பொதுத் தேர்தலில் சலீம் களமிறங்குவார்: சாய்ந்தமருது பள்ளிவாசல் தலைவர் பகிரங்க அறிவிப்பு

🕔 January 5, 2020

– நூருல் ஹுதா உமர் –

திர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சாய்ந்தமருது பிரதேசத்தை சேர்ந்த முன்னாள் பிரதேச செயலாளரும், இலங்கை நிர்வாக சேவை அதிகாரியுமான ஏ.எல்.எம். சலீம் போட்டியிடுவார் என சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசல் தலைவர் வை.எம். ஹனீபா இன்று ஞாயிற்றுக்கிழமை பகிரங்கமாக அறிவித்தார்.

சாய்ந்தமருது நகரசபை இலக்கை அடையும் நோக்கில் போராடி வரும் குழுவினரின் ஏற்பாட்டில், சாய்ந்தமருது மண்ணின் மாற்றம் மற்றும் அபிவிருத்திக்கான மையம் இன்று மாலை ஆரம்பிக்கப்பட்டது. இந்நிகழ்விலேயே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டது.

தேசிய நல்லிணக்கம், சகவாழ்வு, நிலையான அபிவிருத்தி மற்றும் புதிய அரசாங்கத்தின் கோட்பாடு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டும் பிரதேச மக்களின் ஒருமைப்பாட்டைக் கட்டியெழுப்பி பல்லின சமூக அமைப்பில், சமூக இருப்பையும் அபிவிருத்தியையும் குறிக்கோளாகக் கொண்டு ‘சமூக மாற்றம் மற்றும் அபிவிருத்திக்கான யையம்’ என்ற அமைப்பு ஆரம்பிக்கப்பட்டதோடு, சாய்ந்தமருது , கல்யாண வீதியில் இவ் அமைப்புக்கான அலுவலகமும் திறக்கப்பட்டு உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசல் தலைவர் வை.எம். ஹனீபா பிரதம அதிதியாக கலந்து கொண்டார். சாய்ந்தமருது, மாளிகைக்காடு ஜூம்மா பள்ளிவாசல் நிர்வாகத்தினர், கல்முனை மாநகர சபை சுயேட்சைக் குழு உறுப்பினர்கள், புத்திஜீவிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் இதில் கலந்து கொண்டனர்.

இங்கு உரையாற்றிய கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.ஆர்.எம். அசீம்; “எதிர்வரும் தேர்தலில் மொட்டு சின்னம் (பொதுஜன பெரமுன) சார்பில்தான் எங்களுடைய வேட்பாளர் களமிறங்குவார்” என உறுதிபட தெரிவித்தார்.

இந் நிகழ்வில் பிரதேச செயலாளரும், இலங்கை நிர்வாக சேவை அதிகாரியுமான ஏ.எல்.எம். சலீமும் கலந்து கொண்டு உரையாற்றினார்.

ஏ.எல்.எம். சலீம்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்