மூதூர் ஆயுள்வேத மத்திய மருந்தகம்; கிராமிய வைத்தியசாலையாகிறது: ஆணையாளர் தகவல்

🕔 August 13, 2018

– எம்.எஸ்.எம். ஸாகிர் –

மூதூர் ஆயுள்வேத மத்திய மருந்தகத்தை கிராமிய வைத்தியசாலையாக தரமுயர்த்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதாக கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் ஆணையாளர் டொக்டர் திருமதி ஸ்ரீதர் தெரிவித்தார்.

மூதூர் ஆயுள்வேத மத்திய மருந்தக பொறுப்பதிகாரி டொக்டர் எச்.எம். ஹாரீஸ் தலைமையில் இடம்பெற்ற ஆயுள்வேத மத்திய மருந்தகத்தின் 21ஆவது வருட நிறைவு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பேசுகையிலே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

அவர் மேலும் அங்கு தெரிவிக்கையில்;

ஆண்கள், பெண்களுக்குரிய நோயாளர் விடுதிகள், மருந்து களஞ்சியசாலை மற்றும் வைத்தியர்கள் தங்குவதற்கான தங்குமிட விடுதி  என்பவற்றை அமைப்பதற்குரிய ஏற்பாடுகளையும் செய்வதாக உறுதியளித்தார்.

“1997 ஜூலை 23ஆம்  திகதி ஆரம்பிக்கப்பட்ட மூதூர் ஆயுள்வேத மத்திய மருந்தகம் திருகோணமலை மாவட்டத்தின் பழமை வாய்ந்த மருந்தகமாக இருக்கின்றது.

மிகக் கூடுதலான மக்கள் தொகையைக் கொண்ட பிரதேசமாக மூதூர் காணப்படுகின்றது. எனவே மேலதிக சிகிச்சைகளைப் பெற்றுக் கொள்வதற்காக, மூதூரிலிருந்து சுமார் 40 கிலோமீற்றர் தூரம் கப்பல்துறை வைத்தியசாலைக்கு மூதூர் மக்கள் செல்ல வேண்டியுள்ளது.

எனவே,  கிராமிய வைத்தியசாலையாக மூதூர் ஆயுள்வேத மத்திய மருந்தகம் மாற்றப்பட வேண்டும்” என்று, மூதூர் ஆயுள்வேத மத்திய மருந்தக பொறுப்பதிகாரி வைத்தியர்  எச்.எம்.ஹாரீஸ் தனது தலைமை உரையில் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில், மருந்தகம் தரம் உயர்த்தல் சம்பந்தமான மஹஜர் ஒன்றை,  கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் ஆணையாளருக்கு அறபா நகர் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் வழங்கினார்.

இதன்போது பொதுமக்கள் மத்தியில் ஆரோக்கியமான உணவு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் போசனை உணவு மற்றும் இலைக்கஞ்சி ஆகியவை வழங்கப்பட்டன. அத்தோடு, விசேட அதிதியாக கலந்து கொண்ட மூதூர் பிரதேச சபை தவிசாளரிடம் மருந்தகத்திற்கு தேவையான காணியைப் பெற்றுத் தருமாறும் வேண்டுகோள் முன்வைக்கப்பட்டது.

நிகழ்வில் விசேட அதிதியாக மூதூர் பிரதேச சபை தவிசாளர் எம்.எம். அரூஸ், மூதூர் அனைத்து பள்ளிவாயல் சம்மேளனத்தின் தலைவர் உட்பட வைத்தியர்கள், கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்