத்தமும் ஏற்பட்ட பிறகு, காடுகளிலும் வயல் வெளிகளிலும் மக்கள் தங்கியிருப்பதும் இல்லாமல் போனது. அதனால், அவ்வாறான சூழ்நிலைகளில் அந்த மக்கள் நாட்டார் பாடல்களைப் பாடும் வழங்கமும் இல்லாமல் போயிற்று” என்று, கிழக்கு முஸ்லிம்களின் நாட்டார் பாடல்கள் அழிவடைந்தமைக்கான காரணங்களைக் கூறுகின்றார் பேரசிரியர் ரமீஸ் அப்துல்லா.

குறிப்பாக, ஓய்வு நம்மிடம் இல்லாமல் போமைதான், இந்த வகை நாட்டார் பாடல்கள் மறைந்து போகக் காரணம் என்றும் அவர் தெரிவித்தார்.

அதுபோலவே, கிராமங்கள் இல்லாமல் போனமைதான் கிழக்கிலங்கை முஸ்லிம்களின் நாட்டார் பாடல்கள் மறைந்து போனமைக்கு அடிப்படையான காரணம் என்கிறார் கவிஞர் சோலைக்கிளி.

“பாமர மனதிலிருந்துதான் ஆழமான, அகலமான பாடல்கள் வந்துள்ளன. அறிவுக்கும் கவித்துவத்துக்கும் தொடர்பில்லை. எழுத, வாசிக்கத் தெரியாத முன்னோர்கள்தான் நாட்டார் பாடல்களைப் பாடியுள்ளனர். ஆனால், அந்தப் பாடல்களை ஆய்வு செய்து, அதன் மூலம் பலர் பல்கலைக்கழங்களில் கலாநிதி (முனைவர்) பட்டங்களையெல்லாம் பெற்றுள்ளனர்,” என்கிறார் சோலைக்கிளி.

பெண்ணொருத்தி தனக்கு – ஆண் ஒருவன் செய்யும் கொடுமைகளை சொல்வது போல் கிழக்கிலங்கை நாட்டார் பாடலொன்று உள்ளது எனக் கூறும் கவிஞர் சோலைக்கிளி, அதனைப் பாடிக் காட்டினார்.

“என் செல்ல லாத்தாண்டே
எனக்கிந்த சோகையன் வேணாண்டே…

காக்கொத்தரிசில கஞ்சி வடிக்கிறான்
காறாத்தல் சீனில கணக்குப் பாக்கிறான்

ஓரா மீன் ஆக்கினா ஓடி ஒளிக்கிறான்
ஒட்டி மீன் ஆக்கினா சட்டிய ஒடக்கிறான்

வேலிக்காலுக்குள்ள மூத்திரம் பெய்யுறான்
எண்ணெய்த் தலையில மண் அள்ளிப் போடுறான்

என் செல்ல லாத்தாண்டே
எனக்கிந்த சோகையன் வேணாண்டே….”

“இந்தப் பாடலை, படிப்பறிவில்லாத முன்னோர்கள்தான் பாடியிருக்கிறார்கள்”.

“ஆண் – பெண்ணுக்குச் செய்யும் கொடுமையின் உச்சத்தை விவரிப்பதற்கு, இந்தப் பாடலில் வரும், ‘எண்ணெய்த் தலையில மண் அள்ளிப் போடுறான்’ என்கிற வரி போதுமானதாகும். இப்படியான கவிகளை இப்போது காணவோ கேட்கவோ முடிவதில்லை. காரணம் இப்போதெல்லாம் அறிவை வைத்துக் கொண்டுதான் கவிதை எழுதுகின்றார்கள். ஆனால், நமது மூதாதையர்களின் நாட்டார் பாடல்களில் இயல்பும், கற்பனைகளும்தான் வழிந்தோடியிருந்தன,” என்று நாட்டார் பாடலின் பெருமையை கவிஞர் சோலைக்கிளி விவரித்தார்.

படைப்புகளும், படைப்பிலக்கியங்களும் நாகரீக வளர்ச்சிக்கேற்ப மாறுகின்றமை போல், கிழக்கிலங்கை முஸ்லிம்களின் நாட்டார் பாடல்களும் மாறி, மறைந்து போயிற்று என்று கூறும் சோலைக்கிளி “அதனை யாரும் திட்டமிட்டு இல்லாமல் செய்யவில்லை” என்கிறார்.

கவிஞர் சோலைக்கிளி

“கிழக்கு முஸ்லிம்களின் நாட்டார் பாடல்கள் போல், இப்போது சிலர் பாடினாலும், அவை நாட்டார் பாடல்களின் தரத்துக்கு வரவில்லை. ஏனென்றால், நமது வாழ்வியல் மாறிப் போய்விட்டது. நமது மூதாதைகள் பார்த்த பூமி இப்போது இல்லை. நாட்டார் கவி பாடும்போது, அந்த மனிதர்கள் பார்த்த பூமியை நாம் இப்போது காண முடியாது. அந்த சூழல் இல்லை, அந்தக் காற்று இல்லை, அந்த கடற்கரை இல்லை, அந்த மரங்கள் இப்போது இல்லை. எனவே, அந்த நாட்டார் பாடல்களைப் போல், இப்போது நம்மால் இயற்றிப் பாட முடியாது” என்கிறார் கவிஞர் சோலைக்கிளி.

கிழக்கிலங்கை முஸ்லிம்களின் நாட்டார் பாடல்கள் மறைந்து போகும் நிலைமை ஏற்பட்டபோது, அந்தப் பாடல்களை தேடிக் கண்டுபிடித்து, அவற்றினை எழுதி புத்தகங்களாக்கும் முயற்சியில் பலர் ஈடுபட்டனர். அவர்களில் முக்கியமானவர்களாக ஆ.மு. சரிபுத்தீன், வி.சி. கந்தையா, பேராசிரியர் சு. வித்தியானந்தன், காரைதீவைச் சேர்ந்த பேராசிரியர் ஈ. பாலசுந்தரம், எஸ். முத்துமீரான் மற்றும் எஸ்.எச்.எம். ஜெமீல் உள்ளிட்ட பலரைக் குறிப்பிட முடியும் என்கிறார் பேராசிரியர் ரமீஸ் அப்துல்லா.

ஆயினும், இவ்வாறு கிழக்கிலங்கை முஸ்லிம்களின் நாட்டார் பாடல்களை எழுத்து வடிவமாக்கும் நடவடிக்கைகளின்போது, சில பாடல்களில் தொகுப்பாளர்கள் அவர்களின் சொற்களையும் சேர்த்துள்ளார்களா என்கிற ஐயம் ஏற்படுவதாகவும் ரமீஸ் அப்துல்லா தெரிவிக்கின்றார்.

கிழக்கு முஸ்லிம்களின் நாட்டார் பாடல்களை தேடித் தொகுத்து பல்வேறு நூல்களாக வெளிட்டவர்களில் முக்கியமானவர் அம்பாறை மாவட்டம் நிந்தவூரைச் சேர்ந்த புகழ்பெற்ற கவிஞர் எஸ். முத்துமீரான். இவர் பிரபல சட்டத்தரணியுமாவார்.

கிழக்கிழலங்கை முஸ்லிம்களின் நாட்டார் பாடல்களை மிக அதிகமாக தொகுத்துள்ளதோடு, கிராமத்து மணம் வீசும் சிறுகதை நூல்களையும் எழுதியுள்ள கவிஞர் முத்துமீரானை பிபிசி தமிழ் சந்தித்துப் பேசியது.

இதன்போது “முஸ்லிம் சமூகத்தினுள் இருந்த பல அறிஞர்கள் கூட, நாட்டார் பாடல்களை தொகுப்பதில் ஆர்வம் காட்டவில்லை” என்று முத்துமீரான் கவலை வெளியிட்டார்.

மேலும் நாட்டார் பாடல்களைத் தொகுக்கும்போது, அதற்காக தான் எடுத்துக் கொண்ட சிரமங்கள் குறித்தும் அவர் பேசினார்.

“மாம்பழமே தேன்கதலி
மலர் வருக்க செவ்விளனி
தேன்கதலி வான் கரும்பே – என்ற
சீதவியே நான் போய் வரட்டோ?

என்று, கணவன் ஒருவன் தன் அன்புக்குரிய இளம் மனைவியிடம் பயணம் கூறி விடைபெறுவது போல் ஒரு நாட்டார் பாடல் வழக்கில் இருந்தது.

ஆனாலும் அந்தப் பாடலில் வரும் ‘வான் கரும்பே’ என்ற சொல் சரியானதுதானா? என்கிற சந்தேகம் தோன்றியது. ஒரு தடவை இந்தியா சென்றிருந்த நான், கவிக்கோ அப்துல் ரகுமானிடம் இந்தப் பாடல் குறித்து பேசியபோது, ‘வான் கரும்பே’ எனும் சொல் பொதுத்தமானதாக இல்லை என்று கூறினார். இந்த நிலையில் அந்தப் பாடலை சரியாகத் தெரிந்த ஒருவர், அம்பாறை மாவட்டம் பொத்துவில் பிரதேசத்தில் இருப்பதாகக் கேள்விப்பட்டேன்.

அதனையடுத்து நண்பர் ஒருவருடன் பொத்துவில் சென்று அந்தப் பாடலைப் பாடப் பாடக்கூடியவரைச் சந்தித்தோம். அப்போது அந்தப் பாடலில் வரும் ‘வான் கரும்பே’ எனும் சொல் தவறானது என்றும் ‘வெண் கரும்பே’ என்பதுதான் சரியான சொல் என்றும் அவர் கூறினார்.

கவிஞர் முத்துமீரான்

இது குறித்து பின்னர் கவிக்கோ அப்துல் ரகுமானுக்கு நான் கடிதம் ஒன்று எழுதினேன். ‘வெண் கரும்பே’ எனும் சொல் சரியாக இருக்கும் என்று கவிக்கோ அப்துல் ரகுமான் பதில் எழுதியிருந்தார்” என்றார் முத்துமீரான்.

இதேவேளை, இவ்வாறான நாட்டார் பாடல்களை தொகுத்துப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு, ஒலுவிலில் அமைந்துள்ள தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு உள்ளது என்றும், ஆனால், அவ்வாறான பொறுப்பை தென்கிழக்குப் பல்கலைக்கழகம் நிலைவேற்றத் தவறி விட்டது என்றும் கவிஞர் முத்துமீரான் குற்றம்சாட்டினார்.

“தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஸ்தாபகரான முன்னாள் அமைச்சர் மறைந்த எம்.எம்.எச். அஷ்ரப் ஒருமுறை என்னுடன் பேசிக் கொண்டிருக்கும்போது, தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் மூலம் – கிழக்கு முஸ்லிம்களின் நாட்டுப்புற விடயங்கள் அனைத்தினையும் வெளிக் கொண்டு வர வேண்டும் என்று கூறினார். ஆனால், அவரின் அந்த ஆசையை இதுவரை அந்தப் பல்கலைக்கழகம் நிறைவேற்றவில்லை” என்றும் முத்துமீரான் தெரிவித்தார்.

இலங்கையின் அம்பாறை மாவட்டத்திலுள்ள ஒலுவில் பிரதேசத்தில் 1995ஆம் ஆண்டு தென்கிழக்குப் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது.

முத்துமீரானின் மேலுள்ள குற்றச்சாட்டு குறித்து, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மொழித்துறைத் தலைவர் பேராசிரியர் ரமீஸ் அப்துல்லாவிடம் பிபிசி தமிழ் பேசியபோது; “தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நாட்டாரியல் என்கிற தனித்துறை இல்லாத காரணத்தினால், கிழக்கிலங்கை முஸ்லிம்களின் நாட்டார் பாடல்களைத் தேடித் தொகுத்து பல்பலைக்கழகத்தில் வைக்கக் கூடிய, முழுமையான செயற்பாடுகளைச் செய்ய முடியாத நிலை உள்ளது,” என்றார்.

“தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பல பீடங்கள் உள்ளன. அவற்றில் கலை, கலாசார பீடமும் ஒன்றாகும். அதில்தான் மொழித்துறை உள்ளது. அதில் தமிழ் ஒரு பாடமாக உள்ளது. அந்தப் பாடத்தில் இஸ்லாமிய தமிழ் இலக்கியம், நாட்டார் பாடல்கள் என்று சிறு சிறு பகுதிகள் உள்ளன. ஆனால், பல்கலைக்கழகத்தில் நாட்டாரியல் ஒரு துறையாக இருக்கும் போதுதான், அது தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள முடியும். நாட்டார் பாடல்கள் எனும் விடயம் இங்கு ஒரு பாடத்தில் மட்டும் அடங்கியுள்ள நிலையில், அதுபற்றிய கற்கைகளை மட்டும்தான் எம்மால் மேற்கொள்ள முடியும்”.

“என்றாலும் மாணவர்களுக்கு நாட்டார் பாடல்களை ‘அசைன்மன்ட்’களாக (Assignment) வழங்கி, அவை குறித்து மாணவர்களைத் தேடச் செய்திருக்கிறோம். அவர்களும் நாட்டார் பாடல்களைப் பதிவு செய்து கொண்டு வந்து காட்டியிருக்கிறார்கள். அவர்களிடம் அவை உள்ளன. ஆனால் எமது பல்கலைக்கழகத்தில் நாட்டாரியல் ஒரு துறையாக இல்லாத நிலையில், அவற்றினை தேடித் தொகுத்து சேகரித்து வைக்கக்கூடிய நிலைமை இங்கு இல்லை” என்றார் பேராசிரியர் ரமீஸ் அப்துல்லா.

இதேவேளை, முஸ்லிம் நாட்டார் பாடல்களை மட்டுமன்றி முஸ்லிம்களின் நுண்கலை வடிவங்களான றபான் மூலம் இசையமைத்துப் பாடப்படும் ‘பக்கீர் பைத்’, பொல்லடிப் பாடல்கள் போன்றவற்றினையும் சேகரிக்க வேண்டும் என்பதையும் இதன்போது அவர் வலியுறுத்தினார்.

மேலும், கிழக்கிலங்கை முஸ்லிம்களின் நாட்டார் பாடல்கள் சிலவற்றிலுள்ள சொற்களை மாற்றியமைத்து, அவற்றினை தமிழ் சமூகம் – தங்களுக்குரிய பாடல் வடிவமாக ஆக்கிக் கொண்டுள்ளதாகவும் பேராசிரியர் ரமீஸ் அப்துல்லா சுட்டிக்காட்டினார்.

“உதாரணமாக கிழக்கிலங்கை முஸ்லிம் நாட்டார் பாடல் ஒன்றில் வரும் ‘வாப்பா அறிந்தாரென்றால்’ எனும் சொற்களுக்குப் பதிலாக, ‘அண்ணன் அறிந்தானென்ரால்’ என்கிற சொற்களைப் போட்டு, அந்தப் பாடலை, தமிழர்கள் தமக்குரிய பாடல் வடிவமாக மாற்றி, தமக்குரிய கலாசாரத்துக்குள் கொண்டு வந்திருக்கின்றனர்,” என்றும் அவர் கூறினார்.

இந்த நிலையில் கிழக்கிலங்கை முஸ்லிம்களின் நாட்டார் பாடல்கள் சிலவற்றினை இப்போதும் நினைவில் வைத்துப் பாடக்கூடிய சிலரை நீண்ட தேடல்களுக்குப் பின்னர் அம்பாறை மாவட்டத்தின் இறக்காமம் எனும் ஊரில் பிபிசி தமிழ் சந்தித்தது.

அங்கு பிபிசி தமிழ் சந்தித்த றசியா உம்மா என்று அறியப்படும் எஸ்.எல். முக்குலுத்தும்மா என்பவர் தனது நினைவிலிருந்த நாட்டார் பாடல்கள் சிலவற்றை, அதன் ராகத்தோடு பாடிக் காட்டினார்.

றசியா உம்மா

72 வயதுடைய றசியா உம்மா – முதலாம் வகுப்பு மட்டுமே படித்துள்ளார். ஆனால், சுயமாகப் பாடல்களை உருவாக்கி, அவற்றினை எழுதி மெட்டமைத்துப் பாடுவதிலும் அந்தப் பிரதேசத்தில் பிரபலமானவராக உள்ளார்.

‘எலுமிச்சம் பழம்போல
இலங்கையெல்லாம் பொண்ணிருக்கு – இந்த
கறுத்தப் பொடிச்சியில
ஒங்குட கண்போன மாயமென்ன’

என்று ஆரம்பிக்கும் நாட்டார் பாடலொன்றின் சில அடிகளை ராகத்தோடு அவர் பாடிக்காட்னார்.

இறக்காமத்தில் நாம் சந்தித்த மற்றொருவர் கலா பூஷண் எச்.எல். அப்துல் சலாம். 77 வயதுடைய அவர், தனது நினைவிலிருந்த காதல் சொட்டும் நாட்டர் பாடல்கள் சிலவற்றை பாடிக்காட்டினார். அந்தப் பாடல், கவிஞர் எஸ். முத்துமீரான் தொகுத்த ‘கிழக்கிலங்கை முஸ்லிம்களின் நாட்டார் பாடல்கள்’ எனும் நூலிலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

அப்துல் சலாம்

அந்தப் பாடல் இதுதான்;

‘காதலன்: சுற்றிவர வேலி,
சுழலவர முள்வேலி
எங்கும் ஒரே வேலி – நான்
எதனால புள்ள வாரதுகா?

காதலி: காவல் அரணோ
கள்ளனுக்கு முள்ளரணோ
வேலி அரணோ – மச்சான்
வேணுமென்ட கள்ளனுக்கு’.

இப்படி ஏராளமான பாடல்கள், கிழக்கிலங்கை முஸ்லிம்களின் நாட்டார் பாடல்களாக பரவிக் கிடந்தன.

அவற்றில் ஒரு தொகைப் பாடல்கள் எழுத்தில் தொகுப்பட்டுள்ள போதிலும், அவற்றினை அதன் ராகத்தோடு பாடிக்கூடியவர்கள் கிட்டத்தட்ட மறைந்து விட்டமையினால், எழுத்தில் இருக்கும் நாட்டார் பாடல்களும் தமது ஜீவனை இழந்து விட்டன.

நூற்றாண்டு காலங்களாக வாய்வழி இலக்கிய வடிவமாக இருந்து வந்த கிழக்கு முஸ்லிம்களின் நாட்டார் பாடல்கள் குறித்து, அதே சமூகத்தைச் சேர்ந்த இள வயதினர்களில் மிக அதிகமானோருக்குத் தெரியாது என்பது கசப்பான உண்மையாகும்.

நன்றி: பிபிசி தமிழ்

Comments