விஜேதாஸவின் பொய்; ‘ஹன்சாட்’ மூலம் அம்பலம்

🕔 June 23, 2018

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பாலியல் லஞ்சம் கோரப்படுகின்றது என, பொத்தாம் பொதுவாக – தான் கூறவில்லை என்றும், தனிப்பிட்ட நபர் ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டு மாத்திரமே, அந்தக் குற்றச்சாட்டினை தான் முன்வைத்ததாகவும் உயர் கல்வி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ அண்மையில் தெரிவித்தமை, பொய் என – ஹன்சாட் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பாலியல் லஞ்சம் கோரப்படுவதாக உயர்கல்வி அமைச்சர் பொத்தாம் பொதுவாக கடந்த 08ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைத்த குற்றச்சாட்டினைக் கண்டித்து, சில நாட்களுக்கு முன்னர் பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் சபையில் உரையாற்றியிருந்தார்.

இதன்போது பதிலளித்த உயர் கல்வியமைச்சர்; பாலியல் லஞ்சம் தொடர்பான குற்றச்சாட்டினை பொாத்தாம் பொதுவாக – தான் கூறவில்லை என்றும், குற்றம்சாட்டப்பட்டுள்ள விரிவுரையாளர் ஒருவரின் பெயரை மாத்திரம் குறிப்பிட்டே – தான் கூறியதாகவும் தெரிவித்திருந்தார்.

ஆயினும், நாடாளுமன்றில் உயர்கல்வி அமைச்சர் ஆற்றிய சர்ச்சைக்குரிய உரையினை, ஹன்சாட்டில் சிங்கள மொழியிலிருந்து பெற்றுப் பார்த்தபோது; ‘நான்  பொத்தாம் பொதுவாக அந்தக் குற்றச்சாட்டினை முன்வைக்கவில்லை’ என, அமைச்சர் தெரிவித்திருந்தமை பொய் என்பதை உறுதி செய்து கொள்ள முடிந்தது.

அந்த வகையில் அமைச்சர் ஆற்றிய உரையின் சர்ச்சைக்குரிய பகுதியினை ஹன்சாட்டிலிருந்து, சிங்களத்தை தமிழில் மொழிபெயர்த்து உங்களுக்கு வழங்குகின்றோம்.

“தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஒலுவில் வளாகத்தில் மாணவர்கள் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு இன்றுடன் 189 நாட்களாகின்றன. நேற்று முழுதுவதும் சிரமப்பட்டு உபவேந்தர், விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர் அணி என்று மூன்று தரப்பையும் இங்கே நாடாளுமன்றத்துக்கு அழைத்துப் பேசினோம்.

பல்கலைக்கலக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், ராஜங்க அமைச்சர் உட்பட நாங்கள் மேற்கூறியவர்களை இங்கே அழைத்து, அங்கே என்ன நடக்கிறது என்பதைப் பற்றிப் பார்த்தோம். அந்தப் பல்கலைக் கழகத்தின் நிலைப்பாடு பிரச்சினைகள் மிகுந்ததாக காணப்படுகிறது. இந்த சிக்கல்களுக்கு ஈடு கொடுக்க முடியாமல் சில மாணவர்கள் இடைநடுவில் விலகியும் சென்றிருக்கின்றனர்.

இந்தப் பல்கலைக்கழகத்தில் நீண்ட காலம் இப்படிப்பிரச்சினை இருப்பதால் மும்மொழி ஆற்றல் கொண்ட நேர்மையான – கௌரவமாக நடக்கக் கூடிய ஒரு உபவேந்தரை பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழு அங்கே அனுப்பியது. இருந்தாலும் அவருக்கு அங்கே கருமங்களை ஆற்றிச் செல்வது கடினமாகும். அந்தளவுக்கு மோசமான நிலை அங்கே உருவாகியுள்ளது.

இந்தப் பல்கலைக் கழகத்தைப் பற்றி விசேடமாகக் கதைப்பதற்கான காரணம் அங்கு மூவினத்தையும் சேர்ந்தவர்கள் கல்வி கற்கின்றனர். அங்கே மும்மொழிகளிலும் கற்பித்தல் இடம்பெறுகின்றது என்பதாலாகும்.

இங்கே சில பிரச்சினைகள் தொடர்ந்தும் இடம்பெற்றதால்தான், அவற்றை நிவர்த்தி செய்ய புதிதாக ஒரு உபவேந்தர் அங்கே அனுப்பப் பட்டார். இருந்தபோதும் அவரை அங்கே அதைச் செய்ய விடுகின்றார்களில்லை. காரணம் அந்தப் பல்கலைக் கழகத்தினுள்ளே ஒரு ‘மாபியா’ இருந்து செயற்பட்டுக் கொண்டிருக்கிறது.

சில பிள்ளைகள் எமக்கு அனுப்பி வைத்த கடிதங்களை வைத்து, தேவைப்பட்டளவுக்கு என்னால் ஆதாரம் காட்ட முடியும். சில மாணவர்கள் பெற்றோர்களுடன் நேரடியாக வந்து எம்மிடம் முறையிட்டுள்ளனர். சில விரிவுரையாளர்களுக்கு பாலியல் லஞ்சம் வழங்காமல் பரீட்சைகளில் சித்தியடைய முடியாத நிலை அங்கு காணப்படுகின்றது. இது தொடர்பாக நாங்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளோம்.

இந்தப் பல்கலைக் கழகத்தில் கடமையாற்றும் விரிவுரையாளர் ஒருவர் தொடர்பாக (விரிவுரையாளின் பெயரைக் குறிப்பிட்டு) எமக்கு தொடர்ச்சியாக முறைப்பாடுகள் வந்துகொண்டிருக்கின்றன. அவர் பிள்ளைகளிடம் நேரடியாகக் கூறிவிடுகின்றாராம். “பாலியல் லஞ்சம் தராவிட்டால் பரீட்சையில் சித்தியடைய முடியாது” என்று. இதுதான் இந்தப் பல்கலைக்கழகத்தின்இன்றைய நிலையாகும்”.

(ஹன்சாட் மொழிபெயர்ப்பு: ஜவ்ஸி அப்துல் ஜப்பார்)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்