30 வருடங்களுக்கு பின்னர் நியமிக்கப்பட்ட முஸ்லிம் அரசாங்க அதிபரை நீக்கக் காரணம் என்ன?இனரீதியான செயற்பாடா: சபையில் றிசாட் கேள்வி

🕔 January 22, 2020

முப்பது வருடங்களுக்குப் பின்னர் நியமிக்கப்பட்ட முஸ்லிம் அரசாங்க அதிபரை, அந்தப் பதவியில் இருந்து அவசர அவசரமாக நீக்குவதன் காரணம், அவர் முஸ்லிம் என்பதனாலா என்று, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் நாடாளுமன்றில் நேற்று செவ்வாய்கிழமை கேள்வியெழுப்பினார்.

அரசாங்கத்தின் சில நடவடிக்கைகளை பார்க்கும் போது, அவை இனரீதியாக உள்ளதாகத் தோன்றுகின்றதெனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

றிசாட் பதியுதீன் தனது நாடாளுமன்ற உரையில் மேலும் கூறுகையில்;

“இரண்டு வருடங்களுக்கு முன்னர் வவுனியா அரசாங்க அதிபராக முஸ்லிம் ஒருவர் நியமிக்கப்பட்டார். சுமார் முப்பது வருடங்களுக்கு முன்னர், மன்னார் அரசாங்க அதிபராக இருந்த முஸ்லிம்  ஒருவர் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட பின்னர், வவுனியாவில் முஸ்லிம் ஒருவருக்கு இந்தப்பதவி வழங்கப்பட்டது.

மூன்று இனங்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வரும் இந்த மாவட்டத்தில் அரசாங்க அதிபராகப் பணி புரிந்தவர், திடீரென அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டது ஏன்? அவர் செய்த குற்றம்தான் என்ன? இல்லாவிடின் முஸ்லிம் என்ற காரணத்துக்காகவா இவ்வாறு நடத்தது?

பல்லின மக்கள் வாழும் நாடு என்று இலங்கை குறித்து வெளிநாடுகளில் பெருமையாக பேசும்  நீங்கள் இந்த நாட்டிலே அதற்குரிய இடத்தை வழங்குகிறீர்களா?

அரச அதிபரை அவசரமாக பதவி மாற்றம் செய்வதை நீங்கள் சாதனையாக கருதுகின்றீர்களா?

திருமலை, அம்பாறை ஆகிய மாவட்டங்களிள் முஸ்லிம் சமூகம் பெருவாரியாக வாழ்கின்றது. இலங்கை நிர்வாக சேவையில் தகுதி பெற்ற சுமார் இருபதுக்கு மேற்பட்ட முஸ்லிம்கள் இருக்கின்றனர். அந்த வயைில் அரசாங்க அதிபர்களாக வீதாசாரப்படி மூன்று பேர் நியமிக்கப்படவேண்டும்.  ஆகக்குறைந்தது அம்பாறை மற்றும்  திருமலையிலாவது முஸ்லிம் அரச அதிபர் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும்.

மாறாக இருந்தவரையும் அந்தப் பதவியிலிருந்து தூக்கி, வேறு பதவியை வழங்குவது நியாயமா? இது பழி வாங்கலா?” என்றார்.

மேலும், வவுனியா அரசாங்க அதிபரை அந்தப் பதவியிலிருந்து நீக்குவதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை ரத்துச்செய்யப்பட வேண்டும் என்றும், றிசாட் பதியுதீன் இதன்போது கோரிக்கை விடுத்தார்.

வவுனியா அரசாங்க அதிபராகக் கடமையாற்றி வரும் ஐ.எம். ஹனீபாவைவுக்கு அமைச்சு ஒன்றில் பதவி வழங்கப்படவுள்ளதாக தெரிய வருகிறது.

(அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்