விஜேதாஸவின் கூற்று, அரசியல் அயோக்கியத்தனத்தின் வெளிப்பாடாகும்: நஸார் ஹாஜி

🕔 June 10, 2018

– அஹமட் –

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பாலியல் லஞ்சம் வழங்காமல் அங்குள்ள மாணவிகள் சில பாடங்களில் சித்தியடைய முடியாது என்று, உயர் கல்வி அமைச்சர் விஜேதாஸ ராஷபக்ஷ கூறியமை அரசியல் அயோக்கியத்தனத்தின் வெளிப்பாடாகும் என்று ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் பிரதித் தலைவர் நஸார் ஹாஜி தெரிவித்துள்ளார்.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்திலுள்ள சில விரிவுரையாளர்களுக்கு அங்குள்ள மாணவிகள் பாலியல் லஞ்சம் கொடுக்காமல், சில பாடங்களில் சித்தியடைய முடியாது என்று, கடந்த வெள்ளிக்கிழமை உயர்கல்வி அமைச்சர் நாடாளுமன்றில்உரையாற்றும் போது தெரிவித்திருந்தார்.

அமைச்சரின் அந்த உரைகுறித்து,  ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் பிரதித் தலைவர் நஸார் ஹாஜியார் கருத்துத் தெரிவிக்கும் போதே, மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

“ஒரு பல்கலைக்கழகத்தின் ஒட்டு மொத்த மாணவியர்களையும் களங்கப்படுத்தும் வகையில், பொறுப்புவாய்ந்த ஓர் அமைச்சர் இவ்வாறு கூற முடியாது.

அமைச்சர் இவ்வாறு கூறியமைக்குப் பின்னணியில் அயோக்கியத்தனமான அரசியல் நிகழ்ச்சி நிரலொன்று இருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

மேலும், அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ முஸ்லிம் விரோத மனநிலையினைக் கொண்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ள ஒருவராவார். கடந்த காலத்தில் ஞானசார தேரரை பொலிஸாரிடம் அகப்படாமல், இவர் மறைத்து வைத்திருந்தாகவும் கதையொன்று உள்ளது.

இவ்வாறான ஒருவர், முஸ்லிம்கள் பெரும்பான்மையாகக் கல்வி கற்கும் ஒரு பல்கலைக்கழகம் குறித்து இவ்வாறு அவதூறு கூறியுள்ளமையை, இனவெறுப்புப் பேச்சாகவே பார்க்க வேண்டியுள்ளது.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் யாராவது விரிவுரையாளர்கள் அவ்வாறு பாலியல் லஞ்சம் கோரியிருந்தால், அது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டியதுதான் உயர் கல்வி அமைச்சர் ஒருவரின் பணியாகும். அதை விடுத்து, நாட்டின் உயர் சபையொன்றில், ஒட்டு மொத்த பல்கலைக்கழகத்தையும் இழிவுபடுத்தும் வகையில் அமைச்சர் பேசியமையானது அறிவிலித்தனமானதாகும்.

எனவே, தென்கிழக்கு பல்கலைக்கழகத்தை இழிவுபடுத்தும் வகையிலும், அங்குள்ள எமது மாணவியருக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையிலும் பேசிய அமைச்சர், தனது அறிவிலித்தனமான உரை குறித்து மன்னிப்புக் கோர வேண்டும்.

அல்லாது விட்டால், அமைச்சரின் இந்த அரசியல் அயோக்கியத்தனத்துக்கு எதிராக முஸ்லிம் மக்கள் திரண்டெழுந்து தமது கண்டனத்தை வெளிப்படுத்துவார்கள்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்