பாலியல் லஞ்சம்; உயர்கல்வி அமைச்சரின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கவும்: உபவேந்தருக்கு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்

🕔 June 11, 2018

– மப்றூக் –

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் கல்வித்துறை சார்ந்தோர், பாலியல் லஞ்சம் கோருவதாக நாடாளுமன்றத்தில் உயர் கல்வி அமைச்சர் கூறிய பொதுமைப்படுத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில், உத்தியோகபூர்வ அறிக்கையொன்றினை வெளியிடுமாறு, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தருக்கு அந்த பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தருக்கு விலாசமிட்டு, இன்று 11ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ள எழுத்து மூல கடிதமொன்றிலேயே, இந்தக் கோரிக்கையினை ஆசிரியர் சங்கம் விடுத்துள்ளது.

குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் கல்வித்துறை சார்ந்தோர், பாலியல் லஞ்சம் கோருவதாக, கடந்த 08ஆம் திகதி நாடாளுமன்றில் உயர்கல்வி மற்றும் கலாசார அமைச்சர் குற்றச்சாட்டு ஒன்றினை முன்வைத்திருந்தார்.

இந்தக் குற்றச்சாட்டானது தென்கிழக்கு பல்கலைக்கழக நிருவாகம் மற்றும் மாணவர்களின் நற்பெருக்கு பாரிய குந்தகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, பல்கலைக்கழகம் பற்றிய எண்ணப்பாட்டில் தேசிய ரீதியாக களங்கத்தினை ஏற்படுத்தியுள்ள – அமைச்சரின் பொதுமைப்படுத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையிலும், பல்கலைக்கழகத்தின் கண்ணியத்தைப் பாதுகாக்கும் வகையிலும், தென்கிழக்குப் பல்லைக்கழகம் பதிலிறுக்க வேண்டுமென நாம் விரும்புகிறோம்.

அந்தவகையில், உயர்கல்வி அமைச்சரின் பொதுமைப்படுத்தப்பட்ட மேற்படி குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில், உத்தியோகபூர்வ அறிக்கையொன்றினை வெளியிடுமாறு உங்களைக் கேட்டுக் கொள்கிறோம்.

Comments