தென்கிழக்குப் பல்கலைக்கழகம்: கதைகளும், கட்டுக் கதைகளும்

🕔 June 16, 2018

– ஏ.எச்.சித்தீக் காரியப்பர் –

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு தற்காலிகமாக புதிய உபவேந்தர் (அதிகாரம் வழங்கப்பட்ட அதிகாரி) நியமனம் தொடர்பில் மிகப் பிழையான, பாமரத்தனமான கருத்துகளை முகநூல்கள் உட்பட சமூக வலைத்தளங்களில் ஒரு சிலர் பதிவிடுகின்றமை வேதனையானது.

யதார்த்தத்துக்கும் நடைமுறைக்கும் புறம்பான தகவல்களை சிலர் வெளியிட்டு வருவது கவலை தருகிறது. இந்தப் பல்கலைக்கழகத்தின் அண்மைக்கால நிகழ்வுகள் தொடர்பில் உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ள அங்கு கற்கும் மாணவர்களை மேலும் பலவீனமடையச் செய்து, அவர்களின் கல்வியின்பாலான நோக்கத்தை சிதைத்து, திசை திருப்பி தேவையற்ற போராட்டங்களுக்கு தவறாக வழி நடத்துவதற்கான மூளைச்சலவை செய்யும் வகையில் சில பதிவுகள் காணப்படுகின்றன. இது வேதனையான விடயம்.

இரு தரப்பாருக்கிடையிலான முரண்பாடுகள் பல்கலைக்கழ கல்விச் சமூகத்தையே இன்று தலைகுனியச் செய்துள்ளது. இந்த நிலையில் அங்கு கற்கும் மாணவர்களின் இன்றைய ஓரளவான இயல்பு நிலைமைகளை மேலும் குழப்பி விட எவரும் முயற்சிக்கக் கூடாது.

வலிந்து ஏற்படுத்தப்படும் சந்தேகங்கள்

தென்கிழக்குப் பல்கலைக்கழகம் தொடர்பில் தற்போது நாட்டில் ஒரு தவறான கண்ணோட்டம் பெரும்பாலான தரப்பினரிடையே காணப்படுகின்றது. இது தொடர்பில் பலரும் தங்களது கவலையை வெளியிட்டுள்ளனர்.
இவ்வாறானதொரு நிலையில் தற்காலிகமான புதிய உபவேந்தர் தொடர்பில் சந்தேகங்களை வலிந்து ஏற்படுத்தி, எதிர்காலத்தில் சிங்களவர் ஒருவரே உபவேந்தராக நியமிக்கவும்படலாம் என்ற இட்டுக்கட்டுக்களும் முன்னெடுக்கப்படுகிறது.

இவ்வாறு தவறான பரப்புரைகளைச் செய்வோர் தென்கிழக்குப் பல்கலைக்கலைக்கழகத்தின் மீது உண்மையான அக்கறை கொண்டவர்களாக இருக்க முடியாது.

தங்களது தனிப்பட்ட விவகாரங்களை அல்லது, தங்களது அதிருப்தியை வேறு வழிகளில் வெளிப்படுத்தவே தற்காலிய உபவேந்தர் நியமன விவகாரத்தை கையில் எடுத்துள்ளனர். இது மிகத் தவறானது. சமூக அக்கறையற்ற இவ்வாறான கருத்துகளால் ஏதாவது விளைவுகள் ஏற்படுமாயின் அது பாரதூரமாக அமைந்து விடும்.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தற்காலிக உபவேந்தராக (Competent Authority) உமா குமாரசாமி நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறானதொரு நிலைமை ஏற்பட நாமே காரணமாகவிருந்து விட்டு இப்போது நாமே விமர்சிப்பது பிழையானது.

உமா குமாரசாமி எதற்காக வருகிறார்?

தற்போது உபவேந்தராகவுள்ள எம்.எம்.எம். நாஜிமுடைய சேவைக் காலம் இம்மாதம் 21 ஆம் திகதியுடன் முடிவடைகிறது. இருப்பினும்இ மூன்று தினங்கள் முன்பாகவே அதாவது 18ஆம் திகதியுடன் அவரது சேவைக் காலம் முடிவுறுத்தப்பட்டுள்ளது. எனவேதான் தற்காலிகமாக உமா குமாரசாமி உபவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தென்கிழக்குப் பல்கலைக்கழக உப வேந்தர் தொடர்பில் உள்ளக ரீதியாக பலர் பகிரங்கமாகவும் அமைச்சு மட்டத்திலும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர். இதனை அடுத்து எழுந்த நிலைமைகள் தொடர்பில் தற்காலிக உபவேந்தராகவிருந்து ஆராய்ந்து அறிக்கை ஒன்றை சமர்ப்பிப்பதற்காகவே உமா குமாரசாமி நியமிக்கப்பட்டுள்ளதாக அறியக் கிடைக்கிறது. அதுவும் மிகக் குறுகிய கால எல்லையைக் கொண்டதாகவே அவரது பணிக்காலம் அமையும்.

இது தவிர அவரே நிரந்த உபவேந்தராக அல்லது அதன் பின்னர் ஒரு சிங்களவர் உபவேந்தராக நியமிக்கப்படுவார் எனக் கூறப்படுவதென்லாம் உண்மைக்கும் நடைமுறைக்கும் புறம்பானது. இவ்வாறான இன ரீதியான சிந்தனைகள் விதைக்கப்படுவது மிகத் தவறான விடயம்.

இந்த விடயத்தை இன ரீதியான செயற்பாடாக வெளிக்காட்டி எதிர்ப்புகளை முன்னெடுத்தால் நிலைமைகள் மோசமடைந்து இன்று இட்டுக் கட்டப்பட்ட விடயங்களே நடந்து விடுமோ என்கிற அச்சமும் உள்ளது. அமைச்சர்களான தயா கமகேயும் விஜயதாஸ ராஷபக்க்ஷவும் கடுங்கோட்பாடுகளைக் கொண்ட சிங்கள பௌத்தர்கள். அவர்களைச் சீண்டி வம்புக்கு இழுத்தால் அதற்கான விலையை நாங்களே கொடுக்க வேண்டும். ஆனால், அவர்களிடமே இன்று நாங்கள் பிடியைக் கொடுத்துள்ளோம் என்ற விடயத்தையும் மறந்து விடமுடியாது.

உபவேந்தர் தெரிவும், நடைமுறைகளும்

பல்கலைக்கழகான்றுக்கு உபவேந்தர் ஒருவரைத் தெரிவு செய்வது என்பது வித்தியாசமான நடைமுறைகளைக் கொண்டது. வெளியிலிருந்து ஒருவரைக் கொண்டு வந்து திணிக்க முடியாது.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு ஒரு உபவேந்தரை நியமிக்க வேண்டுமாயின் ஏனைய பல்கலைக்கழங்கள் போன்று வாக்கெடுப்பு நடத்த வேண்டும். தென்கிழக்குப் பல்கலையில் 06 பீடாதிபதிகள் (Deans), 02 மூதவை (Senate) உறுப்பினர்கள், உபவேந்தர், இதற்கு மேலதிகமாக 10 வெளிவாரி அங்கத்தினர்கள் (External Members) ஆகியோர், உப வேந்தர் பதவிக்கு போட்டியிடும் நபர்களுக்கு வாக்களித்து, அவர்களில் அதி கூடிய வாக்குகளைப் பெற்ற முதல் மூன்று நபர்களின் பெயர்களைப் பல்கைலக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்ப வேண்டும்.

அதன் பின்னர் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு குறித்த அந்த மூவரின் பெயர்களையும் நாட்டின் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கும். அவ்வாறு அனுப்பி வைக்கப்படும் மூவரில் ஒருவர் ஜனாதிபதியின் விருப்பத்தின் பேரில் தெரிவு செய்யப்படுவார். இதுவே நடைமுறையாகும்.

மேற்படி மூவரில் ஒருவரை ஜனாதிபதி தெரிவு  செய்வதிலும் ஒரு திருத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது. அதாவது குறித்த மூவரில் அதிக வாக்குகளைப் பெற்ற முலாவது நபரையே ஜனாதிபதி நியமிப்பார் என்றும் கூறப்படுகிறது. இது புதிய நடைமுறையாகும்.

குழப்பம் கூடாது

எது எப்படியிருப்பினும், தேர்தல் ஒன்றின் மூலம் மட்டுமே உப வேந்தர் ஒருவர் தெரிவு செய்யப்படுவார் என்பதே நடைமுறையாகும். இவ்வாறனதொரு நிலைமையில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தைப் பொறுத்த வரையில் பிற ஒரு சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் எவ்வாறு உப வேந்தராக வர முடியும்? அவ்வாறு தப்பித் தவறி வந்தாலும் அது எமது பிரிவினைகளின் விளைவாகவே அமையும்.

உண்மை நிலைமைகள் இப்படியிருக்க, நடைமுறைக்கும் யதார்த்தத்துக்கும் புறம்பான தகவல்களையும் சந்தேகங்களையும் வெளிட்டு குழப்பங்களை ஏற்படுத்தக் கூடாது.

தற்போதுள்ள உபவேந்தர் நாஜிமுக்கு மீண்டும் சந்தர்ப்பம் வழங்கக் கூடாது என்று வலியுறுத்தப்பட்டதனை அடுத்தே, அதன் பின்னரான இற்றைவரையான நிலைமைகள் தோன்றியுள்ளன. இந்த நிலையில் அதுவும் வேண்டாம், இதுவும் வேண்டாம் என்றால் எதுவும் இல்லாத நிலைமைக்கு மாறிவிடுவோம்.

மேலும், ‘தொலைந்தார் நாஜிம் – இனி நமக்கு எந்த தொந்தரவும் இல்லை. யார் வந்தாலும் இனி பரவாயில்லை’ என்று சிந்திப்பதும்; ‘எமக்கு விருப்பமானவர் போய் விட்டார் இனி எவர் வந்தாலும் எதிர்ப்போம்’ என கங்கணம் கட்டி – நாஜிம் அணியினர் செயற்படுவதும் மிகத் தவறானதாகவே அமையும்.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அழிவுக்கு நாங்களே காரணமானவர்களாக தொடர்ந்தும் செயற்பட்டால், எங்களது தலையெழுத்துகளை நாங்களே மிக மோசமாக எழுதிக் கொண்டவர்களாக ஆகி விடுவோம்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்