உதுமாலெப்பையின் நேற்றைய உரை: இவற்றையெல்லாம் கவனித்தீர்களா?

🕔 September 25, 2018

– முன்ஸிப் அஹமட் –

தேசிய காங்கிரசின் பிரதித் தலைவர் பதவி மற்றும் பொறுப்புக்களிலிருந்து கடந்த வியாழக்கிழமை ராஜிநாமா செய்த, கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை, நேற்று திங்கட்கிழமை இரவு, தனது கட்சியின் முக்கிய ஆதரவாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

கொழும்பில் வைத்து தனது பதவியை ராஜிநாமா செய்திருந்த உதுமாலெப்பை, நேற்றைய தினம்தான் தனது சொந்த ஊரான அட்டாளைச்சேனைக்கு திரும்பியிருந்தார்.

அட்டாளைச்சேனையிலுள்ள உதுமாலெப்பையின் அரசியல் அலுவலகத்தில் மேற்படி சந்திப்பு இடம்பெற்றது.

இதன்போது, அங்கு திரண்டிருந்த முக்கிய ஆதரவாளர்கள் முன்னிலையில் சுமார் 35 நிமிடங்கள் உதுமாலெப்பை பேசினார். இது அவரின் ‘பேஸ்புக்’ பக்கத்தின் ஊடாக, நேரடியாகவும் ஒளிபரப்பானது.

தனது ராஜிநாமாவுக்கான காரணங்கள் பற்றியும், அதன் பின்னர் நடந்த நிகழ்வுகள் குறித்தும் இதன்போது உதுமாலெப்பை விளக்கமளித்தார்.

உதுமாலெப்பையின் மேற்படி உரையானது, மிகவும் தடுமாற்றமாக அமைந்திருந்தது.

அவர் அதிக ‘டென்ஷனான’ மனநிலையில் இருந்தார் என்பதை, அவரின் பேச்சு, முகத் தோற்றம் மற்றும் உடல்மொழி ஆகியவை பிரதிபலித்தன. மேலும், வியர்வையினால் உடல் நனைந்து போயிருந்தமையும், அவர் மிகவும் பதற்றமாக உள்ளார் என்பதைக் காட்டியது.

வழமையாக உதுமாலெப்பையின் பேச்சில் இருக்கின்ற தெளிவு, நேற்றைய உரையில் தொலைந்து போயிருந்தது. முற்று முழுதாக அவர் தடுமாற்றத்தின் உச்சத்தில் காணப்பட்டார்.

தன்னை நியாயப்படுத்திக் கொள்வதற்காக யாரையென்றாலும் தனது உரையில் பலிகொடுப்பதற்கு தயாரான மனநிலையில் அவர் இருந்தார். மற்றவர்களை அதிகம் பகைத்துக் கொள்ளாமல், தடவிக் கொடுத்துப் பேசும், அவரின் வழமையான பாணி, நேற்றைய உரையில் இருக்கவில்லை.

தனது ராஜிநாமாவுக்கு, உதுமாலெப்பை நேற்று கூறிய காரணங்கள் மிகவும் அற்பமானவையாக இருந்தன. அதாவது, உண்மையான காரணத்தை, அவர் சொல்லாமல் மறைத்தார் என்பதை, மிக இலகுவாகப் புரிந்து கொள்ள முடிந்தது.

நேற்றைய அந்த சந்திப்புக்கு முன்னதாக, என்ன பேசுவது – எதைப் பேசுவது என்பதை, உதுமாலெப்பை திட்டமிடவில்லை என்பதை அவரின் ஒட்டுமொத்தத் தடுமாற்றம் காட்டிக் கொடுத்தது.

அந்தச் சந்திப்பை நேற்று உதுமாலெப்பை நடத்தியிருக்கவே கூடாது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்