காலமானார் கருணாநிதி

🕔 August 7, 2018

திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதி சென்னையில் இன்று செவ்வாய்க்கிழமை, மாலை 6.10 மணியளவில் காலமானார்.

1924 ஜூன் 03ஆம் திகதி, நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருக்குவளை கிராமத்தில் அவர் பிறந்தார். இறக்கும் போது அவருக்கு 94 வயது.

சமீப நாட்களாக கடுமையான உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த கருணாநிதிக்கு, அவருடைய கோபாலபுரம் வீட்டிலேயே மருத்துவர்கள் சிகிச்சையளித்து வந்தனர். அவரது உடல்நிலை மோசமானதால் ஜூலை 27 நள்ளிரவு காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

முதுமையால் உண்டான உடல் நலக் குறைவால் சுமார் இரண்டு ஆண்டு காலமாக பொது வாழ்வில் இருந்து கருணாநிதி விலகி இருந்தார். அதனால் தி.மு.க. பொருளாளரும் கருணாநிதியின் புதல்வருமான மு.க. ஸ்டாலின் கட்சியின் செயல் தலைவராக 2017இல் பொறுப்பேற்றுக் கொண்டார்.

1969இல் சி.என். அண்ணாதுரை மறைவிற்கு பிறகு தமிழக முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்ட கருணாநிதி,  ஐந்து முறை தமிழக முதலமைச்சராக பதவி வகித்துள்ளார்.

கருணாநிதி தாம் போட்டியிடாத 1984 ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நீங்கலாக, 1957 முதல் நடைபெற்ற 13 சட்டமன்றத் தேர்தல்களிலும் வெற்றி பெற்றவர்.

1957-ஆம் ஆண்டு குளித்தலை சட்டமன்றத் தொகுதியில் அவர் முதல் முறையாக வெற்றி பெற்றார். கடைசியாக 2016ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அவர் திருவாரூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.

1984ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடாவிட்டாலும், அந்த ஆண்டு அவர் சட்டமன்ற மேலவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.

அரசியலில் மட்டுமல்லாது திரைத் துறையிலும் வெற்றிகரமான கதையாசிரியராகவும், வசனகர்த்தாவாகவும் கருணாநிதி விளங்கினார். அவரது தலைமுறையின் முன்னணி நடிகர்களான எம்.ஜி. ராமச்சந்திரன், சிவாஜி கணேசன் உள்ளிட்டவர்கள் கருணாநிதி கதை, வசனம் எழுதிய திரைப்படங்களில் நடித்துள்ளனர்.

‘நெஞ்சுக்கு நீதி’ எனும் தலைப்பில் தன் வரலாற்றை ஐந்து தொகுதிகளாக எழுதியுள்ள கருணாநிதி, பல உரைநடை மற்றும் கவிதை நூல்களையும் எழுதியுள்ளார்.

‘உடன்பிறப்புக்கு கடிதம்’ எனும் தலைப்பில் தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில், கருணாநிதி தொண்டர்களுக்கு எழுதிய கட்டுரைகள் மிகவும் பிரபலமானவை.

திராவிட இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு மாணவப் பருவத்திலேயே பொது வாழ்க்கைக்கு வந்த கருணாநிதி, பெரியாருடன் உண்டான கருத்து வேறுபாட்டால், அண்ணாதுரை தி.மு.க.வை தொடங்கியபின், அந்தக் கட்சியில் இணைந்து, அதன் முன்னணி தலைவர்களில் ஒருவராக இருந்தார்.

ஜூலை 27, 1969 அன்று தி.மு.க. தலைவராக பதவியேற்றுக்கொண்டார் கருணாநிதி. கடந்த ஜூலை 27 அன்று அப்பதவியில் 49 ஆண்டுகளை நிறைவு செய்து 50ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்தார்.

கருணாநிதிக்கு தயாளு அம்மாள், ராஜாத்தி அம்மாள் ஆகிய மனைவிகள் உள்ளனர். மு.க. முத்து, மு.க. அழகிரி, மு.க.ஸ்டாலின், மு.க.தமிழரசு ஆகிய மகன்களும் செல்வி, கனிமொழி ஆகிய மகள்களும் உள்ளனர்.

Comments