அதாஉல்லா, உதுமாலெப்பைக்கு இடையே பிளவு: படுக்கையில் விழுகிறதா தேசிய காங்கிரஸ்?

🕔 August 20, 2018

– அஹமட் –

தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லாவுக்கும், அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சருமான எம். எஸ். உதுமாலெப்பைக்கும் இடையில் பிளவு ஏற்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

இந்த நிலையில், அமைச்சர் றிசாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரசில், உதுமாலெப்பை இணைந்து கொள்வதற்கான சாத்தியங்கள் உள்ளன என்றும் அறிய முடிகிறது.

தேசிய காங்கிரசின் தலைவர் அதாஉல்லா தற்போது அரசியல் அதிகாரங்களை இழந்துள்ள நிலையில், அதிகாரத்திலுள்ள தரப்பொன்றுடன் கூட்டணி அமைத்து, எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டுமென, முன்னாள் அமைச்சர் உதுமாலெப்பை விரும்புவதாக தெரியவருகிறது.

இந்த நிலைப்பாட்டினை தனது கட்சியின் தலைவர் அதாஉல்லாவிடம் உதுமாலெப்பை நேரிலும் தெரிவித்திருக்கின்றார்.

எவ்வாறாயினும், ‘மு.கா. தலைவர் ஹக்கீமுடன் இணைந்து அரசியல் கூட்டு ஒன்றினை வைத்துக் கொண்டாலும், றிசாட் பதியுதீனுடன் இணைந்து கூட்டு வைத்துக் கொள்ள மாட்டேன்’ எனும் நிலைப்பாட்டில் தேசிய காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான அதாஉல்லா இருப்பதாகக் கூறப்படுகிறது.

ஆனால், ஹக்கீமுடன் அரசியல் கூட்டு வைத்துக் கொள்வதில் உதுமாலெப்பைக்கு உடன்பாடு இல்லை.

இவ்வாறான நிலையிலேயே, அ.இ.மக்கள் காங்கிரஸ் தரப்புடன் உதுமாலெப்பை நெருக்கமான உறவுகளை ஏற்படுத்தியுள்ளார் என்றும், அந்தக் கட்சியில் அவர் இணைவதற்கான சாதக நிலை உருவாகியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எது எவ்வாறாயினும், தற்போது அ.இ.ம.காங்கிரஸுடன் உதுமாலெப்பை இணைந்தால், தனது இணைவுக்குப் பொருத்தமான காரணத்தைக் கூற முடியாது என்பதால், மக்கள் காங்கிரசில் இணைவதற்கு மாகாண சபைத் தேர்தல் அறிவிக்கப்படும் வரையில் உதுமாலெப்பை காத்திருப்பார் எனக் கூறப்படுகிறது.

இன்னொருபுறம், கிழக்கு மாகாண சபைத் தேர்தலில், தேசிய காங்கிரசின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான அதாஉல்லா, அவருடைய மூத்த மகனும் அக்கரைப்பற்று மாநகர சபையின் தற்போதை மேயருமான அகமட் சக்கியை களமிறக்குவார் என்கிற பேச்சு – தேசிய காங்கிரஸ் வட்டாரத்தில் உள்ளது.

ஆனால், சக்கியை கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் களமிறக்குவதில் உதுமாலெப்பைக்கு விருப்பமில்லை என அறிய முடிகிறது.

இவ்வாறானதொரு சூழ்நிலையில், கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் அதாஉல்லா எவ்வாறு கூட்டணி அமைப்பார் என்பதையும், தனது மகனை களமிறக்குவாரா என்பதையும் வைத்தே, உதுமாலெப்பை தனது அரசியலில் தீர்க்கமானதொரு முடிவை எடுப்பார் என்றும், அதன்போது அவர் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்து கொள்வார் எனவும் உதுமாலெப்பைக்கு நெருங்கிய வட்டாரங்கள் மூலம் அறியக் கிடைக்கின்றது.

தேசிய காங்கிரஸ் கட்சிப் பணிகளை மேற்கொள்ளும் பொருட்டு, அண்மையில் திருகோணமலை மாவட்டத்துக்கு, அக்கட்சியின் தலைவர் அதாஉல்லா தனது படை பட்டாளத்துடன் சென்றிருந்த போதும், முன்னாள் அமைச்சர் உதுமாலெப்பை அதில் இணைந்து கொள்ளவில்லை என்பதும், மேற்படி பிளவே அதற்குக் காரணம் எனவும் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments