கறுப்பு ஒக்டோபர்: துடைத்தெறியப்பட்ட ஒரு சமூகத்தின் கதை

🕔 October 20, 2015

Article - 25
(வடக்கு முஸ்லிம்கள், புலிகளால் இனச்சுத்திகரிப்புச் செய்யப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவுறுவதை நினைவுகூறும் வகையில் இக் கட்டுரை வெளியிடப்படுகிறது)

“ஒரு முழு மாகாணத்திலிருமிருந்து ஓர் இனம் வெளியேற்றப்படுவதென்பது சர்வதேச சட்டத்தில் பாரியதொரு குற்றமாகும்.

தமிழ் மக்களுக்கு எதிராக இனப்படுகொலை நடந்தது என்று நாம் கூறுகின்றோம். ஆனால், சர்வதேச சமூகம் அதை இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை.

முஸ்லிம்களை வட மாகாணத்திலிருந்து வெளியேற்றியதன் மூலம், அங்கு ‘இனச்சுத்திகரிப்பு’ நடந்தது என்பதில் எந்தவித சந்தேகமும் கிடையாது. இனச்சுத்திகரிப்பு என்பது, சர்வதேச சட்டத்தில் இனப்படுகொலைக்கு அடுத்ததாகவுள்ள ஒரு குற்றமாகும்.

வடக்கிலிருந்த முஸ்லிம்களில் சிலர், அரசாங்கத்தின் வேவுகாரர்களாக செயற்பட்டனர் என்றும், அதனால்தான் வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டனர் என்றும் சிலர் கூறுகின்றனர். அப்படியென்றால், அரசாங்கத்துக்கு சார்பாக, தமிழர்களில் வேவுகாரர்கள் இருக்கவில்லையா? இன்றும் இருக்கிறார்கள். அதற்காக, வட மாகாணத்திலிருந்து ஒட்டுமொத்த தமிழர்களையும் வெளியேற்ற முடியுமா?

எங்களுடைய தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமென்பதில் நாம் தீர்மானமாக இருக்கின்றோம். எங்களுடைய தமிழ் மக்களுக்காக, ஐக்கிய நாடுகள் சபை வரை சென்று, நீதி கேட்டு வாதாடுகின்றோம். ஆனால், நாங்கள் கேட்கின்ற நீதியும், நியாயமும் ஒருதலைப்பட்சமானதாக ஒருநாளும் இருக்க முடியாது.

நீதி என்பது அனைவருக்கும் சமமானது. எல்லா மக்களுக்கும் அது சேர வேண்டும். எனக்கு மட்டுமே நீதி கிடைக்க வேண்டும் என்று கேட்கின்ற எந்த சமூகத்துக்கும், எந்தக் காலத்திலும் நீதி கிடைக்க மாட்டாது”.

நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், 2013 ஆம் ஆண்டு, கனடாவில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் கூறிய விடயம்தான் மேலே நீங்கள் படித்தது.

வட மாகாணத்திலிருந்து விடுதலைப் புலிகளால் முஸ்லிம் மக்கள் உடுத்த உடையோடு விரட்டியடிக்கப்பட்டு இந்த ஒக்டோபர் மாதத்துடன் 25 வருடங்கள் நிறைவடைகின்றன. ஆனால், அந்த மக்களுக்கு இதுவரை எந்தவித நீதியும் கிடைக்கவில்லை.

ஒவ்வொரு வருடமும், ஒக்டோபர் மாதமானதும், வடக்கு முஸ்லிம்கள் புலிகளால் விரட்டியடிக்கப்பட்டமையை ஒரு சடங்குபோல் நினைவுகூறுகின்றோமே தவிர, அதற்கு அப்பால் வேறு ஒன்றும் உருப்படியாய் நடந்தபாடில்லை.

வட மாகாணத்திலிருந்து புலிகளால் முஸ்லிம்கள் விரட்டியடிக்கப்பட்டதை அப்பட்டமானதொரு ‘இனச்சுத்திகரிப்பு’ என்று நடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஏற்றுக்கொண்டமையானது, அவரின் பக்குவமாகவே இங்கு பார்க்க முடிகிறது. ஆனால், அந்தப் பக்குவம் அவர் சார்ந்த த.தே.கூட்டமைப்புக்கு இந்த விவகாரத்தில் இன்னும் ஏற்படவில்லை என்பது கவலைதரும் விடயமாகும்.

வடக்கிலிருந்து முஸ்லிம்களை புலிகள் வெளியேற்றியமையானது, ஓர் ‘இனச்சுத்திகரிப்பு’ நடவடிக்கை என்பதை த.தே.கூட்டமைப்பு ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றும், அதனை வட மாகாணசபையில் ஒரு தீர்மானமாக நிறைவேற்ற வேண்டுமென்றும் இந்த வருடம் பெப்ரவரி மாதமளவில், வடக்கு முஸ்லிம்களின் உரிமைக்கான அமைப்பு கோரிக்கையொன்றினை முன்வைத்திருந்தது. ஆனால், அந்தக் கோரிக்கைக்கு, குறித்த தரப்பினரிடமிருந்து எந்தவித சாதகமான பதிலும் இதுவரை கிடைக்கவேயில்லை.

அரசாங்கத்துக்கும் புலிகளுக்கும் சண்டை நடைபெற்றுக்கொண்டிருந்த போது, அந்தச் சண்டையில் எந்தவிதத்திலும் தொடர்புபட்டிராத ஒரு சமூகத்தை, அவர்களின் வாழ்விடங்களில் இருந்து, வேரோடு பிடிங்கியெறிந்த பயங்கரவாத நடவடிக்கையினை, இனச்சுத்திகரிப்பு என்று கூறாமல் வேறெப்படிச் சொல்வது.

ஓர் இன அல்லது சமயக் குழுவொன்றினை, மற்றுமோர் இன அல்லது சமயக் குழுவொன்று திட்டமிட்ட வகையில், ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பிலிருந்து வன்முறையாக, பயங்கரவாத வழிமுறைகளால் அழித்தொழித்தல் அல்லது வெளியேற்றுதல் என்பதே ‘இனச்சுத்திகரிப்பு’ எனப்படுகிறது.

வடக்கில் முஸ்லிம்கள் விரட்டியடிக்கப்பட்டமையானது ஓர் ‘இனச்சுத்திகரிப்பு’ என்று, நடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனைப்போல், ஏற்றுக்கொள்ளும் அரசியல் தைரியம் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஏன் இன்னும் வரவில்லை என்பதற்கு ஆயிரத்தெட்டுக் காரணங்கள் இருக்கக் கூடும். ஆனால், அந்தக் காரணங்கள் எதிலும் நியாயங்களென்று எதுவுமே இருக்கப்போவதில்லை.

ஒவ்வொரு சமூகமும், தன்னால் அடுத்த சமூகத்துக்கு இழைக்கப்பட்ட அநீதியை, பாவத்தை, தவறுகளை ஏற்றுக்கொள்ள முன்வரும் போதுதான், அங்கு இன நல்லிணக்கத்துக்கான உண்மையான பாதைகள் திறக்கப்படுவதற்குரிய சாத்தியங்கள் உருவாகும்.

புலிகள் இருந்த காலத்தில், அவர்களின் ஆயுதங்களுக்கு அச்சப்பட்டுத்தான், வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமையினை விமர்சிப்பதற்கு, தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அஞ்சியினார்கள் என்கின்றதொரு கருத்தும் சில காலம் நிலவியது. ஆனால், புலிகள் இல்லாமல் போன பிறகும், அவர்கள் அடுத்த சமூகத்துக்கு இழைத்த துரோகத்தினை விமர்சிப்பதற்கு த.தே.கூட்டமைப்பினர் தயங்குவதன் பின்னால் ஒரு மலினமான அரசியல், தலைகீழாய் தொங்கிக் கொண்டிருப்பதையே காண முடிகிறது.

புலிகளால், மாற்று இயக்கத்தினைச் சார்ந்த தமிழ் போராளிகள் படுகொலை செய்யப்பட்டபோது, அவற்றினை இனிப்புக் கொடுத்துக் கொண்டாடி மகிழ்ந்தவர்களிடமிருந்து, ‘வடக்கு முஸ்லிம்கள் இனச்சுத்திகரிப்புச் செய்யப்பட்டார்கள்’ என்பதை ஏற்றுக் கொள்ளும் மனநிலையை எதிர்பார்ப்பதென்பது அதீதம்தான். ஆனால், அடுத்த மனிதன் மீது புரியப்படும் படுகொலையினை இனிப்புக் கொடுத்துக் கொண்டாடுகின்றவர்களின் மனநிலைக்கு ஒப்பான மௌனத்தினை, வடக்கு முஸ்லிம்கள் விவகாரத்தில் த.தே.கூட்டமைப்பினர் கொண்டிருப்பதைத்தான் ஜீரணிக்க முடியவில்லை.

த.தே.கூட்டமைப்பினர் ஏற்றுக்கொள்ளாவிட்டால் மட்டும், வடக்கு முஸ்லிம்கள் விரட்டியடிக்கப்பட்டமையானது ‘இனச்சுத்திகரிப்பு’ என்று இல்லாமல் போய்விடாது.

கடந்த வாரக் கட்டுரையில் நாம் எழுதியிருந்த ஒரு விடயத்தினை இங்கு மீளவும் நினைவுபடுத்த விரும்புகின்றோம்.

‘தங்களின் மதக் கடமைகளை நிறைவேற்றுவதற்கு பௌத்த பொதுபலசேனா அமைப்பினர் தடையாக இருக்கின்றார்கள் என்று கூறிக்கொண்டே, தமிழ் சகோதரர்களின் பாபர் வீதி கோயில் தேர்த் திருவிழாவினை முஸ்லிம் தரப்பினர் தடுத்தமையானது நியாயமற்ற செயல்’ என்பதை அந்தக் கட்டுரையில் நாம் சுட்டிக்காட்டியிருந்தோம்.

அதுபோல, புலிகளால் வடக்கு முஸ்லிம் மக்கள் விரட்டியடிக்கப்பட்டமையினை, ‘இனச்சுத்திகரிப்பு’ நடவடிக்கை என ஏற்றுக் கொள்ளத் தயங்குகின்றவர்களுக்கு, முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை தொடர்பில் நியாயம் கோருவதற்கு, எவ்வித தகுதியும் இருப்பதாக நமக்குத் தெரியவில்லை.

இன்னொருபுறம், வடக்கு முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநியாயத்தை இனச்சுத்திகரிப்பாக ஏற்றுக்கொள்வதோடு, அந்த விடயம் முற்றுப் பெற்றுவிடப் போவதில்லை. அந்த அநீதியைப் புரிந்தவர்கள் தண்டிக்கப்படுதல் வேண்டும், அநீதிக்குள்ளானவர்களுக்கு நியாயமும், நிவாரணமும் வழங்கப்படுதல் அவசியமாகும்.

வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் விவகாரத்தில் இதுவரை, எந்தவொரு அரசாங்கமும் போதியளவு கரிசனைகளை வெளிப்படுத்தவில்லை என்பது கசப்பான உண்மையாகும். வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றமானது, இறுதி யுத்தத்தில் இடம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கு முன்னராக அல்லது ஆகக்குறைந்தது அவர்களுடனாவது இடம்பெற்றிருக்க வேண்டும். ஆனால், அது நிகழவில்லை.

வடக்கு முஸ்லிம்களுக்கு புலிகளால் புரியப்பட்ட அநீதி மற்றும் பாதிக்கப்பட்ட அந்த மக்களுக்கான மறுவாழ்வு குறித்த விடயங்களில், முஸ்லிம் தலைமைகள் ஆகக் குறைந்தளவுகூட அக்கறை காட்வில்லை என்பது இன்னொருபக்கம் கசக்கின்ற உண்மையாகும்.

வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகளாகச் சொல்லிக்கொள்ளும் அரசியல்வாதிகள்கூட, அந்த மக்களின் மறுவாழ்வுக்காகச் செய்தவற்றினை விடவும், செய்ததாகக் சொல்லிக் கொண்டு நடத்திய அரசியல்தான் அதிகமாகும்.

வடக்கு முஸ்லிம்களை மீள்குடியேற்றுவதில் வட மாகாணசபைக்கு மிகப்பெரும் பொறுப்புள்ளது. ஆனால், அவர்களின் மௌனத்தினால் அதை அவர்கள் தட்டிக்கழித்துக்கொண்டே வருகின்றனர்.

இறுதி யுத்தத்தின்போது தமிழ் மக்கள் மீது புரியப்பட்டது ‘இனப்படுகொலை’தான் என்று, வட மாகாணசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது, வடக்கிலிருந்து முஸ்லிம்களை புலிகள் விரட்டியடித்தமையினையும் ‘இனச்சுத்திகரிப்பு’ என்று ஏற்றுக்கொண்டு, தீர்மானமொன்றினை நிறைவேற்றுமாறு, வடக்கு முஸ்லிம்களின் உரிமைக்கான அமைப்பு கோரிக்கை விடுத்தது. ஆனால், அது தொடர்பில் வடக்கு மாகாணசபை அலட்டிக்கொள்ளவேயில்லை.

வடக்கிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட முஸ்லிம்களின் காணிகளை அடையாளம் காணுதல், அந்தக் காணிகளை தற்போது பிடித்து வைத்திருப்பவர்களிடமிருந்து உரியவர்களுக்குப் பெற்றுக் கொடுத்தல் என்பன போன்ற விடயங்கள் சிக்கலாக மாறியிருக்கின்றன. இந்த விடயங்களில் தமிழர் தரப்பு தமது நேர்மைத் தன்மையினை இரட்டிப்பாக வெளிப்படுத்த வேண்டியுள்ளது. ஆனால், இவற்றினையெல்லாம் முன்னின்று செய்வதற்கு ஒரு ‘சுமந்திரன்’ மட்டும் போதாது.

வடக்கிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட முஸ்லிம்களின் விவகாரத்தில், தமிழர் தரப்பு தமது நேர்மையினை வெளிப்படுத்தும் அதேவேளை, புதிய அரசும் இந்த விடயத்தில் தனது நிலைப்பாட்டினை வெளிப்படுத்துதல் அவசியமாகும்.

அதேவேளை, இவ்விவகாரத்தில் புதிய அரசுக்கு முஸ்லிம் அரசியல்வாதிகளும், முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு மக்களும் ஜனநாயக ரீதியில் அழுத்தங்களை கொடுத்தல் அவசியமாகும்.

வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் பிரச்சினைகள் குறித்து பேசுவதற்கும் எழுதுவதற்கும் ஏராளமான விடயங்கள் உள்ளன. தமது மண்ணை, இதுவரை கண்ணால் பார்க்காமலேயே, ஒரு தலைமுறை – அந்த மண்ணுக்கு வெளியில் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பது, எத்தனை துயரமானது.

யுத்த காலத்தில், வடக்கிலிருந்து வெளியேறி கொழும்பில் நல்ல வீடுகளில் பிரச்சினைகள் இல்லாமல் வசித்துக்கொண்டிருந்த தமிழ் மக்களில் கணிசமானோர். யுத்தம் முடிவுற்றதும், கொழும்பிலிருந்த தமது வீடுகளை விற்றுவிட்டு, தமது சொந்த மண்ணில் வாழ்வதற்காக வடக்கு நோக்கிச் சென்றமை பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

சொந்த மண்ணில் வாழும் மனச் சுகத்தை வேறொதுவும் கொடுத்து விடப்போவதில்லை என்பதற்கு, அந்தக் கதைகள் அனுபவ ரீதியான உதாரணங்களாகும்.

வடக்கு முஸ்லிம்களை விரட்டியடித்தபோது, அந்த மக்களின் நிலங்களை மட்டுமன்றி அவர்களின் வாழ்வை, சந்தோசங்களை, நிம்மதியை, கௌரவத்தை, சுதந்திரமான தூக்கத்தை என்று, ஏராளமானவற்றினை புலிகள் பறித்தெடுத்துக் கொண்டார்கள்.

திரும்பவும் அந்த மக்களை அவர்களின் மண்ணில் குடியேற்றினாலும், இந்த 25 வருடங்களில் அவர்கள் இழந்த வாழ்வை, சந்தோசங்களை, நிம்மதியை, கௌரவத்தை, சுதந்திரமான தூக்கத்தை யாராலும் திருப்பிக் கொடுத்துவிட முடியாது.

அதிகபட்ச அநியாயங்களால் தண்டிக்கப்பட்ட வடக்கு முஸ்லிம்களுக்கு, மிகக் குறைந்தளவேனும் நீதி கிடைக்க வேண்டும் என்பதே நமது பிரார்த்தனையாகும்.

அதேவேளை, இது விடயத்தில் வெற்றுப் பிரார்த்தனைகளோடு மட்டும் நாம் நின்று விடக்கூடாது என்பதும் நமது எதிர்பார்ப்பாக உள்ளது.

நன்றி: ‘தமிழ் மிரர்’ பத்திரிகை (20 ஒக்டோபர் 2015)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்