புலிகளை உருவாக்கி, தமிழ் மக்களின் உரிமைகளை பெறவேண்டும் என்பது முட்டாள்தனமான கருத்து: முஜிபுர் றஹ்மான்

🕔 July 4, 2018
முப்பது வருட கால யுத்தத்தின் கோரப்பிடியிலிருந்து மீட்சி பெற்ற எமது நாட்டை, மீண்டும் யுத்த சூழல் ஒன்றுக்குள் தள்ளிவிட வேண்டும் என்ற நிலைப்பாட்டையே அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் கருத்து வெளிப்படுத்துகிறது என்று நாடாளுமன்ற உறுப்பினர் முஜீபுர் றஹ்மான் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின்  சர்ச்சையைக்குரிய பேச்சு தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது;

சிறுவர்களும், பெண்களும் பாதுகாக்கப்படவேண்டுமென்றால் வடக்கிலே விடுதலைப் புலிகள் மீண்டும் உருவாக வேண்டும் என்று, சிறுவர் மற்றும் மகளிர் விவகார ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அண்மையில் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

ஐக்கிய தேசியக் கட்சியின் ராஜாங்க அமைச்சர் என்ற வகையில் விஜயகலா கூறியிருக்கும் விடயம், தெற்கிலே பாரிய கருத்து மோதல்களையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியிருக்கிறது.

விடுதலைப் புலிகளை மீண்டும் உருவாக்க வேண்டும் என்ற அமைச்சர் விஜயகலாவின் பேச்சு தெற்கில் உள்ள இனவாதிகளுக்கும், இனவாதத் தீயில் குளிர்காய்வதற்கு தருணம் பார்த்துக்கொண்டிருக்கும் தரப்பினருக்கும் தேனாக இனிக்கும் செய்தியாக மாறியிருக்கிறது.

தெற்கில் இனவாதத்தையே தனது ஊன்றுகோலாக வைத்து எழுச்சிபெற முயற்சி செய்து கொண்டிருக்கும் எதிர்த் தரப்பினருக்கு அமைச்சர் விஜயகலாவின் பேச்சு ஒரு வரப்பிரசாதமாக மாறியிருக்கிறது.

புலிகள் மீண்டும் உருவாக வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உண்மையாகவே அமைச்சர் விஜயகலா இருப்பதாக இருந்தால், புலிகள் இயக்கத்தின் மூலமாக தமிழ் மக்கள் கடந்த மூன்று தசாப்தங்களில் அடைந்த சுபீட்சம் தான் என்ன? என்பதை அவர் வெளியிட வேண்டும். புலிகளின் போராட்டத்தின் மூலமாக தமது உரிமைகளை பெறுவதை விடவும், தமிழ் மக்கள் அடைந்த இழப்புக்களே அதிகம் என்றுதான் சொல்லவேண்டும்.

விடுதலைப் புலிகளின் போராட்டத்தால் தமிழ் மக்கள் தமது வாழ்க்கையில் அனைத்தையும் இழந்து நிர்க்கதி நிலைக்கே தள்ளப்பட்டனர். தமிழ் மக்களின் கல்வி, கலாசாரம், பொருளாதாரம் அத்தனையும் அழிந்து சீரழிந்து சின்னாபின்னமானது.

இழந்தவற்றை மீண்டும் கட்டியெழுப்புவது தொடர்பான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதும் அவற்றை வெற்றிகொள்வதற்காக ஜனநாயக ரீதியிலான போராட்டங்களை மக்கள் ஆதரவுடன் மேற்கொள்வதுமே தமிழ் அரசியல் தலைமைகளின் கடமையாக இருக்கவேண்டும். மாறாக புலிகளிளை மீண்டும் உருவாகித்தான் தமிழ் மக்களின் உரிமைகளைப் பெற வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பது முட்டாள்தனமான கருத்தாகும்.

புலிகளின் விடுதலைப் போராட்டம் தமிழ் மக்களுக்கு எந்த விமோசனத்தையோ, சுதந்திரத்தையோ வழங்கவில்லை.  புலிகளின் போராட்டத்தால் தமிழ் மக்களின் எந்தப் பிரச்சினைகளும் தீர்க்கப்படவுமில்லை. மாறாக, பாரிய அழிவுகளையும், பின்னடைவுகளையுமே தமிழ் மக்கள் சந்திக்க நேர்ந்தது. எனவே அமைச்சர் விஜயகலா மீண்டும் ஒருமுறை புலிகளின் வரவை எதிர்பார்ப்பதும், புலிகளை ஆசிர்வதிப்பதும் தமிழினத்திற்குச் செய்யும் மாபெரும் துரோகமாகும். இவரின் பேச்சு தமிழினத்தை மீண்டும் ஓர் அழிவுக்கு அழைப்பதாகவே அமையும்.

ஜனநாயக ரீதியான போராட்டங்கள் மூலம் எமது அரசியல் இலக்குகளை அடைவதைத் விடுத்து, வேறு எந்த போராட்டங்களாலும் இந்நாட்டின் சிறுபான்மை சமூகங்கள் எதையுமே  சாதிக்க முடியாது என்பதற்கு, புலிகளின் கடந்த கால போராட்ட வரலாறு சிறந்த சான்றாகும். அத்தோடு புலிகளின் ஆயுதப் போராட்டம் சர்வதேசத்தின் ஆதரவற்று ஓரங்கட்டப்பட்ட நிலைக்கு தள்ளப்பட்டதையும் நாங்கள் மறந்து விடவும் கூடாது.

துரதிர்ஷ்டவசமாக இன்றும் கூட தெற்கிலும்  வடக்கிலும், இனவாத அரசியல் கருத்தியலே ஆதிக்கம் பெற்றுவரும் நிலை உருவாகியிருக்கிறது.  இரத்தத்தை சூடேற்றும் இனவாத கோஷங்களால் வடக்கும், தெற்கும் போட்டிபோட்டுக் கொண்டு தனது அரசியல் நாடகத்தை இன்று அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது.

வடமாகாண முதலமைச்சர் உட்பட சில தமிழ் அரசியல்வாதிகளின் இனவாதப் கருத்துக்கள் தெற்கிலே சிங்கள இனவாதிகளுக்கு பிராணவாயு ஏற்றிக்கொண்டிருக்கும் நிலையில், தென்பகுதி இனவாதிகளின் ஆவேசப் பேச்சுக்கள் நாட்டின் சிறுபான்மை மக்களுக்கு அச்சத்தையும், அவநம்பிக்கையையும் ஏற்படுத்தி வருகின்றன.

இனங்களுக்கிடையிலான இந்த கருத்து வேறுபாடுகளைப் பயன்படுத்தி, இனவாதத்தின்  மூலமாக  எதிர்த்தரப்பினர் தாம் இழந்த மக்கள் ஆதரவைப் பெற்று மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற கனவு கண்டு கொண்டிருக்கின்றனர்.

ஆகவே, எமது இந்த தாய் நாட்டை இனவாதத் தீயில் எரித்து சாம்பலாக்க தக்க தருணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்  தீய சக்திகளுக்கு உத்வேகத்தையும், உந்து சக்தியையும் மாத்திரமே அமைச்சர் விஜயகலாவின் பேச்சால் வழங்க முடியும்.

ஜனநாயக விழுமியங்களை மதிக்கின்ற பண்பட்ட ஒரு சமுதாயம், மீண்டும் அழிவுப் பாதைக்கு இந்நாடு செல்வதை ஒருபோதும் அங்கீகரிக்கமாட்டாது என்பதையும் நாம் புரிந்துக் கொள்ளவேண்டும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்