அமெரிக்க, வடகொரிய தலைவர்கள் சந்திப்பு: ஒப்பந்தமும் கைச்சாத்து

🕔 June 12, 2018

மெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் ஆகியொருக்கு இடையிலான வரலாற்று சிறப்புமிக்க உச்சிமாநாடு சிங்கப்பூரில் உள்ள சென்டோசா தீவில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது.

இது தொடர்பாக இருநாட்டு தலைவர்களும் கூட்டறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளனர்.

அதில், அமெரிக்கா – கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு ஆகிய இரு நாடுகளுக்கு இடையே புதிய உறவை ஏற்படுத்தவும், கொரிய தீபகற்பத்தில் நிலையான, அமைதியான ஆட்சியை நிலைநாட்டவும், இருநாட்டு தலைவர்களுக்கும் இடையே விரிவான, ஆழமான கருத்து பரிமாற்றங்கள் நடத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

இந்த உச்சிமாநாட்டில் கையெழுத்தான ஒப்பந்தத்தில் உள்ள நான்கு முக்கிய பிரகடனங்களையும் வெள்ளை மாளிகையின் கூட்டறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

01) அமெரிக்கா மற்றும் கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு ஆகிய இரு நாடுகளும், இரு நாட்டு மக்களின் அமைதி மற்றும் வளர்ச்சிக்காக புதிய உறவுகளை தொடங்கும்.

02) கொரிய தீபகற்பத்தில் அமைதியான மற்றும் நிலையான ஆட்சி அமைய இரு நாடுகளும் இணைந்து முயற்சிகளை எடுக்கும்.

03) ஏப்ரல் 27, 2018ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட பன்முன்ஜம் பிரகடனத்தை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதங்கள் அற்ற பகுதியாக்க கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு ஒப்புக்கொண்டுள்ளது.

04) அடையாளம் காணப்பட்டுள்ள போர் கைதிகளை மீட்டு, உடனடியாக அவர்கள் நாட்டுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அமெரிக்கா மற்றும் கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு ஆகிய நாடுகள் ஒப்பந்தம் செய்துள்ளன

இரு நாட்டுத் தலைவர்களின் சந்திப்பு  வீடியோ

Comments

புதிது பேஸ்புக் பக்கம்